Published : 03 Feb 2023 11:32 PM
Last Updated : 03 Feb 2023 11:32 PM

மதுரை அரசு ராஜாஜி மருத்துவமனையில் புற்றுநோயாளிகளுக்கு ‘கீமோ போர்ட்’ கீமோதெரபி சிகிச்சை அறிமுகம்

மதுரை: மதுரை அரசு ராஜாஜி மருத்துவமனை புற்றுநோய் அறுவை சிகிச்சை துறையில் நோயாளிகளுக்கு கீமோதெரபி மருந்தை ‘கீமோ போர்ட்’ கருவி என்ற கருவியை உடலில் பொருத்தி வழங்கும் நவீன சிகிச்சை அறிமுகப்படுத்தப்பட்டுள்ளது. இந்த நவீன கீமோதெரபி சிகிச்சை தென் மாவட்ட புற்றுநோயாளிகளுக்கு வரப்பிரதமாக உள்ளது.

மதுரை அரசு ராஜாஜி மருத்துவமனையில் உள்ள புற்றுநோய் சிகிச்சைத்துறையில் தென் மாவட்டங்கள் முழுவதும் இருந்து தினமும் ஏராளமான புற்றுநோயாளிகள் சிகிச்சைப்பெற்று செல்கிறார்கள். தற்போது இந்த நோயாளிகளுக்கு கீமோதெரபி மருந்தை கீமோ போர்ட்(Chemoport) என்று சொல்லக்கூடிய உடலுக்குள்ளேயே பொருத்தக்கூடிய நவீன கருவிகளை கொண்டு சிகிச்சை செய்யும் வசதி தொடங்கப்பட்டுள்ளது. நேற்று முதல் முதலாக 5 நோயாளிகளுக்கு இந்த சிகிச்சை வழங்கப்பட்டுள்ளது.

இதுகுறித்து மருத்துவமனை டீன் ரத்தினவேலு, புற்றுநோய் அறுவை சிகிச்சைத்துறை தலைவர் ரமேஷ் ஆகியோர் செய்தியாளர்களிடம் கூறியதாவது: ‘கீமோ போர்ட்’ என்ற இந்த நவீன கருவியை மூன்று ஆண்டுகள் வரை உடலிலே வைத்துக் கொள்ளலாம். கைகளில் உள்ள ரத்தநாளங்கள் மூலம் புற்று நோயாளிகளுக்கு கேன்சர் மருந்துகள் செலுத்தும்போது அது நோயாளிகளுக்கு மிகுந்த வலியை கொடுக்கும். மருந்துகள் ரத்த நாளங்களில் இருந்து கசிந்து வெளியே வந்தால் எரிச்சல் முதல் தசை சிதைவு, ஏன் சில சமயம் கைகளை இழக்கும் அபாயத்தை கூட ஏற்படுத்தும்.

புற்றுநோயாளிகளுக்கு இப்பொதெல்லாம் ஒன்று அல்லது இரண்டு ஆண்டுகள் வரை கூட மருந்து செலுத்த வேண்டிய உள்ளது. குறிப்பாக ரத்தப்புற்றுநோய், எலும்பு புற்றுநோய், மார்பக புற்றுநோய், சினைப்பை புற்றுநோய் போன்றவற்றை நீண்ட நாள் சிகிச்சை மூலம் கட்டுப்படுத்த முடிகிறது. வாழ்நாளை நீட்டிக்க முடிகிறது. தொடர்ந்து பழைய முறையில் கைகளில் மருந்து செலுத்துவது கடிமான காரியமாகும். ஏனெனில், இரண்டு மூன்று மருந்துகளுக்கு பிறகு கைகளில் உள்ள ரத்த நாளங்கள் அடைத்துவிடும். ரத்தநாளங்கள் கண்டுபிடிப்பது மிகவும் சிரமமாக பணியாக இருக்கும். நோயாளிகளும் வலியால் துடிப்பார்கள்.

இந்த கீமோ போர்ட் கருவி இந்த அனைத்து சிரமங்களை போக்கும் ஒரு வரப்பிரசாத சிகிச்சை. நோயாளிக்கு அவர்கள் வேதனையை குறைத்து வந்தவுடன் மருந்து போட்டுவிட்டு எந்த வலியும் இன்றி எளிதாக செல்லலாம். மேலும், அதிக நோயாளிகளுக்கு எந்த பின் விளைவுகளும் இன்றி சிகிச்சை கொடுக்கலாம். குறிப்பாக நோயாளிகள் காலையில் வந்து மருந்தை செலுத்திக் கொண்டு புற நோயாளியாகவே வீடு சென்று விடலாம். ஏனவே இந்த கீமோ போர்ட் சிகிச்சை முறை அரசு ராஜாஜி மருத்துவமனையை நாடி வரும் ஏழை எளிய புற்று நோயாளிகளுக்கு மிகவும் பயனுள்ளதாக இருக்கும். இந்த சிகிச்சை முதலமைச்சரின் விரைவான காப்பீட்டு திட்டத்தில் அனுமதிக்கப்பட்டுள்ளது.

இவ்வாறு அவர் தெரிவித்தார்.

FOLLOW US

தவறவிடாதீர்!

Sign up to receive our newsletter in your inbox every day!

WRITE A COMMENT
 
x