Published : 03 Feb 2023 06:20 PM
Last Updated : 03 Feb 2023 06:20 PM
சென்னை: ரூ.50 ஆயிரத்திற்கு கீழ் சொத்து வரி நிலுவை வைத்துள்ள 5.93 லட்சம் பேருக்கு நோட்டீஸ் அனுப்ப சென்னை மாநகராட்சி முடிவு செய்துள்ளது.
சென்னை மாநகராட்சியின் வரி வருவாயில், முதன்மையானது சொத்து வரி மற்றும் தொழில் வரியாகும். சென்னையில் உள்ள 13 லட்சம் சொத்து உரிமையாளர்களிடமிருந்து, அரையாண்டுக்கு தலா 700 கோடி ரூபாய் என 1,400 கோடி ரூபாய் வரை மாநகராட்சிக்கு வருவாய் கிடைக்கிறது.
சொத்து வரியை ஒவ்வொரு அரையாண்டின் முதல் 15 நாட்களுக்குள் செலுத்துவோருக்கு, ஐந்து சதவீதம் அல்லது 5,000 ரூபாய் வரை ஊக்கத்தொகை வழங்கப்படுகிறது. அதற்குப் பின், சொத்து வரி செலுத்துவோருக்கு, இரண்டு சதவீத தனி வட்டி விதிக்கப்படுகிறது. இந்த நிதியாண்டில் சொத்து வரி உயர்த்தப்பட்டாதால், தனி வட்டி இல்லாமல் சொத்து வரி செலுத்துவதற்கு, ஜனவரி 12 வரை மாநகராட்சி அவகாசம் அளித்துள்ளது.
ஆனாலும், பெரும்பாலான சொத்து உரிமையாளர்கள், மாநகராட்சிக்கு சொத்து வரி செலுத்தாமல் காலம் தாழ்த்தி வருகின்றனர். இவ்வாறு சொத்து வரி செலுத்தாதோர் குறித்த பட்டியலை, மாநகராட்சி https://chennaicorporation.gov.in/gcc/propertytax_revision என்ற இணையதளத்தில் வெளியிட்டு வந்தது.
முதற்கட்டமாக, 25 லட்சம் ரூபாய்க்கு மேல் சொத்து வரி செலுத்ததாாத 38 பேரின் நிறுவனங்கள் மற்றும் தனிநபர்கள் குறித்த பெயர் பட்டியல் வெளியிடப்பட்டது. இதைத் தொடர்ந்து, ரூ.10 லட்சம் முதல் ரூ.25 லட்சம் வரை சொத்து வரி செலுத்தாத 140 பேர் குறித்த பட்டியலையும், ரூ.5 லட்சம் முதல் ரூ.10 லட்சம் வரை சொத்து வரி செலுத்தாத 321 பேரின் பட்டியலையும் சென்னை மாநகராட்சி வெளியிட்டது.
இந்நிலையில், ரூ.50 ஆயிரத்திற்கு கீழ் நிலுவை வைத்துள்ள 5.93 லட்சம் சொத்து உரிமையாளர்களிடம் இருந்து மட்டும் ரூ.346.63 சொத்துவரி வர வேண்டி உள்ளதாக சென்னை மாநகராட்சி தெரிவித்துள்ளது. மேலும் இவர்களுக்கு நோட்டீஸ் அனுப்பும் பணியை சென்னை மாநகராட்சி தொடங்கி உள்ளது. இது குறித்து சென்னை மாநகராட்சி அதிகாரிகள் கூறுகையில், "சொத்து வரி நிலுவை வைத்துள்ள சொத்து உரிமையாளர்களுக்கு சொத்து வரி செலுத்தக் கோரி தபால் துறை மூலமாக நோட்டீஸ் வழங்கப்படவுள்ளது.
இந்த நோட்டீஸில் குறிப்பிட்டுள்ள நிலுவைத் தொகையினை, சொத்து உரிமையாளர்கள் சிரமுமின்றி, எளிதாக செலுத்த QR Code அச்சிடப்பட்டுள்ளது. இந்த வசதியினை பயன்படுத்தி நிலுவை சொத்து வரியினை செலுத்தலாம். மேலும், வரி வசூலர், இணையதளம், மாநகராட்சி மண்டல அலுவலகங்களில் அமைந்துள்ள இ-சேவை மையங்கள், கைபேசி செயலி மற்றும் BBPS (Gpay, PhonePe, Amazon, iMobile pay) ஆகிய முறைகளில் செலுத்தலாம்.
சொத்து வரி நிலுவை வைத்துள்ள சொத்து உரிமையாளர்கள் நிலுவைத் தொகையினை நோட்டீஸில் குறிப்பிட்டுள்ள வழிகாட்டுதல்களின்படி (Guidelines) செலுத்த வேண்டும். சொத்து வரியை செலுத்த தவறும் சொத்து உரிமையாளர்களின் சொத்துகள் மீது சென்னை மாநகராட்சி முனிசிபல் சட்டம் 1919-ன்படி, உரிய நடவடிக்கைகள் மேற்கொள்ளப்படும்" என்று அவர்கள் தெரிவித்தனர்.
Sign up to receive our newsletter in your inbox every day!
WRITE A COMMENT