Published : 02 Feb 2023 03:16 PM
Last Updated : 02 Feb 2023 03:16 PM
சென்னை: ஈரோடு கிழக்கு தொகுதியில் மொத்தமுள்ள 238 பூத்களிலும் 30,000 முதல் 40,000 வரையிலான போலி வாக்காளர்கள் சேர்க்கப்பட்டுள்ளதாக அதிமுக முன்னாள் அமைச்சர் ஜெயக்குமார் குற்றம்சாட்டியுள்ளார்.
சென்னையில் அதிமுக முன்னாள் அமைச்சர் ஜெயக்குமார் வியாழக்கிழமை (பிப்.2) செய்தியாளர்களைச் சந்தித்தார். அப்போது, "ஈரோடு கிழக்கு தொகுதியில், திமுக அரசு அடியாட்களைக் கொண்டு கட்சியினரைக் கொண்டு அங்கு முறைகேடாக வாக்கு செலுத்த வேண்டும் என திட்டமிட்டுள்ளது. எனவே, அந்தத் தொகுதியில் உள்ள 238 பூத்களிலும், 30 ஆயிரம் முதல் 40 ஆயிரம் வரை இதுபோன்ற பெயரே இல்லாத போலி வாக்காளர்களைச் சேர்த்துள்ளனர். இதை சரிபார்க்க வேண்டும் என்று தேர்தல் அதிகாரியிடம் புகார் அளித்துள்ளோம்.
பணப் பட்டுவாடா உள்ளிட்ட பல்வேறு வகையான முறைகேடுகளையும் செய்து, விதிகளை காலில்போட்டு மிதித்து, ஜனநாயகத்தை நசுக்குகின்ற வேலையை ஆளும் திமுகவினர் செய்து வருவதாக புகார் கூறினோம். நிச்சயமாக நடவடிக்கை எடுப்பதாக கூறியுள்ளனர்" என்றார்.
அப்போது ஓபிஎஸ் தரப்பிலும் வேட்பாளர் நிறுத்தப்பட்டுள்ளதால் இரட்டை இலை சின்னம் முடங்கும் சூழல் உருவாகுமா என்று கேட்கப்பட்ட கேள்விக்கு பதிலளித்த அவர், "எந்த நிலையிலும் இரட்டை இலை சின்னம் முடக்கப்படாது. உச்ச நீதிமன்றத்தில் வழக்கு நிலுவையில் இருப்பதால், அதற்குள் செல்லக் கூடாது.
ஓபிஎஸ் தரப்பில் போட்டி என்பது, பொதுமக்களுக்கும் தெரியும், அவரைச் சார்ந்தவர்களுக்கும் தெரியும், அது ஒரு மண்குதிரை, அதை நம்பி ஆற்றில் இறங்கக் கூடாது என்பது எல்லோருக்குமே தெரியும். எனவே, அது மண்குதிரை அது கரை சேராது" என்று அவர் கூறினார்.
Sign up to receive our newsletter in your inbox every day!
WRITE A COMMENT