Published : 04 Feb 2023 06:28 AM
Last Updated : 04 Feb 2023 06:28 AM
சென்னை: சென்னையில் பல்வேறு துறை சார்ந்த பிரதிநிதிகளுடன் பாஜக தேசிய பொதுச் செயலாளர் வினோத் தாவ்டே நேற்று கலந்துரையாடினார். அப்போது, அவர் கூறியதாவது:
பாஜக அரசு மீது எந்த ஊழல்குற்றச்சாட்டும் இல்லை. இது தேசியக்கட்சி. ஒரு சில மாதங்களில் ‘இது நம்கட்சி’ என தமிழர்கள் எண்ணும் வகையில் பணியாற்றுவோம். வரும் காலங்களில் என்ன வேண்டுமானாலும் நடக்கலாம். அதற்கு நாம் தயாராக இருக்க வேண்டும்.
மத்திய அரசின் திட்டங்களை மாநில அரசு பெயர் மாற்றிக் கொள்கிறது. பயனாளிகளை பாஜகவினர் நேரில் சந்தித்து மத்திய அரசின் திட்டங்களை தெரிவிக்க வேண்டும். சிபிஎஸ்இ, ஐசிஎஸ்இ என எந்த கல்வி வாரியமாக இருந்தாலும், 10-ம் வகுப்பு வரை கட்டாயம் தமிழ் கற்க மாநில அரசை தமிழக பாஜக வலியுறுத்த வேண்டும்.
அதேபோல, தமிழகத்துக்கு மத்திய அரசு வழங்கும் நிதியும் ரூ.35 ஆயிரம் கோடியில் இருந்து ரூ.95 ஆயிரம் கோடியாக உயர்ந்துள்ளது. இது 171 சதவீத உயர்வாகும்.
பிரதமரின் வீடு கட்டும் திட்டம், உஜ்வாலா யோஜனா எனஅனைத்து திட்டங்களும் மக்களுக்கானது. சாதி,மதம் என எந்த பேதமுமின்றி அனைத்துதரப்பினரும் இதில் பயனடைகின்றனர்.
இவ்வாறு அவர் பேசினார்.
பின்னர், தமிழக பாஜக தலைவர் அண்ணாமலை பேசியதாவது:
கடந்த 70 ஆண்டுகளாக இல்லாமல், அடிப்படை வசதியான கழிப்பறையைக் கூட கடந்த 8 ஆண்டுகளில் நாம்தான் செய்து கொடுத்துள்ளோம். தமிழகத்தில் உயர்கல்வி பயில்வோர் விகிதம் 46 சதவீதமாக குறைந்துள்ளது. இங்கு 20 சதவீத கமிஷன் இல்லாமல் எந்த தொழில் நிறுவனத்தையும் தொடங்க முடியாது. மத்திய அரசின் முயற்சியால் தமிழகத்தில் ஆப்பிள் நிறுவனம் தொடங்கப்பட உள்ளது. பொள்ளாச்சியில் விரைவில் அதன் கிளை அமைக்கப்பட உள்ளது. இவ்வாறு தமிழகத்துக்கான பயன்கள் மத்திய அரசால் மட்டுமே வருகின்றன. இவ்வாறு அவர் பேசினார்.
இந்த நிகழ்வில், மாநில அமைப்புச் செயலாளர் கேசவ விநாயகம், தமிழக பாஜக துணைத்தலைவர்கள் நாராயணன் திருப்பதி, பால் கனகராஜ், சிந்தனையாளர்கள் பிரிவு தலைவர் ஷெல்வி உள்ளிட்ட பலர் பங்கேற்றனர்.
Sign up to receive our newsletter in your inbox every day!
WRITE A COMMENT