Published : 10 May 2017 09:39 AM
Last Updated : 10 May 2017 09:39 AM
தமிழகம் முழுவதும் மே 17 முதல் அனைத்து மாவட்டங்களிலும் தாலுகா வாரியாக ஜமாபந்தி நடைபெறவுள்ளது.
ஜமாபந்தி எனப்படும் வருவாய்த் தீர்வாயம் இந்த ஆண்டு 17-ம் தேதி முதல் அனைத்து மாவட்டங்களிலும் தாலுகா வாரியாக ஜமாபந்தி நடைபெறவுள்ளது. இதில் துணை ஆட்சியர் அந்தஸ்தில் உள்ள ஒரு அதிகாரி தலைமையில் கூட்டம் நடைபெறும்.
ஜமாபந்திக்கான வட்டவாரியாக மற்றும் கிராம வாரியாக நிகழ்ச்சி நிரல் தயார் செய்யப்பட்டு மாவட்ட ஆட்சியரின் ஒப்புதலுடன் மாவட்ட அரசிதழில் விளம்பரம் செய்யப்படும். இதில், பொதுமக்கள் மனுக்கள் அளிக்
கலாம். மேலும், கிராம நிர்வாக அதிகாரிகளால் பராமரிக்கப்படும் கிராம கணக்குகள் ஜமாபந்தி நிறைவு அன்று சரிபார்க்கப்படும். இது குறித்து வருவாய்த்துறை அதிகாரி ஒருவர் கூறியதாவது:
ஜமாபந்தியில் பொதுமக்களிடம் மனுக்கள் பெறப்பட்டு 30 நாட்களுக்குள் தீர்வு காணப்படும். தீர்வு ஏற்படவில்லை எனில் அதற்கான விளக்கம் சம்பந்தப்பட்ட மனுதாரர் களுக்கு தெரிவிக்கப்படும்.
ஜூலை மாதம் முதல் தொடங்கி அடுத்த ஆண்டு ஜூன் 30-ஆம் தேதி வரை உள்ள வருவாய்த் துறையின் காலம் பசலி ஆண்டு எனப்படும். அக்பர் காலத்தில் நிலவரி பணத்தைப் பிரித்து பார்ப்பதற்கு பசலி ஆண்டு என்ற ஒரு கணக்கு ஆண்டு தோன்றியது. இது வட இந்தியாவில் மட்டுமே இருந்தது. பின்பு ஆட்சிக்கு வந்த ஷாஜஹான் ஆட்சிக் காலத்தில் தென் இந்தியாவிலும் ஏற்படுத்தப்பட்டது. பசலி ஆண்டு முன்காலத்தில் ஆடி மாதம் ஒன்றாம் தேதி முதல் தொடங்கியது. பிறகு ஆங்கிலேயர் ஆட்சிக்காலத்தில் இது ஜூலை 1-ஆம் தேதி மாற்றப்பட்டது. தற்போது வரை இதுவே பின்பற்றப்பட்டு வருகிறது.
அரசுக்குச் சொந்தமான நிலங்களில் நிலவரி, புறம்போக்கு நில ஆக்ரமணத் தீர்வை, அபராதம் மற்றும் உள்ளூர் வரிகள் மரத்தீர்வை ஆகியவை முறையாக கணக்கிடப்பட்டு, கிராம கணக்குகள் தயார் செய்யப்பட்டுள்ளனவா என்பதையும் பொருளாதார வளர்ச்சிக்கும் புள்ளி விவரங்கள் தக்கமுறையில் தரப்பட்டுள்ளனவா என்பதையும் சரிபார்க்கும் நோக்கத்துடன் நடத்தப்படும் ஆய்வு வருவாய்த் தீர்வாயம் ஆகும் என்றார்.
Sign up to receive our newsletter in your inbox every day!
WRITE A COMMENT