Published : 03 Feb 2023 03:39 AM
Last Updated : 03 Feb 2023 03:39 AM
சென்னை: சென்னை மெரினா கடல் பகுதியில் முன்னாள் முதல்வர் கருணாநிதிக்கு பேனா நினைவுச் சின்னம் அமைப்பதற்கு எதிராகத் தொடரப்பட்ட வழக்கில், மத்திய, மாநில அரசுத் துறைகள் பதில் அளிக்குமாறு தேசிய பசுமைத் தீர்ப்பாயம் உத்தரவிட்டுள்ளது.
திருச்செந்தூரைச் சேர்ந்த பி.ராம்குமார் ஆதித்தன் என்பவர், தேசிய பசுமைத் தீர்ப்பாயத்தின் தென்மண்டல அமர்வில் கடந்த டிசம்பர் மாதம் தாக்கல் செய்த மனுவில் கூறியிருப்பதாவது:
சென்னையில் கடல் ஆமைகள் முட்டையிட்டு இனப்பெருக்கம் செய்யும் இடமாக அறிவிக்கப்பட்டுள்ள நேப்பியர் பாலம் முதல் திருவான்மியூர் வட்டாரப் போக்குவரத்து அலுவலகம் பின்புறம் வரை உள்ள பகுதியை, எளிதில் சூழலியல் பாதிப்பு ஏற்பட வாய்ப்புள்ள பகுதியாக அறிவிக்க வேண்டும். அந்தப் பகுதிகளில் மறைந்த தலைவர்களின் உடல்களைப் புதைக்க தடை விதிக்க வேண்டும்.
முன்னாள் முதல்வர் கருணாநிதி நினைவாக, மெரினா கடற்கரை அருகே கடல் பகுதியில், பேனா நினைவுச் சின்னம் அமைக்க அரசு நடவடிக்கை மேற்கொண்டு வருகிறது. அந்த திட்டத்துக்கு தடை விதிக்க வேண்டும்.
மத்திய அரசு கடற்கரை ஒழுங்குமுறை மண்டல மேலாண்மை விதிகளின் கீழ் இந்த திட்டத்துக்கு அனுமதி அளிக்கவும் தடை விதிக்க வேண்டும். இவ்வாறு மனுவில் வலியுறுத்தியிருந்தார்.
இந்த மனு கடந்த டிசம்பர் 16-ம் தேதி தேசிய பசுமைத் தீர்ப்பாயத்தின் தென்மண்டல அமர்வு முன்பு விசாரணைக்கு வந்தது. எதிர் மனுதாரர்கள் பதில் மனு தாக்கல் செய்தபிறகு, இந்த மனுவை ஏற்பது குறித்து முடிவெடுப்பதாகக் கூறி, விசாரணை தள்ளிவைக்கப்பட்டது.
இந்நிலையில், இந்த மனு அமர்வின் நீதித் துறை உறுப்பினர் புஷ்பா சத்யநாராயணா, தொழில்நுட்ப உறுப்பினர் கே.சத்யகோபால் ஆகியோர் முன்னிலையில் நேற்று மீணடும் விசாரணைக்கு வந்தது.
அப்போது, அரசுத் தரப்பு வழக்கறிஞர் சண்முகநாதன் ஆஜராகி, "பேனா நினைவுச் சின்னம் அமைப்பதற்கு இதுவரை மத்திய அரசிடம் இருந்து எந்த வகையான அனுமதியும் பெறவில்லை. திட்டத்தின் ஆவணப் பணி மட்டுமே நடைபெற்று வருகிறது. முதல்கட்ட சுற்றுச்சூழல் தாக்க மதிப்பீடு ஆய்வு நடத்தப்பட்டு, பொதுமக்களின் கருத்துக்கேட்புக் கூட்டமும் நடத்தப்பட்டுள்ளது.
இதன் அடிப்படையில் விரிவான சுற்றுச்சூழல் தாக்க மதிப்பீட்டு ஆய்வு நடத்தப்பட்ட பின்னர், மத்திய சுற்றுச்சூழல் துறைக்கு ஆய்வறிக்கை அனுப்பப்படும். இதன் அடிப்படையில் மட்டுமே நினைவுச் சின்னம் அமைக்க அனுமதி வழங்கப்படும். எனவே, இந்த மனு விசாரணைக்கு ஏற்றதல்ல" என்று வாதிட்டார்.
"பொதுமக்கள் கருத்துக்கேட்புக் கூட்டம் முறையாக நடத்தப்பட்டதா? மனுதாரர் ஏன் அந்தக் கூட்டத்தில் பங்கேற்கவில்லை? வீட்டுத் தனிமையில் அடைக்கப்பட்டாரா?" என்று அமர்வின் உறுப்பினர்கள் கேள்வி எழுப்பினர். "பாதுகாப்புக் காரணங்களுக்காக கருத்துக்கேட்புக் கூட்டத்தில் பங்கேற்கவில்லை" என்று மனுதாரர் தெரிவித்தார்.
பின்னர் அமர்வின் உறுப்பினர்கள் பிறப்பித்த உத்தரவில், ‘‘இதுவரை தமிழ் வளர்ச்சித் துறை மற்றும் பொதுப்பணி துறையினர் மட்டுமே பதில் மனு தாக்கல் செய்துள்ள நிலையில், மத்திய, மாநில அரசுத் துறைகளான சுற்றுச்சூழல் துறை, தமிழ்நாடு மீன்வளத் துறை, கடலோர ஒழுங்குமுறை மண்டல ஆணையம் உள்ளிட்ட மற்ற அரசுத் துறைகளும் பதில் மனு தாக்கல் செய்ய வேண்டும். இந்த வழக்கின் விசாரணை மார்ச் 2-ம் தேதிக்கு தள்ளிவைக்கப்படுகிறது’’ என்று தெரி வித்துள்ளனர்.
Sign up to receive our newsletter in your inbox every day!
WRITE A COMMENT