Published : 27 May 2017 10:37 AM
Last Updated : 27 May 2017 10:37 AM

தமிழக அரசுக்கு மத்திய அரசு நேசக்கரம்: அமைச்சர் ஆர்.பி.உதயகுமார் பெருமிதம்

தமிழக அரசுக்கு தொடர்ந்து உதவி செய்து மத்திய அரசு நேசக்கரம் நீட்டி வருகிறது என மாநில வருவாய்த் துறை அமைச்சர் ஆர்.பி.உதயகுமார் தெரிவித்தார்.

திருச்சியில் அவர் செய்தியாளர்களிடம் நேற்று கூறியதாவது:

தமிழ்நாட்டில் 140 ஆண்டுகால வரலாற்றில் இல்லாத அளவு வறட்சி ஏற்பட்டுள்ளது. இதனால், பாதிக்கப்பட்ட 32 லட்சம் விவசாயிகளுக்கு ரூ.2,247 கோடி வறட்சி இடுபொருள் நிவாரணத் தொகையாக வழங்கப்பட்டுள்ளது. இதை விவசாயிகளிடம் 100 சதவீதம் கொண்டுசேர்த்துள்ளோம்.

அதேபோல, கடந்த ஆண்டில் பயிர்க் காப்பீடு மூலமாக இழப்பீடாக ரூ.410 கோடி அறிவிக்கப்பட்டது. தற்போது அந்த தொகையை ரூ.522 கோடியாக வழங்கியுள்ளோம். இதன்மூலம் விவசாயிகளுக்கு ரூ.8 ஆயிரம் முதல் ரூ.50 ஆயிரம் வரை இழப்பீடு கிடைக்க வாய்ப்பு உள்ளது.

வறட்சியை சமாளிக்கும் வகையில் குடிநீருக்காக முதல்கட்டமாக ரூ.105 கோடியும், இரண்டாம் கட்டமாக ரூ.100 கோடியும் பேரிடர் நிவாரண நிதியில் இருந்து அளிக்கப்பட்டுள்ளது. அதேபோல, குடிமராமத்து பணிகளுக்காக முதல்கட்டமாக ரூ.100 கோடியும், இரண்டாவது கட்டமாக ரூ.300 கோடியும் அளிக்கப்பட்டுள்ளது. மேலும், 100 சதவீத நிலவரி தள்ளுபடி, மானிய விலையில் கால்நடை தீவனம் போன்ற திட்டங்களும் செயல்படுத்தப்பட்டு வருகின்றன. இப்பணிகளை மாவட்டவாரியாக ஆய்வு செய்து வருகிறோம்.

முதல்வர் பழனிசாமி தலைமையிலான அரசு 100 நாட்களை வெற்றிகரமாக கடந்துள்ளது. நிலையான, உறுதியான, நிரந்தர வளர்ச்சியை கொடுக்கும் அரசாக தற்போதைய தமிழக அரசு செயல்பட்டுக்கொண்டு இருக்கிறது.

மாநில அரசின் திட்டங்களுக்கு மத்திய அரசு முழு ஒத்துழைப்பு அளித்து வருகிறது. அண்மையில், வறட்சி நிவாரணம் வழங்கப்பட்ட 10 மாநிலங்களில் அதிகபட்சமாக ரூ.1,478 கோடி தமிழகத்துக்குக் கிடைத்துள்ளது. தமிழக அமைச்சர்கள், அனைத்துத் துறைகளைச் சார்ந்த மத்திய அமைச்சர்களைச் சந்தித்து கோரிக்கைகள் குறித்து மனு அளித்து வருகிறோம். அதன்படி, 4 நாட்களுக்கு முன்புகூட மின்துறைக்கு மத்திய அரசு நிதி ஒதுக்கீடு செய்துள்ளது. மாநில அரசுக்கு, மத்திய அரசு தொடர்ந்து உதவி செய்து, நேசக்கரம் நீட்டி வருகிறது என்றார்.

மாநில அரசின் திட்டங்களுக்கு மத்திய அரசு முழு ஒத்துழைப்பு அளித்து வருகிறது. அண்மையில், வறட்சி நிவாரணம் வழங்கப்பட்ட 10 மாநிலங்களில் அதிகபட்சமாக ரூ.1,478 கோடி தமிழகத்துக்குக் கிடைத்துள்ளது.

FOLLOW US

Sign up to receive our newsletter in your inbox every day!

WRITE A COMMENT
 
x