Published : 04 Feb 2023 06:21 AM
Last Updated : 04 Feb 2023 06:21 AM

சூளகிரி அருகே நடந்த வன்முறைக்கு அண்டை மாநில இளைஞர்கள் மாடுகளுடன் வந்ததே காரணம்: கிருஷ்ணகிரி எஸ்.பி. விளக்கம்

கிருஷ்ணகிரி: சூளகிரி அருகே நடந்த வன்முறைக்கு அண்டை மாநில இளைஞர்கள் மாடுகளுடன் வந்ததே காரணம் என்று கிருஷ்ணகிரி மாவட்ட காவல் கண்காணிப்பாளர் சரோஜ்குமார் தாகூர் தெரிவித்தார்.

இதுகுறித்து கிருஷ்ணகிரியில் அவர்செய்தியாளர்களிடம் நேற்று கூறியதாவது: சூளகிரி அருகே கோபசந்திரம் கிராமத்தில் நடந்த எருது விடும் விழாவில் அரசின் கவனக்குறைவோ, மாவட்ட நிர்வாகத்தின் குளறுபடியோ இல்லை. விழா நடத்துபவர்கள், உரிய சான்றிதழை அளிக்கத் தாமதமானதால் இளைஞர்கள் பிரச்சினையில் ஈடுபட்டனர். உள்ளூர் பொதுமக்கள் யாரும் பிரச்சினையில் ஈடுபடவில்லை.

பொதுவாக எருதுவிடும் விழா உள்ளூர் மாடுகளைக் கொண்டே நடத்த வேண்டும் என்பது விதி. ஆனால், விதிகளுக்கு மாறாக அண்டை மாநில இளைஞர்கள், தங்கள் மாடுகளுடன் வந்தனர். அவர்கள் எருது விடும் விழா நடத்த தாமதமானதாகக் கூறி, சாலையில் மறியல் செய்தும், தடுக்கச் சென்ற போலீஸாரை தாக்கியும், பெண் போலீஸாரிடம் அத்துமீறியும் நடந்தனர்.

அரசு உடைமைகள் சேதம்: கலவரத்தை தவிர்க்கவே, வன்முறையில் ஈடுபட்ட இளைஞர்களை பிடித்து, போலீஸார் அமர வைத்தனர். அப்போது நடந்த நிகழ்வைத்தான் சிலர் எஸ்.பி. லத்தியால் அடிக்கிறார். பூட்ஸ் காலால் மிதிக்கிறார் என சமூக வலைதளத்தில் வீடியோக்களை பதிவிட்டு வருகின்றனர்.

உண்மையிலேயே அங்கு என்ன நடந்தது என்று, அங்கிருந்த போலீஸார், உள்ளூர் மக்கள், செய்தியாளர்களுக்குத் தெரியும். மேலும், சாலைமறியல், வன்முறையில் ஈடுபட்டவர்களின் தாக்குதலில், அரசுஉடைமைகள் சேதமாகின, போலீஸாருக்கு காயம் ஏற்பட்டது. ஆனால் பொது மக்கள் யாரும் காயம் அடையவில்லை.

கடும் நடவடிக்கை: வன்முறைக்கு காரணமானவர்கள் யார் என்று ஆய்வு செய்து வருகிறோம். சம்பந்தப்பட்ட அனைவரும் கைது செய்யப்படுவார்கள். உளவுத்துறை தோல்வியடைந்துள்ளது என்பதை ஏற்கமுடியாது. 4 ஆயிரத்திற்கும் மேற்பட்டோர் கூடிய இடத்தில், 200 போலீஸார் நிலைமையைக் கட்டுக்குள் கொண்டுவந்தது பாராட்டத்தக்கது.

எருது விடும் விழா நடத்துபவர்கள், விழாவுக்கு முந்தைய நாளே அனைத்து சான்றிதழ்களையும் தயார் நிலையில் வைக்க வேண்டும். முறையாக பெறும் சான்றிதழ்களின் விவரங்களை போலீஸாருக்குத் தெரியப்படுத்த வேண்டும். அப்போதுதான் பிரச்சினை ஏற்படாமல் தவிர்க்க முடியும். எ

ருது விடும் விழாவில் வெளிமாநில மாடுகளை பங்கேற்க அழைத்து வருபவர்கள் மீது கடும் நடவடிக்கை மேற்கொள்ளப்படும். இனி வெளிமாவட்ட, அண்டை மாநில மக்கள்,தங்களின் மாடுகளுடன் இங்கு வரக்கூடாது. இவ்வாறு அவர் தெரிவித்தார்.

FOLLOW US

தவறவிடாதீர்!

Sign up to receive our newsletter in your inbox every day!

WRITE A COMMENT
 
x