Published : 03 Feb 2023 08:51 AM
Last Updated : 03 Feb 2023 08:51 AM
சென்னை: தமிழக முன்னாள் முதல்வர் அண்ணாவின் 54வது நினைவுநாளை ஒட்டி திமுக தலைவரும், தமிழக முதல்வருமான மு.க.ஸ்டாலின் தலைமையில் அமைச்சர்கள், திமுக எம்.பி.க்கள், எம்.எல்.ஏ.,க்கள் அமைதிப் பேரணியாகச் சென்று மலர் தூவி மரியாதை செலுத்தினர்.
வாலாஜா சாலையில் தொடங்கிய இந்தப் பேரணி மெரினா கடற்கரையில் உள்ள அண்ணா நினைவிடம் நோக்கி முன்னேறியது. பேரணியை ஒட்டி வாலாஜா சாலை முழுவதும் போக்குவரத்து தடை செய்யப்பட்டு காவல்துறை கட்டுப்பாட்டில் கொண்டு வரப்பட்டுள்ளது. பேரணியில் முதல்வருடன் திமுக பொதுச் செயலாளர் துரைமுருகன், பொருளாளர் டி.ஆர்.பாலு, அமைச்சர்கள் பங்கேற்றனர். சென்னை மாநகராட்சி மேயர் ப்ரியாவும் பேரணியில் கலந்து கொண்டுள்ளார். பேரணியின் முடிவில் அண்ணா நினைவிடத்தில் மலரஞ்சலி செலுத்தினர்.
அண்ணாவின் நினைவுதினத்தை ஒட்டி ட்விட்டரில் #என்றென்றும்அண்ணா என்ற ஹேஷ்டேக் ட்ரெண்டாகிறது. இந்த ஹேஷ்டேகின் கீழ் பலரும் அண்ணாவின் பொன்மொழிகளைப் பகிர்ந்து வருகின்றனர்.
முன்னதாக முதல்வர் ஸ்டாலின் தனது சமூக வலைதள பக்கங்களில், "களம் சென்று காணுகின்ற வெற்றிக்கு நம்மையெல்லாம் ஊக்குவிக்கும் தமிழ்த்தாயின் தலைமகன் பேரறிஞர் அண்ணா நீடுதுயில் கொண்ட நாள்! தம்பி என்று தமிழர்தமைத் தட்டியெழுப்பிய அண்ணனின் நினைவுகளைச் சுமந்து, தம்பிமார் படை அமைதிப் பேரணிச் சென்றோம்.இப்படை தோற்கின் எப்படை வெல்லும் என்ற அண்ணனின் முழக்கத்தை என்றும் மெய்ப்பிக்க உறுதியேற்போம்! தனயனாய் அவர் பெயரிட்ட தமிழ்நாட்டை மேதினியில் உயரக் கொண்டு செல்வோம்!" என்று பதிவிட்டிருந்தார்.
Sign up to receive our newsletter in your inbox every day!
WRITE A COMMENT