Published : 03 Feb 2023 05:48 PM
Last Updated : 03 Feb 2023 05:48 PM
புதுடெல்லி: ஈரோடு கிழக்கு தொகுதி வேட்பாளரை அதிமுக பொதுக்குழு முடிவு செய்யும் என்று உத்தரவிட்டுள்ள உச்ச நீதிமன்றம், கால அவகாசம் கருதி வேட்பாளர் தேர்வுக்கான வாக்குகளை பொதுக்குழு உறுப்பினர்களிடமிருந்து கடிதம் மூலம் பெற உத்தரவிட்டுள்ளதாக அதிமுக முன்னாள் அமைச்சர் சி.வி.சண்முகம் கூறியுள்ளார்.
தனது கையொப்பமிட்ட வேட்பாளர் பட்டியலை தேர்தல் ஆணையம் ஏற்க உத்தரவிடக் கோரி எடப்பாடி பழனிசாமி தரப்பில் தொடர்ந்துள்ள வழக்கு வெள்ளிக்கிழமை உச்ச நீதிமன்றத்தில் விசாரணைக்கு வந்தது. இந்த வழக்கை விசாரித்த உச்ச நீதிமன்றம், ‘ஈரோடு கிழக்கு ஈரோடு கிழக்கு தொகுதி இடைத்தேர்தல் வேட்பாளரை அதிமுக பொதுக்குழு முடிவு செய்யலாம். பொதுக்குழுவில் எடுக்கப்படும் முடிவு அவைத்தலைவரால் தேர்தல் ஆணையத்திற்கு தெரிவிக்கப்பட வேண்டும். வேட்பாளரை தேர்வு செய்யும் பொதுக்குழு முடிவுக்கு கையெழுத்து பெற ஓ.பன்னீர்செல்வம் தரப்புக்கு அனுப்பலாம். பொதுக்குழு முடிவிற்கு கையெழுத்திடுவது குறித்து ஓ.பன்னீர்செல்வம் முடிவெடுக்கலாம்’ என்று உத்தரவிட்டது.
இதையடுத்து உச்ச நீதிமன்ற வளாகத்தில் இபிஎஸ் தரப்பு ஆதரவாளரும், மாநிலங்களவை உறுப்பினருமான சி.வி.சண்முகம் செய்தியாளர்களைச் சந்தித்தார். அப்போது அவர் கூறியது: "அதிமுகவின் பொதுக்குழுவில் இயற்றப்பட்ட தீர்மானங்களை தேர்தல் ஆணையத்திற்கு அனுப்பிவைக்கப்பட்டது. அவ்வாறு அனுப்பி வைக்கப்பட்ட தீர்மானங்களை, தேர்தல் ஆணையம் ஏற்றுக்கொண்டு இதுவரை ஆணையத்தின் இணையதளத்தில் பதிவேற்றவில்லை. இதனை எதிர்த்து தாக்கல் செய்யப்பட்ட வழக்கு தீர்ப்புக்காக ஒத்திவைக்கப்பட்டுள்ளது.
ஈரோடு கிழக்கு இடைத்தேர்தல் அறிவிக்கப்பட்டிருக்கிறது. இதைத் தொடர்ந்து அதிமுக பொதுக்குழு முடிவுகளை தேர்தல் ஆணையம் விரைவாக அங்கீகரிக்க கோரி இடையீட்டு மனு தாக்கல் செய்யப்பட்டது. இந்த வழக்கு விசாரணையின்போது, தேர்தல் ஆணையம், இரு தரப்பிலும் மனுக்கள் தாக்கல் செய்யப்பட்டுள்ளது. வேட்பாளர் தேர்வு குறித்து தேர்தல் நடத்தும் அலுவலர் முடிவெடுப்பார் என்று கூறப்பட்டது. அப்போது நீதிபதிகள், இரட்டை இலை சின்னத்தை முடக்கியிருக்கிறீர்களா? என்று கேள்வி எழுப்பினர். அதற்கு தேர்தல் ஆணையம் சின்னத்தை முடக்கவில்லை என்று பதிலளித்தது. அப்போது ஓபிஎஸ் தரப்பில், எடப்பாடி பழனிசாமி தரப்பில் அறிவிக்கப்பட்டுள்ள வேட்பாளரை நாங்கள் ஏற்றுக்கொள்கிறோம்.
ஆனால், கட்சி விதிகளின்படி ஒருங்கிணைப்பாளர் , இணை ஒருங்கிணைப்பாளர் என்ற முறையிலும் நாங்களும் கையெழுத்திட்டு கொடுத்தால் அதிமுக இடைக்காலப் பொதுச் செயலாளர் எடப்பாடி பழனிசாமி தரப்பில் அறிவிக்கப்பட்டுள்ள வேட்பாளரை ஏற்றுக்கொள்கிறோம் என்று தெரிவிக்கப்பட்டது. இதனை நாங்கள் ஏற்றுக்கொள்ளவில்லை. இருவரும் கையெழுத்திடுவது என்பது செயல்படுத்த முடியாத காரியம் என்றும் தெரிவித்தோம்.
இதையடுத்து உத்தரவிட்ட நீதிபதிகள், பொதுக்குழு தீர்மானிக்கட்டும். ஜனநாயக நாட்டில் ஒரு கட்சி தேர்தலில் போட்டியிட வேண்டும். மேலும் இந்த வழக்கின் உத்தரவு ஈரோடு கிழக்கு தொகுதி வேட்பாளர் தேர்வு தொடர்பானது மட்டும்தான். எனவே பொதுக்குழு கூடி முடிவெடுக்கட்டும். பொதுக்குழு முடிவில் அவைத்தலைவர் தமிழ்மகன் உசேன் கையெழுத்திடலாம் என்றனர். ஆனால் இதனை ஓபிஎஸ் தரப்பு ஏற்றுக்கொள்ளவில்லை.
குறைவான காலம் மட்டுமே இருப்பதால் கடிதம் மூலம் அனைத்து பொதுக்குழு உறுப்பினர்களால் பரிந்துரைக்கப்படுகிற பெயரை ஏற்றுக்கொள்கின்றனரா இல்லையா என்பதை வாக்குகள் மூலம் பெற வேண்டும். அதில் பெருவாரியான வாக்குகளை யார் பெற்றிருக்கிறார்கள் என்ற முடிவை அவைத்தலைவர் தமிழ்மகன் உசேன் தேர்தல் ஆணையத்திற்கு அனுப்பி வைக்க வேண்டும். இந்த முடிவை ஏற்று தேர்தல் ஆணையம் நடவடிக்கை மேற்கொள்ள வேண்டும் என்று உத்தரவிட்டுள்ளனர்” என்று அவர் தெரிவித்தார்.
Sign up to receive our newsletter in your inbox every day!
WRITE A COMMENT