Published : 02 Feb 2023 11:30 PM
Last Updated : 02 Feb 2023 11:30 PM
போடி: மதுரையில் நடைபெறும் தண்டவாள சீரமைப்புப் பணியினால் வரும் 19-ம் தேதி போடியில் இருந்து சென்னைக்கு இயங்க இருந்த முதல் ரயில் சேவை ஒத்திவைக்கப்பட்டுள்ளது. மேலும் மதுரை-தேனி ரயிலும் 16-ம் தேதி முதல் மார்ச் 7-ம் தேதி வரை இருமார்க்கமாக ரத்து செய்யப்பட்டுள்ளன. இதனால் சென்னை ரயிலை எதிர்பார்த்திருந்த தேனி மக்களுக்கு ஏமாற்றம் ஏற்பட்டுள்ளது.
மதுரை-போடி இடையே இயக்கப்பட்ட மீட்டர்கேஜ் ரயில் கடந்த 2010-ம் ஆண்டு டிசம்பரில் நிறுத்தப்பட்டது. பல ஆண்டுகள் பணி தொய்வடைந்த நிலையில் மதுரையில் இருந்து உசிலம்பட்டி, ஆண்டிபட்டி, தேனி வரை அடுத்தடுத்து அகலபாதை பணிகள் முடிக்கப்பட்டன. இதனைத் தொடர்ந்து கடந்த மே 27-ம் தேதி முதல் தேனி வரை பயணிகள் தினசரி ரயில் (06701/702) இருமார்க்கமாக இயக்கப்படுகிறது.
தேனி-போடி இடையே 15 கிமீ தூரத்திலான பணிகள் முடிவடைந்த நிலையில் தேனி வரை இயங்கும் பயணிகள் ரயிலும், சென்னையில் இருந்து மதுரை வரை இயங்கும் எக்ஸ்பிரஸ் ரயிலும் (20601//602) வரும் 19-ம் தேதி முதல் போடி வரை நீட்டிக்கப்படும் என்று தென்னக ரயில்வே அறிவித்தது.
இந்நிலையில் மதுரை ரயில்வே நிலையத்தில் தண்டவாள சீரமைப்பு பணி நடைபெற உள்ளதால் பல்வேறு ரயில் இயக்கங்கள் மாற்றி அமைக்கப்பட்டுள்ளன. இதன்படி வரும் 9, 10, 11, 12, 13, 14-ம் தேதிகளில் தேனியில் இருந்து மதுரைக்கு மாலை 6.15 மணிக்கு கிளம்பும் ரயில் 30 நிமிடம் தாமதமாக 6.45மணிக்கு கிளம்பும். 15-ம் தேதி தேனியில் இருந்து மதுரைக்கு ரயில் இயக்கம் இல்லை. 16-ம் தேதி முதல் மார்ச் 7-ம் தேதி வரை இருமார்க்கமாகவும் ரயில் இயக்கம் நிறுத்தி வைக்கப்படுகிறது என்று தென்னக ரயில்வே தெரிவித்துள்ளது.
இதுகுறித்து ரயில்வேத்துறை அதிகாரிகள் கூறுகையில், "மதுரை ரயில்வே நிலையத்தில் தண்டவாளங்கள் சீரமைக்கப்பட உள்ளதால் பல ரயில்களிலும் நேர மாற்றம், ரத்து, பகுதிதூர ரத்து, தாமதமான இயக்கம், சுற்றுப்பாதையில் இயக்கம் போன்ற மாற்றங்கள் செய்யப்பட்டுள்ளன. இதில் தேனி ரயிலும் அடக்கம். இந்த பராமரிப்புப் பணி நடைபெற உள்ளதால் வரும் 19-ம் தேதி முதல் தொடங்க இருந்த போடி-சென்னை ரயில் சேவை ஒத்தி வைக்கப்பட்டுள்ளது" என்றனர்.
சுமார் 12 ஆண்டுகளாக ரயில் சேவைக்காக காத்திருக்கும் போடி மக்கள் வரும் 19-ம் தேதி ரயில் தங்கள் ஊருக்கு வரும் என்ற எதிர்பார்ப்பில் இருந்தனர். இந்நிலையில் ரயில் இயக்கம் ஒத்திவைக்கப்பட்டது அவர்களை ஏமாற்றத்தில் ஆழ்த்தி உள்ளது.
Sign up to receive our newsletter in your inbox every day!
WRITE A COMMENT