Published : 04 Feb 2023 07:16 AM
Last Updated : 04 Feb 2023 07:16 AM
சென்னை: தமிழகத்தில் 423 கி.மீ. நீள கடற்பகுதி இயற்கை சீற்றங்களாலும், மனித ஆக்கிரமிப்புகளாலும் தன் வடிவத்தை இழந்துள்ளதாக, மாநிலங்களவையில் திமுக உறுப்பினர் கனிமொழி என்விஎன் சோமு எழுப்பிய கேள்விக்கு மத்திய அமைச்சர் பதில் அளித்துள்ளார்.
இயற்கை பேரிடர்களால் நாட்டின் கடற்கரை பகுதிகள் அழிந்துவருவது குறித்து மாநிலங்களவையில் திமுக உறுப்பினர் கனிமொழி என்விஎன் சோமு கேள்வி எழுப்பியிருந்தார். இதற்கு பதில் அளித்து மத்திய புவி அறிவியல் துறை இணை அமைச்சர் ஜிதேந்திர சிங் பேசியதாவது:
சென்னையில் உள்ள தேசியகடற்பகுதி ஆராய்ச்சி மையம் மத்திய புவி அறிவியல் அமைச்சகத்தின் ஓர் அங்கமாகும். செயற்கைக் கோள் மற்றும் கள ஆய்வுகள் மூலம் கடற்கரை பகுதிகளை இந்த மையம் கண்காணித்து வருகிறது. குறிப்பாக, இந்தியாவின் 6,907 கி.மீ. நீளமுள்ள ஒட்டுமொத்த கடற்கரை பகுதியிலும் கடந்த 1990 முதல் 2018 வரையிலான 28 ஆண்டுகளில் தொடர் ஆய்வு மேற்கொண்டு வரைபடங்களை தயாரித்துள்ளது.
அதன்படி பார்த்தால், கடல் அரிப்புக்கும், மனிதர்களால் ஏற்படும் அழிவுக்கும் இலக்காகி 34சதவீத கடற்கரை பகுதி தனதுமுந்தைய வடிவத்தை இழந்துள்ளது. 27 சதவீத இயற்கையான மாற்றங்களால் தனது வடிவத்தை இழந்திருக்கிறது. இவ்வாறு 61 சதவீத கடற்கரை பகுதி பாதிக்கப்பட்டுள்ளது.
இந்தியாவில் 6,907 கி.மீ. நீளம் உள்ள கடற்கரை பகுதியில் 39 சதவீதம், அதாவது 2,700 கி.மீ. நீள கடற்பகுதி மட்டுமே வடிவம் மாறாமல், இயற்கை சீற்றங்களால் பாதிக்கப்படாமல் உள்ளது.
தமிழகத்தில் மொத்தம் 991 கி.மீ. நீளமுள்ள கடற்கரை பகுதியில் 423 கி.மீ. நீள கடற்பகுதி இயற்கை சீற்றங்களுக்கு இலக்காகிறது. அதன் வடிவமும் மாறுகிறது.
ஆண்டுதோறும் பெறப்படும் ஆய்வறிக்கை, வரைபடங்கள் ஆகியவை பல்வேறு துறைகளுக்கு அனுப்பப்பட்டு, அழிவில் இருந்து கடற்கரை பகுதிகளை பாதுகாக்க நடவடிக்கை எடுக்கப்படுகிறது.
சோதனை முயற்சியாக, புதுச்சேரியில் 2 இடங்களில் அறிவியல்பூர்வமான சில நடவடிக்கைகளை புவி அறிவியல் அமைச்சகம் மேற்கொண்டுள்ளது. இதன்மூலம் கடற்பகுதியில் இழந்த நிலப்பரப்பை மீட்கமுடியும்.
கேரள மாநிலம் செல்லனம் கடற்கரை கிராமத்தில் கடல் அரிப்புதடுப்பு திட்டம் கடந்த ஆண்டு அமல்படுத்தப்பட்டது. அதன் பலனாக, சமீபத்திய பருவமழைக்கு பிறகும் அப்பகுதியில் எவ்வித அழிவோ, மாற்றமோ ஏற்படவில்லை. கடற்கரை பகுதிகளை பாதுகாக்க இதுபோன்ற தொழில்நுட்ப உதவிகளை தமிழகம், ஆந்திரா, கேரளா, புதுச்சேரி, கோவா, லட்சத்தீவு ஆகிய பகுதிகளுக்கு மத்திய அரசு வழங்கி வருகிறது. இவ்வாறு அவர் தெரிவித்தார்.
Sign up to receive our newsletter in your inbox every day!
WRITE A COMMENT