Published : 04 Feb 2023 07:45 PM
Last Updated : 04 Feb 2023 07:45 PM
திருவாரூர்: "2026-இல் தமிழகத்தில் பாமக தலைமையில் கூட்டணி ஆட்சி அமைப்பதை இலக்காகக் கொண்டு இயங்கி வருகிறோம். அதற்கான முயற்சியை 2024 நாடாளுமன்ற தேர்தலிலேயே தொடங்கி விடுவோம்" என்று அக்கட்சியின் தலைவர் அன்புமணி ராமதாஸ் கூறியுள்ளார்.
திருவாரூர் மாவட்டத்தில் மழையால் பாதிக்கப்பட்ட சம்பா பயிர்களை பாமக தலைவர் அன்புமணி ராமதாஸ் சனிக்கிழமை பார்வையிட்டார். பின்னர் செய்தியாளர்களிடம் பேசிய அவர், "திமுக தனது தேர்தல் அறிக்கையில் மதுக்கடைகள் மூடப்படும் என தெரிவித்திருந்தது. ஆனால் ஒரு கடைகூட மூடப்படவில்லை. சமீபத்தில் குடியரசு தின விழாவில் ஐந்து காவல்துறை அதிகாரிகளுக்கு கள்ளச்சாராயத்தை கட்டுப்படுத்தியதற்காக விருது வழங்கி முதல்வர் பாராட்டினார். ஆனால், கரூர் மாவட்ட ஆட்சியர் டாஸ்மாக் மதுபான கடையில் விற்பனையில் சாதனை படைத்ததாக கூறி மூன்று ஊழியர்களுக்கு சான்றிதழ் வழங்கினார்.
எனவே, தமிழக முதல்வர், மது ஒழிப்பு விஷயத்தில் திமுகவின் நிலைப்பாடு என்ன என்பதை தெளிவுபடுத்த வேண்டும்.தமிழகத்தில் பள்ளி கல்லூரிகளுக்கு அருகாமையில் போதை பொருட்கள் விற்பனை அதிகரித்துள்ளது அதனை கட்டுப்படுத்த வேண்டும்.
திமுக தலைவர் கருணாநிதி மதிக்கப்பட வேண்டிய தலைவர். அவர் இறந்தபோது மெரினாவில் அவரது உடல் அடக்கம் பேரறிஞர் அண்ணாவின் நினைவிடத்துக்கு அருகில் அடக்கம் செய்யப்பட வேண்டும் என்பது அவரது விருப்பமாக இருந்தது. அவ்வாறு உடல் அடக்கம் செய்வதற்கு அப்போது திமுகவினர் முயற்சித்த போது, பாமக சார்பில் உயர் நீதிமன்றத்தில் ஏற்கெனவே தொடுக்கப்பட்டிருந்த வழக்கு தடையாக உள்ளது என, எங்களது வழக்கறிஞர் மூலம் நாங்கள் அறிந்து உடனடியாக அந்த வழக்கை வாபஸ் பெற செய்ததன் விளைவாகத்தான் மெரினாவில் கருணாநிதியின் உடல் அடக்கம் செய்யப்பட்டது.
தற்போது கடலில் பேனா நினைவுச் சின்னம் வைக்க வேண்டும் என தமிழக அரசும் திமுகவும் முயற்சி எடுத்து வருகிறது. இது சூழலியல் சார்ந்த பிரச்சினை. இன்று இதை அனுமதித்தால் மற்ற கட்சியினரும் அமைப்பினரும் தங்களுக்கும் கடலில் உரிமை உள்ளதாக கூறி தங்களது நினைவுச் சின்னத்தை அமைக்க முற்படுவார்கள். அதற்கெல்லாம் இது ஒரு முன்னுதாரணமாக அமைந்து விடும்.
எனவே, பேனா நினைவுச் சின்னத்தை தற்போது அவருக்கு அமைக்கப்பட்டுள்ள நினைவிடத்திலேயே நிறுவ வேண்டும் என்றார். இதற்கான கருத்துக்கணிப்பு கூட்டத்தில் சீமான் நடந்து கொண்ட விதம் குறித்து நான் ஏதும் கருத்து தெரிவிக்க முடியாது” என தெரிவித்தார்.
“பாட்டாளி மக்கள் கட்சியை பொறுத்தவரை 2026-இல் தமிழகத்தில் பாமக தலைமையில் கூட்டணி ஆட்சி அமைப்பதை இலக்காகக் கொண்டு இயங்கி வருகிறோம். அதற்கான முயற்சியை 2024 நாடாளுமன்ற தேர்தலிலேயே தொடங்கி விடுவோம். இன்னும் நாடாளுமன்ற தேர்தலுக்கு ஒன்றரை ஆண்டு காலம் உள்ளதால் அதற்குரிய வியூகங்கள் நோக்கி பாமக பயணிக்கும்" என்று அவர் கூறினார்.
Sign up to receive our newsletter in your inbox every day!
WRITE A COMMENT