Published : 03 Feb 2023 06:10 AM
Last Updated : 03 Feb 2023 06:10 AM

சென்னை துறைமுகம் - மதுரவாயல் ஈரடுக்கு மேம்பாலம்: கடலோர ஒழுங்குமுறை ஆணைய அனுமதிக்கு பரிந்துரை

சென்னை: சென்னை நகரில் போக்குவரத்து நெரிசலைக் குறைக்கவும், சரக்கு வாகனப் போக்குவரத்தை மேம்படுத்தவும் சென்னை துறைமுகம் - மதுரவாயல் இடையே மேம்பாலம் அமைக்க முடிவெடுக்கப்பட்டது. அதன்படி 2010-ல் ரூ.1,815 கோடியில் திட்டமிடப்பட்டு அப்போதைய பிரதமர் மன்மோகன் சிங் திட்டத்துக்கு அடிக்கல் நாட்டினார்.

பணிகள் நடைபெற்று வந்த நிலையில், தமிழகத்தில் ஆட்சி மாற்றம் ஏற்பட்டது. ஜெயலலிதா முதல்வரான நிலையில், கூவம் ஆற்றில் பாலத்துக்கான தூண்கள் அமைப்பதால் ஆற்றின் நீரோட்டம் பாதிக்கப்படும் எனக் கூறி அத் திட்டம் கடந்த 2012-ல் நிறுத்தப்பட்டது. இந்நிலையில் இத்திட்டத்தை மீண்டும் தொடங்க 2015-ம் ஆண்டு மத்திய தரைவழி போக்குவரத்துத் துறை அமைச்சகம் நடவடிக்கை எடுத்தது.

இந்நிலையில், இத்திட்டத்தை ரூ.5,852 கோடியில் இரண்டு அடுக்காக செயல்படுத்த முடிவெடுக்கப்பட்டது. இத்திட்டத்துக்கு கடந்தாண்டு மே மாதம் 26-ம் தேதி பிரதமர் நரேந்திர மோடி அடிக்கல் நாட்டினார். தொடர்ந்து, கடந்தாண்டு ஜூன் மாதம் ஒப்பந்தம் கோரப்பட்டது. இதையடுத்து, திட்டத்துக்கான அனுமதி பெறும் பணிகள் நடைபெற்று வருகின்றன.

இத்திட்டத்தின் குறிப்பிட்ட பகுதிகள், கடற்கரை ஒழுங்குமுறை ஆணையத்தின் அதிகார எல்லைக்கு உட்பட்ட பகுதியில் வருவதால், அனுமதி கேட்டு விண்ணப்பிக்கப்பட்டுள்ளது. இந்நிலையில், மத்திய சுற்றுச்சூழல் துறையின் நிபுணர் மதிப்பீட்டுக் குழு இத்திட்டத்துக்கான கருத்துருவுக்கு ஒப்புதல்அளித்ததுடன் கடற்கரை ஒழுங்குமுறை ஆணையத்தின் அனுமதிக்கு பரிந்துரைத்துள்ளது.

இதுகுறித்து நிபுணர் மதிப்பீட்டுக் குழு அறிக்கையில் கூறியிருப்பதாவது: இந்த புதிய நான்கு வழிமேம்பால சாலைக்கு சென்னை துறைமுக குழுமம் கடற்கரை ஒழுங்குமுறை ஆணைய அனுமதியை கோரியுள்ளது. இத்திட்டத்துக்காக கடந்த 2011-ல் ஆணைய அனுமதி பெறப்பட்டுள்ளது. இந்த அனுமதி காலம் கடந்த 2021 பிப். வரை நீட்டிக்கப்பட்டிருந்தது.

இந்த திட்ட வழித்தடமானது சென்னை, திருவள்ளூர் மாவட்டங்களில் அமைகிறது. சென்னை துறைமுகத்தில் இருந்து மதுரவாயல் வரை 20.6 கிமீ தூரம் அமையும் இந்த வழித்தடத்தில் 9.70 கிமீ தூரம்கடற்கரை ஒழுங்குமுறை ஆணையத்தின் எல்லையில் வருகிறது. மேலும், இந்த மேம்பாலத்துக்காக கூவம் ஆற்றில் அமைக்கப்படும் 375 தூண்களில் 210 தூண்கள் கடற்கரை ஒழுங்கு முறை ஆணையப் பகுதியில் வருகின்றன.

சென்னை துறைமுகத்தில் இருந்து கோயம்பேடு வரை கூவம் ஆற்றின் கரையிலும், அதற்குப்பின், தேசிய நெடுஞ்சாலை எண்4-ல் மதுரவாயல் வரையும் செல்கிறது. சென்னையில், சிந்தாதிரிப்பேட்டை, எழும்பூர், அமைந்தகரை, நுங்கம்பாக்கம், அரும்பாக்கம், கோயம்பேடு, மதுரவாயல் ஆகிய வர்த்தகப் பகுதிகளில் செல்கிறது.

திட்டத்துக்கான மொத்த மதிப்பில்ரூ.3.142.72 கோடி மதிப்பிலான பணிகள் கடற்கரை ஒழுங்குமுறைஆணையத்தின் அதிகார வரம்பில்வருகிறது. இதற்கிடையே கடந்தடிச.5-ம் தேதி தமிழ்நாடு கடற்கரைமண்டல மேலாண்மை குழுமம்இந்த கருத்துருவை அனுமதிக்காகப் பரிந்துரைத்துள்ளது.

இவற்றை நிபுணர் மதிப்பீட்டுக்குழு ஆய்வு செய்தது, இந்த திட்டத்துக்காக ஏற்கெனவே அமைக்கப்பட்ட தூண்கள் நீண்டகாலமாக கைவிடப்பட்டுள்ளன. எனவே, அந்ததூண்களை பயன்படுத்துவது தொடர்பாக சென்னை ஐஐடி மற்றும் இதர நிறுவனங்களின் ஆலோசனையைப் பெறலாம். கடந்த2020-ம் ஆண்டு கடற்கரை ஒழுங்குமுறை மண்டலத்தின் அனுமதி பெறப்பட்டபோது, இத்திட்டம் ஓரடுக்கு மேம்பாலமாக இருந்தது. தற்போது நான்கு வழிச்சாலையாக மாற்றப்பட்டுள்ளது.

இந்நிலையில், திட்டத்துக்கான கருத்துருவை முழுமையாக பரிசீலித்துள்ள நிபுணர் குழு, கடற்கரை ஒழங்குமுறை ஆணையத்தின் அனுமதிக்கு பரிந்துரைக்கிறது. இருப்பினும், தமிழ்நாடு பொதுப்பணித் துறையின் ஆலோசனைப்படியே கூவம் ஆற்றில் தூண்கள் அமைக்கப்பட வேண்டும்.

கட்டுமானப் பணிக்கு நிலத்தடி நீரை எடுக்கக் கூடாது. தூண்கள் கூவம் ஆற்று வெள்ளத்தின் போக்கில் எந்த பாதிப்பையும் ஏற்படுத்தக் கூடாது என்பது உள்ளிட்ட மாநிலகடற்கரை மண்டல மேலாண்மைகுழுமத்தின் நிபந்தனைகள் பின்பற்றப்பட வேண்டும். இவ்வாறு அதில் கூறப்பட்டுள்ளது.

இந்நிலையில், இத்திட்டத்துக்கான அடிப்படை பணிகளைத் தொடங்க அனுமதிக்கப்பட்டுள்ளதாக நெடுஞ்சாலைத் துறை தரப்பில் தெரிவிக்கப்பட்டுள்ளது.

FOLLOW US

தவறவிடாதீர்!

Sign up to receive our newsletter in your inbox every day!

WRITE A COMMENT
 
x