Published : 10 May 2017 08:51 AM
Last Updated : 10 May 2017 08:51 AM
செங்கல்பட்டு அருகே நீர்நிலைகளை மூடியது தொடர்பாக திமுகவினர் வழக்கைச் சந்தித்து வரும் வேளையில், நீர்நிலைகளில் தூர்வாரப்படும் என்று அக்கட்சியின் செயல் தலைவர் மு.க.ஸ்டாலின் அறிவித்திருப்பது மக்களை ஏமாற்றும் வேலை என்று காஞ்சிபுரத்தைச் சேர்ந்த அதிமுக முன்னாள் அமைச்சர் வி.சோமசுந்தரம் கண்டனம் தெரிவித்துள்ளார்.
2016 சட்டப்பேரவை தேர்தலுக்கு முன்னதாக மக்களின் ஆதரவை பெறும் நோக்கில், திமுகவின் செயல் தலைவர் மு.க.ஸ்டாலின் (அப்போது பொருளாளர்) 2015-ல் தமிழகம் முழுவதும், ‘நமக்கு நாமே விடியல் மீட்பு பயணம்’ என்ற பெயரில் பொதுமக்களை சந்தித்து வந்தார். அதன் நிறைவு விழா, காட்டாங்கொளத்தூர் ஒன்றியம் ஆப்பூர் கிராமத்தில் நவ. 2015-ல் நடைபெறுவதாக இருந்தது. அதற்காக அப்பகுதியில் 350 ஏக்கர் பரப்பளவில், நிலத்தை சமன்படுத்தி, திடலை தயார் செய்யும் பணியில் கட்சியினர் ஈடுபட்டிருந்தனர். அப்போது அதன் அருகில் இருந்த நீர்நிலைகளை திமுகவினர் மூடிவிட்டதாக குற்றச்சாட்டு எழுந்தது.
அது தொடர்பாக செங்கல்பட்டு வட்டாட்சியர் அளித்த புகாரின் பேரில், பாலூர் காவல்நிலைய போலீஸார் வழக்குப் பதிவு செய்து, திமுக நிர்வாகிகள் 3 பேரை கைது செய்தனர். இந்த வழக்கு தற்போது நீதிமன்றத்தில் உள்ளது.
இந்நிலையில், சைதாப்பேட்டை தொகுதிக்கு உட்பட்ட கோதண்டராமர் கோயில் குளம் தூர்வாரும் பணியினை நேற்று முன்தினம் தொடங்கிவைத்த ஸ்டாலின், “தமிழகம் முழுவதும் இருக்கக்கூடிய நீர் நிலைகளை திமுக சார்பில் தூர்வாரி, குடிநீரை சேமிக்க நடவடிக்கை எடுக்கப்படும்” என்று தெரிவித்துள்ளார்.
இதற்கு காஞ்சிபுரத்தைச் சேர்ந்த அதிமுக முன்னாள் அமைச்சர் வி.சோமசுந்தரம் கண்டனம் தெரிவித்துள்ளார். இது தொடர்பாக அவர் கூறியதாவது: 2015-ல் ஸ்டாலினின் நிகழ்ச்சிக்காக நீர்நிலைகள் மூடப்பட்டன. இதில் திமுகவினர் மீது வழக்குப் பதிவு செய்யப்பட்டுள்ளது. நீதிமன்றத்திலும் வழக்கு உள்ளது.
நீர்நிலையை அழித்ததாக திமுகவினர் மீது வழக்கு உள்ள நிலையில், தமிழகம் முழுவதும் நீர்நிலைகள் தூர்வாரப்படும் என்ற ஸ்டாலினின் அறிவிப்பு, மக்களை ஏமாற்றும் வேலை. இதை அறிவிக்க திமுகவுக்கு உரிமை இல்லை. இது மக்களுக்கும் தெரியும்.
இதை துணை முதல்வராக இருக்கும் போதே ஸ்டாலின் செய்திருக்கலாம். அதிமுக அரசு குடிமராமத்துத் திட்டத்தை செயல்படுத்துவதற்கு முன்பாக கூட செய்திருக்கலாம். இந்த அரசு குடிமராமத்து திட்டத்துக்கு நிதி ஒதுக்கி, திட்டத்தை தொடங்கி, பல்வேறு நீர்நிலைகளை சிறப்பாக தூர்வாரி வரும் நிலையில், அதை ஏற்க முடியாமல், தற்போது ஸ்டாலின் தூர்வாரும் பணியில் இறங்கியுள்ளார். பிறகு, எனது முயற்சியால்தான் தமிழக அரசு தூர்வாருகிறது என்று அறிக்கை வெளியிடுவார். இவரது செயல் கண்டிக்கத்தக்கது. இதை மக்கள் நம்பமாட்டார்கள் என்று கூறினார்.
இது தொடர்பாக திமுக அமைப்புச் செயலாளர் ஆர்.எஸ்.பாரதியிடம் கேட்டபோது, ‘ஆப்பூர் பகுதியில் நீர் நிலையே இல்லை. அரசியல் உள் நோக்கத்தோடு தான் அப்போது திமுகவினர் மீது பொய் வழக்கு பதிவு செய்யப்பட்டது’ என்றார்.
Sign up to receive our newsletter in your inbox every day!
WRITE A COMMENT