Published : 02 Feb 2023 04:33 AM
Last Updated : 02 Feb 2023 04:33 AM
சென்னை: உலக அளவில் அடித்தட்டு மக்கள் உட்பட அனைவரும் சமமான அறிவு, திறனை பெறுவதற்கான கல்வி முறை தேவைப்படுகிறது என்று சென்னையில் நடந்த ஜி-20
மாநாட்டின் கல்விக்குழு கூட்டத்தில் மத்திய இணை அமைச்சர் தெரிவித்தார்.
ஜி-20 அமைப்பின் 2022-23-ம் ஆண்டு மாநாட்டுக்கான தலைமை பொறுப்பை இந்தியா ஏற்றுள்ளது. இதையொட்டி, நாடு முழுவதும் 50 நகரங்களில் பல்வேறு துறைகள்
சார்பில் கூட்டங்கள் நடத்தப்படுகின்றன. அந்த வகையில், கல்வித் துறை சார்பில் ஜி-20 முதலாவது கல்வி பணிக்குழு மாநாடு சென்னையில் உள்ள ஐஐடி ஆராய்ச்சி பூங்கா வளாகத்தில் கடந்த 31-ம் தேதி தொடங்கியது. முதல் நாள் நிகழ்வில், ‘கல்வியில் டிஜிட்டல் தொழில்நுட்பத்தின் பங்களிப்பு’ எனும் தலைப்பிலான கருத்தரங்கம் 3 அமர்வுகளாக நடத்தப்பட்டது.
அதைத் தொடர்ந்து, 2-வது நாளான நேற்று மாநாட்டின் பணிக்குழு கூட்டம் சென்னை நுங்கம்பாக்கத்தில் உள்ள தனியார் நட்சத்திர விடுதியில் நேற்று தொடங்கியது. இக்கூட்டத்துக்கு மத்திய உயர் கல்வித் துறை செயலர் கே.சஞ்சய் மூர்த்தி தலைமை வகித்தார். இதில் இந்தோனேசியா, பிரேசில் உட்பட 29 உறுப்பு நாடுகள், விருந்தினர் நாடுகளின் பிரதிநிதிகள், யுனெஸ்கோ, யுனிசெப் நிர்வாகிகள் என மொத்தம் 80 பேர் கலந்து கொண்டனர். மத்திய இணை அமைச்சர் எல்.முருகன், சிறப்பு விருந்தினராக கலந்துகொண்டு, கல்விக்குழு கூட்டத்தை தொடங்கி வைத்தார்.
அவர் பேசியதாவது: ‘ஒரே புவி, ஒரே குடும்பம், ஒரே எதிர்காலம்’ என்பதன் அடிப்படையில், அனைவரும் சமமான நீடித்த வளர்ச்சியை பெற வேண்டும் என்பதே இந்தியாவின் ஜி20 தலைமைத்துவத்தின் நோக்கம். தரமான கல்வியை வழங்க தேவையான முன்னுரிமைகளை உறுப்பு நாடுகள் சுட்டிக்காட்டுவதற்கு இந்த மாநாடு சிறந்த வாய்ப்பு அளிக்கிறது. அனைத்து ஜி20 உறுப்பு நாடுகளும் தங்கள் முன்னெடுப்புகளை பகிர்ந்து கொள்ள வேண்டும். அனைவரும் ஒன்றிணைந்து தீர்வு காண்பதால், அனைத்து நாடுகளும் தங்கள் கல்வி முறையை வலுப்படுத்தி, திட்டமிட்ட இலக்கை அடைய உதவும்.
கடந்த சில ஆண்டுகளில் மக்களின் வாழ்க்கை, செயல்பாடுகளில் படிப்படியான மாற்றம் ஏற்பட்டுள்ளது. எனவே, அடித்தட்டு மக்கள் உட்பட அனைவரும் சமமான அறிவு, திறனை பெறுவதற்கான கல்வி முறை நமக்கு தேவைப்படுகிறது. இதன்மூலமாகவே மக்கள் ஆரோக்கியமான, பொறுப்புமிக்க வாழ்க்கையை வாழ முடியும். அதன்படி, குறைந்த செலவில் சிறந்த உயர்தர கல்வியை மக்கள் அடைவதற்காக பல்வேறு முன்னெடுப்புகளின் கீழ் தேசிய கல்விக் கொள்கையை இந்தியா தொடங்கியுள்ளது. பள்ளி இடைநிற்றலை தடுத்தல், புதிய கற்பித்தல் முறை, உயர்கல்வியில் நெகிழ்வுத் தன்மை, தொழில்நுட்பத்தை பயன்படுத்துதல் உள்ளிட்ட பல்வேறு அம்சங்கள் அதில் உள்ளன.
கல்வி மற்றும் இதர துறைகளில் ஜி20 உறுப்பு நாடுகள் இடையே ஒருங்கிணைப்பை ஏற்படுத்த இந்தியா முக்கியத்துவம் அளிக்கிறது. ஜி20 மாநாடு மூலம் பொதுவான எதிர்காலத் திட்டங்கள், முன்னுரிமைகளை அடைவதற்கு நமக்கு வாய்ப்பு கிடைத்துள்ளது. நமது எதிர்கால குறிக்கோள்களை கட்டமைக்க அனைவரும் இணைந்து செயல்படுவோம் என்றார். பின்னர் செய்தியாளர்களிடம், மத்திய அமைச்சர் கூறியபோது, “கல்வியில் சிறந்த சென்னையில் ஜி-20 மாநாட்டின் கல்விக்குழு கூட்டம் நடத்தப்படுவதில் மகிழ்ச்சி. திறன்மிக்க இளைஞர்களை உருவாக்கும் நோக்கில் தேசிய கல்விக் கொள்கை உருவாக்கப்பட்டுள்ளது. அவரவர் தாய்மொழியிலேயே கல்வி வழங்கப்படுவதை அது ஊக்குவிக்கிறது. அதை உலக அளவில் கொண்டு செல்ல இந்த மாநாடு பயன்படும். தேசிய கல்விக் கொள்கையை தமிழக அரசும் ஏற்றுக் கொள்ளும்’’ என்றார்.
கூட்டம் முடிந்த பிறகு, மாலையில் வெளிநாட்டு பிரதிநிதிகள் அனைவரும் மாமல்லபுரத்துக்கு சுற்றுலா அழைத்து செல்லப்பட்டனர். அங்குள்ள புராதன கோயில்கள், சிற்பங்களை அவர்கள் கண்டு ரசித்தனர். கல்விக்குழு கூட்டத்தின் இறுதி அமர்வு சென்னையில் இன்று (பிப்.2) நடைபெறுகிறது. உலக அளவில் கல்வித் துறையில் நிலவும் சிக்கல்கள் குறித்து இக்கூட்டத்தில் முக்கிய முடிவுகள் எடுக்கப்படலாம் என்று தெரிகிறது.
Sign up to receive our newsletter in your inbox every day!
WRITE A COMMENT