Published : 02 Feb 2023 02:31 PM
Last Updated : 02 Feb 2023 02:31 PM
சென்னை: கோயிலுக்கு சொந்தமான நிலத்தில் உள்ள ஆக்கிரமிப்புகளை அகற்ற நடவடிக்கை எடுக்கக் கூடாது என தேசிய பட்டியலின ஆணையம் பிறப்பித்த உத்தரவுக்கு சென்னை உயர் நீதிமன்றம் இடைக்கால தடை விதித்து உத்தரவிட்டுள்ளது.
சென்னை உயர் நீதிமன்றத்தில், கிருஷ்ணகிரி மாவட்டம், மாதேபள்ளி கிராமத்தை சேர்ந்த ஜெயராமன் தாக்கல் செய்த பொதுநல மனுவில், "அருள்மிகு சக்கி அம்மன் கோயிலுக்கு சொந்தமான 3.75 ஏக்கர் நிலத்தை சீனிவாசன் என்பவர் ஆக்கிரமித்துள்ளார். இந்த ஆக்கிரமிப்புகளை அறநிலையத் துறை அகற்றக் கூடாது என்பதற்காக, தனக்கு சொந்தமான நிலத்தை சட்ட விரோதமாக எடுப்பதற்கு அறநிலையத் துறை முயற்சிப்பதாக கூறி தேசிய பட்டியலின ஆணையத்தில் சீனிவாசன் புகார் அளித்தார்.
இந்தப் புகாரை விசாரித்த ஆணையம், ஆக்கிரமிப்பை அகற்ற எந்த நடவடிக்கையும் எடுக்கக் கூடாது என்றும், இந்த விவகாரத்தில் தற்போதைய நிலையே நீடிக்க வேண்டும் எனவும் அறநிலையத் துறைக்கு உத்தரவிட்டுள்ளது. உண்மை விவரங்கள் தெரியாமல் ஆணையம் இந்த உத்தரவை பிறப்பித்துள்ளது.
சிவில் நீதிமன்றத்தின் உரிமையை ஆணையம் எடுத்துக்கொள்ள அதிகாரம் இல்லை. எனவே, ஆணையம் பிறப்பித்த உத்தரவை ரத்து செய்ய வேண்டும். அந்த உத்தரவுக்கு தடை விதிக்க வேண்டும்" என்று மனுவில் கோரியிருந்தார்.
இந்த வழக்கு நீதிபதிகள் வைத்தியநாதன் மற்றும் சத்திய நாராயண பிரசாத் ஆகியோர் அடங்கிய அமர்வு முன் விசாரணைக்கு வந்தது. வழக்கை விசாரித்த நீதிபதிகள், ஆக்கிரமிப்பை அகற்றக் கூடாது என உத்தரவு பிறப்பிக்க தேசிய பட்டியலின ஆணையத்திற்கு எந்த அதிகாரமும் இல்லை. ஆனால், எப்படி இந்த உத்தரவு பிறப்பிக்கப்பட்டது என்று கேள்வி எழுப்பினர்.
அத்துடன், தேசிய பட்டியலின ஆணையத்தின் உத்தரவுக்கு இடைக்கால தடை விதித்து உத்தரவிட்டனர். ஆக்கிரமிப்புக்கு எதிராக நடவடிக்கை எடுக்க இந்து சமய அறநிலையத் துறைக்கு அனுமதி அளித்து உத்தரவிட்டனர். இந்த மனுவுக்கு தமிழக அரசு பதிலளிக்க உத்தவிட்டு விசாரணையை மார்ச் 1-ம் தேதிக்கு தள்ளிவைத்தனர்.
Sign up to receive our newsletter in your inbox every day!
WRITE A COMMENT