Published : 02 Feb 2023 05:18 PM
Last Updated : 02 Feb 2023 05:18 PM

கள ஆய்வில் முதல்வர் @ வேலூர் | அதிகாரிகளுக்கு ஸ்டாலின் பிறப்பித்த உத்தரவுகள் என்னென்ன? 

வேலூரில் நடந்த ஆய்வுக் கூட்டத்தில் பங்கேற்ற முதல்வர் ஸ்டாலின்

வேலூர்: "தமிழ்நாடு அரசினுடைய நிதிநிலை அறிக்கை தாக்கல் அதன்பிறகு, துறை வாரியான மானியக் கோரிக்கைகள் அடுத்த சில மாதங்களில் தாக்கலாக இருக்கிறது. புதிய புதிய திட்டங்கள் ஏராளமாக சேர்ந்துவிடும். எனவே அதற்கு முன்னதாகவே, இதுவரை அறிவிக்கப்பட்டிருக்கக்கூடிய திட்டங்களை முழுமையாக நடைமுறைப்படுத்திக் காட்டுங்கள்" என்று அதிகாரிகளுக்கு தமிழக முதல்வர் மு.க.ஸ்டாலின் வேண்டுகோள் விடுத்துள்ளார்.

வேலூர் மாவட்ட ஆட்சித்தலைவர் அலுவலகத்தில் “கள ஆய்வில் முதலமைச்சர்” திட்டத்தின் கீழ் வேலூர், ராணிப்பேட்டை, திருப்பத்தூர் மற்றும் திருவண்ணாமலை மாவட்ட ஆட்சித் தலைவர்கள் மற்றும் அரசு உயர் அலுவலர்களுடன் தமிழக முதல்வர் மு.க.ஸ்டாலின் தலைமையில் வியாழக்கிழமை (பிப்.2) ஆய்வுக் கூட்டம் நடைபெற்றது.

இந்த கூட்டத்தில் முதல்வர் பேசியது: "பலகோடி ரூபாய் மதிப்பீட்டில் ஒவ்வொரு திட்டமும் அறிவிக்கப்படுகிறது. பல்வேறு நிதி அமைப்புகளிடம் அரசு கருவூலத்தில் இருக்கும் பணத்தின் மூலமாக மட்டுமல்ல, கடன் வாங்கியும் பல திட்டங்கள் நிறைவேற்றப்படுகிறது. மக்களின் வரிப்பணமும் அரசின் நிதியில் உள்ளது. அதனால் திட்டங்களுக்கான நிதி வீணாகிவிடாமல் விரைவாகவும் சிக்கனமாகவும் திட்டங்களை நீங்கள் செயல்படுத்த வேண்டும்.

திட்டப்பணிகளுக்கு ஒதுக்கீடு செய்யப்படும் நிதிக்குள் குறைவாகச் செலவு செய்து பணியை முடிப்பதில் கவனமாக இருக்க வேண்டும். அதே போல் குறிப்பிட்ட காலத்துக்கு முன்னதாக திட்டப்பணிகளை முடிக்க வேண்டும் என்பதில் உறுதியாக இருக்க வேண்டும்.ஏதாவது ஒரு திட்டம் முடக்கப்பட்டாலோ, சுணக்கமாக நடந்தாலோ அது அரசின்மீது விமர்சனமாக வைக்கப்படுகிறது. எனவே, இதில் நீங்கள் எச்சரிக்கையாக இருக்க வேண்டும். அந்தந்த நிதி ஆண்டுக்கான பணிகள் அந்த ஆண்டுக்குள் முடிக்கப்பட வேண்டும்.டெண்டர் விட்டோம், திட்டத்தை முடித்துத் தர வேண்டியது ஒப்பந்ததாரரின் வேலை என்று இருந்து விடாமல் அதனை தொடர்ந்து கண்காணிக்க வேண்டிய கடமை உங்களுடைய கடமை.

சார்நிலை அலுவலர்களின் பணியை கண்காணித்து, ஒருங்கிணைத்து செயல்படாததால் திட்டங்களை முழுமையாக நிறைவேற்றுவதில் காலதாமதமும் தொய்வும் ஏற்படுகிறது என்று நான் கருதுகிறேன். எனவே, இதுபோன்ற ஆலோசனைக் கூட்டங்களை, கண்காணிப்பு கூட்டங்களை, திட்டமிடும் கூட்டங்களை, கலந்துரையாடும் கூட்டங்களை உங்களுக்கு கீழே இருக்கக்கூடிய அதிகாரிகளுடன் தொடர்ந்து நடத்த வேண்டும் என்று நான் கேட்டுக் கொள்கிறேன்.

தொடர்ந்து தீவிர கள ஆய்வுகளை மேற்கொள்ளுங்கள். மக்களோடு கலந்து பழகுங்கள், அவர்களின் தேவையை உணர்ந்து செயல்படுங்கள். அரசு ஆணைகளை மட்டும் செயல்படுத்துவராக இல்லாமல், உங்களது கனவுத் திட்டங்களையும் அரசுக்குச் சொல்லி, அதனையும் செயல்படுத்த முனையும் திறன் கொண்டவர்களாக நீங்கள் அனைவரும் இருக்க வேண்டும்.

அரசினுடைய முன்னுரிமை பணிகள் (Priority items) எவை என்பதை உணர்ந்து மாவட்ட நிர்வாகம் செயல்பட வேண்டும். மாவட்ட அளவில் இருக்கும் நீங்கள் உங்களது மாவட்ட எல்லைக்குட்பட்ட பணிகளை உன்னிப்பாக, கவனமாக கண்காணித்து செயல்படுத்தினால் அனைத்து திட்டங்களும் முழுமையாக மக்களை போய் சென்றடையும். அடுத்த, அடுத்த மாதத்தில் தமிழ்நாடு அரசினுடைய நிதிநிலை அறிக்கை தாக்கல் ஆக இருக்கிறது.

அதன்பிறகு, அமைச்சருடைய துறை மானியக் கோரிக்கைகள் தாக்கல் ஆக இருக்கிறது. புதியபுதிய திட்டங்கள் ஏராளமாக சேர்ந்துவிடும். அதற்கு முன்னதாகவே, இதுவரை அறிவிக்கப்பட்டிருக்கக்கூடிய திட்டங்களை முழுமையாக நடைமுறைப்படுத்திக் காட்டுங்கள்.

பல ஆண்டு அனுபவமும் பல்துறை ஆற்றலும் கொண்டவர்கள் நீங்கள். உங்களுக்கு இதற்கு மேல் சொல்லத் தேவையில்லை.தமிழ்நாட்டின் அனைத்து மாவட்டங்களும் வெகுசிறப்பாக செயல்பட வேண்டும் என்பதுதான் “கள ஆய்வில் முதலமைச்சர்” என்ற திட்டத்தினுடைய நோக்கம். அதற்கு இந்த ஆய்வுக்கூட்டம் ஒரு சிறப்பான முதல் படியாக அமைந்திருக்கிறது என்று நான் கருதுகிறேன்.

அந்த வகையில் உங்கள் அனைவருடைய பணியும் சிறந்து மேம்பட, தமிழ்நாடு எல்லா வகையிலும் உன்னத நிலையை அடைந்திட மாவட்ட ஆட்சியர்கள், மாவட்ட வருவாய் அலுவலர்கள் மற்றும் துறை அலுவலர்கள் அனைவருக்கும் என்னுடைய வாழ்த்துகளை தெரிவித்துக் கொள்கிறேன்" என்று அவர் பேசினார்.

FOLLOW US

தவறவிடாதீர்!

Sign up to receive our newsletter in your inbox every day!

WRITE A COMMENT
 
x