Published : 03 Feb 2023 04:05 AM
Last Updated : 03 Feb 2023 04:05 AM
கிருஷ்ணகிரி: கிருஷ்ணகிரி மாவட்டத்தில் பொங்கல் பண்டிகையை முன்னிட்டு அனுமதியின்றி நடந்த எருது விடும் விழாவில் 3 பேர் உயிரிழந்த சம்பவத்தைத் தொடர்ந்து, கட்டாய அனுமதிக்கு நடவடிக்கை எடுக்கப்பட்டுள்ளது.
பொங்கல் பண்டிகையை முன்னிட்டு, கிருஷ்ணகிரி மாவட்டத்தில் பல்வேறு கிராமங் களில் ஆண்டுதோறும் எருது விடும் விழா நடத்துவது வழக்கம். அதாவது, மாடுகளுக்கு ஓட்டப் பந்தயம் நடத்தி, குறிப்பிட்ட விநாடி களுக்குள் கடக்கும் மாடுகளுக்கு ரொக்கப் பரிசு வழங்கப்படும். சில பகுதிகளில் மாடுகளின் கொம்புகளில் தட்டியைக் கட்டி அதில் ரொக்கப் பரிசுகளை வைத்திருப்பார்கள் அதை இளைஞர்கள் தனியாகவும், குழுவாகவும் பறிப்பார்கள்.
நிகழாண்டில் பொங்கல் விழாவின்போது வேப்பனப்பள்ளி, குருபரப்பள்ளி பகுதிகளில் அனுமதியின்றி நடந்த எருது விடும் விழாக்களில் போதிய முன்னேற்பாடுகள், பாதுகாப்பு குறைபாடுகளால் பள்ளி மாணவர் உட்பட 3 பேர் உயிரிழந்தனர். இதையடுத்து, எருது விழா நடத்த அனுமதி வழங்க நிபந்தனைகளை முறையாகப் பின்பற்ற மாவட்ட நிர்வாகம் உத்தரவிட்டது.
அதன்படி, எருது விடும் விழா நடத்த விழாக் குழுவினர்கள் ஒரு மாதத்துக்கு முன்னரே இடம் மற்றும் விழா நடத்தும் நாளை குறிப்பிட்டு, ஏற்கெனவே அரசிதழில் பதிவு செய்யப்பட்ட அரசாணை நகலுடன் விண்ணப்பிக்க வேண்டும். விழாவில் அனுமதிக்கப்படும் காளைகளின் எண்ணிக்கை, விழா அரங்கத்தின் மாதிரி வரைபடம், எருதுகள் ஓடும் தளம் உள்ளிட்ட விவரங்கள் விண்ணப்பத்தில் குறிப்பிட வேண்டும்.
மேலும், காளைகளின் உரிமையாளர்கள் கால்நடை மருந்தகங்களில் புகைப்படத்துடன் கூடிய காளைகளுக்கான உடற்தகுதி சான்று பெற வேண்டும். காப்பீடு உள்ளிட்ட ஆவணங்களுடன் விண்ணப்பம் செய்ய வேண்டும். அதன் பின்னர் விழாவுக்கான தேதியுடன் கூடிய அனுமதி விவரம் அரசிதழில் வெளியாகும்.
தொடர்ந்து, துணை ஆட்சியர் தலைமையில் வருவாய், காவல், ஊரக வளர்ச்சி, தீயணைப்பு, நெடுஞ்சாலை, மருத்துவம், மின்சாரத்துறை உள்ளிட்ட அரசுத் துறை அலுவலர்கள் விழா நடைபெறும் இடத்தில் கூட்டு புலத் தணிக்கை செய்தும், ஆட்சியருக்கு அறிக்கை அளிக்கப்படும். அதன் பின்னர் விழாவை நடத்த வேண்டும்.
கூட்டு ஆய்வின்போது, காளைகள் ஓடும் பகுதியில் 8 அடி உயர இரட்டை தடுப்பு அரண்கள் அமைக்கப்பட்டிருப்பதையும், விழா நடைபெறும் மைதானத்தை சுற்றியுள்ள 5 கிமீ தூரத்துக்கு கிணறுகள் மற்றும் பள்ளங்கள் மூடப்பட்டிருப்பதையும் உறுதி செய்ய வேண்டும். மேலும், ஆம்புலன்ஸ், மருத்துவக் குழுவினர், கால்நடை பராமரிப்புத் துறையினர், தீயணைப்புத் துறையினர் தயார் நிலையில் இருப்பதையும் உறுதி செய்ய வேண்டும்.
இந்த விதிமுறைகளை பின் பற்றாமல் நிகழாண்டில் நடத்தப்பட்ட எருது விடும் விழாக்களில் 3 பேர் உயிரிழந்தனர். இதையடுத்து, மாவட்டத்தில் உள்ள அனைத்து ஊராட்சித் தலைவர்கள், ஊர்முக்கிய பிரமுகர்களிடம் அனுமதியின்றி எருதுவிடும் விழா, கன்று விடும் விழாக்கள் நடத்த மாட்டோம் என எழுத்துப்பூர்வமாகக் காவல் துறையினர் எழுதி வாங்கியுள்ளனர். மேலும், அனுமதி பெற்றே விழாவை நடத்த வேண்டும் என காவல் துறையினர் வலியுறுத்தியுள்ளனர்.
Sign up to receive our newsletter in your inbox every day!
WRITE A COMMENT