Published : 04 Feb 2023 11:16 PM
Last Updated : 04 Feb 2023 11:16 PM
புதுச்சேரி: புதுச்சேரி காங்கிரஸ் கட்சி சார்பில் கையோடு கை கோர்ப்போம் என்ற மக்களை சந்திக்கும் ஒற்றுமை நடைபயணம் முத்தியால்பேட்டை தொகுதியில் இன்று மேற்கொள்ளப்பட்டது. இதில் முன்னாள் முதல்வர் நாராயணசாமி கலந்து கொண்டார்.
பின்னர் அவர் செய்தியாளர்களிடம் கூறியதாவது: பாஜக மதத்தின் பெயராலும், இனத்தின் பெயராலும் மக்களை பிரித்து ஆளுங்கின்ற வேலையை பார்க்கிறது. சிறுபான்மையின மக்களுக்கு பாதுகாப்பு இல்லை. பணவீக்கம், வேலையில்லா திண்டாட்டம் அதிகரித்திருக்கிறது. அத்தியாவசிய பொருட்களின் விலை உயர்ந்துள்ளது.
இதை பற்றி எல்லாம் மோடி அரசு கவலைப்படாமலும், மக்களுக்கு எந்த அடிப்படை வசதியும் செய்து கொடுக்காமலும் மக்களை பிரித்தாளுகின்ற வேலையை செய்கின்றது. எனவே இந்திய மக்களை ஒருங்கிணைப்போம் என்ற கோஷத்தை முன்வைத்து ராகுல் காந்தி கன்னியாகுமாரியில் இருந்து 13 மாநிலங்கள் வழியாக ஸ்ரீநகர் வரை 4 ஆயிரம் கி.மீ. தூரம் பாதை யாத்திரை மேற்கொண்டார்.
நாட்டை துண்டாடுகின்ற வேலையில் பாஜகவும், ஆர்எஸ்எஸ் இணைந்து செயல்படுகின்றன. அதை முறியடிக்க வேண்டும் என்பதே ராகுல் காந்தியின் நோக்கம். மத்திய பாஜக ஆட்சியானது பெரிய தொழிற்சாலை அதிபர்களுக்கு மட்டும்தான் இருக்கிறது. ஏழை எளிய மக்களுக்கு இல்லை.
இந்திய நாட்டில் 48 சதவீத மக்கள் வறுமைக்கோட்டுக்கு கீழ் உள்ளனர். அவர்களுக்கு எந்த திட்டத்தையும் கொடுக்கவில்லை. இதையெல்லாம் முன்வைத்து தான் ராகுல் காந்தி பாதை யாத்திரை சென்றார். அவர் ஸ்ரீநகருக்கு சென்ற போது, காவல்துறையினர் தடுத்து நிறுத்தி உயிருக்கு பாதுகாப்பு இல்லை, வாகனத்தில் தான் செல்ல வேண்டும் என்று கூறினார்கள்.
அதை பற்றி கவலையில்லை. ஜம்மு காஷ்மீர் மக்கள் தன்னை விரும்புகிறார்கள் என்று கூறி 4 நாட்கள் நடந்து சென்று ஸ்ரீநகரை அடைந்தார். இது வரலாற்று முக்கியத்துவம் வாய்ந்த நடைபயணம். அதை பிரதிபலிக்கின்ற வகையில் புதுச்சேரியில் அனைத்து சட்டப்பேரவை தொகுதிகளிலும், எல்லா வட்டார காங்கிரஸ் கமிட்டியும் பாதை யாத்திரையை ஆரம்பித்துள்ளோம்.
மத்தியில் உள்ள மோடி ஆட்சியின் அலங்கோலங்கள், புதுச்சேரியில் என்.ஆர். காங்கிரஸ் - பாஜக கூட்டணி ஆட்சியில் நடைபெறுகிற ஊழல்கள், மக்கள் நலத்திட்டங்கள் புறக்கணிக்கப்படுவது, புதுச்சேரி மாநிலம் பின்நோக்கி செல்வது, சட்டம் ஒழுங்கு கெட்டுள்ளது, மக்களுக்கு பாதுகாப்பு இல்லை, கொலை, கொள்ளை, கஞ்சா விற்பனை மலிந்துவிட்டது.
இதை பற்றியும், புதுச்சேரி மக்களை காக்கின்ற சக்தி காங்கிரஸ் கட்சிக்கு மட்டும்தான் உண்டு என்று சொல்வதற்காகவும் பாதை யாத்திரை சென்று கொண்டிருக்கிறோம். இந்த பாதை யாத்திரை பிப்ரவரி மாதம் தொடங்கி மார்ச் மாதம் இறுதி வரை நடைபெறும்" என்றார்.
Sign up to receive our newsletter in your inbox every day!
WRITE A COMMENT