Last Updated : 21 May, 2017 09:32 AM

 

Published : 21 May 2017 09:32 AM
Last Updated : 21 May 2017 09:32 AM

அடுக்குமாடி குடியிருப்புகள், மருத்துவமனைகள், ஹோட்டல்களுக்கு பிஎஸ்என்எல் புதிய தொலைபேசி, இணையதள சேவை: துல்லியமான குரல், அதிவேக பதிவிறக்கம்

வருவாய் பகிர்ந்தளிப்புத் திட்டத்தின் கீழ் அடுக்குமாடிக் குடியிருப்புகள், கார்ப்பரேட் அலுவலகங்கள், மருத்துவமனைகள், ஹோட்டல்களுக்கு புதிதாக தொலைபேசி, இணையதள வசதி வழங்கும் திட்டத்தை பிஎஸ்என்எல் அறிமுகப்படுத்தியுள்ளது. இதன்படி, அதிகபட்சமாக 100 எம்பிபிஎஸ் திறன் வேகத்தில் இணையதள சேவையைப் பெற முடியும்.

தனியார் நிறுவனங்களுடன் போட்டி போடும் வகையில் பிஎஸ்என்எல் நிறுவனமும் வாடிக்கையாளர்களுக்கு பல்வேறு சேவைகளை வழங்கி வருகிறது. குறிப்பாக, மேம்படுத்தப்பட்ட இணையதள சேவையை வழங்க பிஎஸ்என்எல் பல்வேறு நடவடிக்கைகளை எடுத்து வருகிறது.

இந்நிலையில், மேலும் ஒரு புதிய முயற்சியாக வருவாய் பகிர்ந்தளிப்பு திட்டத்தின் கீழ் அடுக்குமாடிக் குடியிருப்புகள், கார்ப்பரேட் அலுவலகங்கள், மருத்துவமனைகள், ஹோட்டல்களுக்கு புதிய இணையதள வசதி வழங்கும் திட்டத்தை பிஎஸ்என்எல் அறிமுகப்படுத்தியுள்ளது.

இதுதொடர்பாக பிஎஸ்என்எல் நிறுவனத்தின் சென்னை தொலைபேசி வட்டத் தலைமை பொதுமேலாளர் எஸ்.எம்.கலாவதி, ‘தி இந்து’விடம் கூறியதாவது:

வருவாய் பகிர்ந்தளிப்பு என்ற புதிய திட்டத்தை பிஎஸ்என்எல் அறிமுகப்படுத்தியுள்ளது. இதன்படி, அடுக்குமாடிக் குடியிருப்புகள், கார்ப் பரேட் அலுவலகங்கள், மருத்துவமனைகள், ஹோட்டல்களுக்கு இணையதள வசதி அளிக்கப்பட உள்ளது. உதாரணமாக, இத்திட்டத்தின் கீழ், ஓர் அடுக்குமாடிக் குடியிருப்பில் உள்ள சுமார் 50 அல்லது 100 வீடுகளுக்கு இணையதள வசதி வேண்டும் என்றால், அதற்குத் தேவையான கருவிகளை அந்த குடியிருப்பில் புரமோட்டர்கள் முதலில் நிறுவ வேண்டும். அதன் பிறகு, எங்களிடம் விண்ணப்பித்தால் நாங்கள் அந்தக் குடியிருப்புக்கு பைபர் கேபிள் மூலம் இணைப்பு கொடுப்போம்.

குடியிருப்பில் உள்ள வீடுகளுக்கு ஒரு மாதத்துக்கான பில் தொகையில் ஒரு குறிப்பிட்ட சதவீதத்தை, அந்த புரமோட்டருக்கு திருப்பி வழங்குவோம். குடியிருப்பு வளாகத்தில் இணையதள சேவை அளிக்கப் பயன்படுத்தும் கருவிகளைப் பராமரிக்க இத்தொகையை அவர்கள் பயன்படுத்திக் கொள்ளலாம்.

பைபர் கேபிள் மூலம் இணைப்பு வழங்கப்படுவதால் தொலைபேசி குரல் சேவை மிக தெளிவாக, துல்லியமாக இருக்கும். அதிவேக திறன் கொண்ட இணையதள சேவையையும் பெறலாம்.

அதிகபட்சமாக 100 எம்பிபிஎஸ் (mbps) திறன் வேகத்தில் இணையதள சேவை பெற முடியும். அத்துடன் அளவில்லா டேட்டாக்களையும் பதிவிறக்கம் செய்துகொள்ளலாம்.

அடுக்குமாடிக் குடியிருப்பு, வர்த்தகக் கட்டிடம், ஹோட்டல், மருத்துவமனை, கூட்டுறவு வீட்டுவசதி வாரியங்கள் உள் ளிட்ட இடங்களில் இந்த வசதியை ஏற்படுத்தித் தருகி றோம்.

இந்த வசதியைப் பெற விரும்பும் பில்டர்கள், புர மோட்டர்கள் எங்கள் வர்த்தகப் பிரிவு அலுவலகத்தை 044-25212090 என்ற தொலைபேசி எண்ணில் தொடர்பு கொள்ளலாம். www.chennai.bsnl.co.in என்ற இணையதளத்தையும் பார்க்கலாம்.

இவ்வாறு அவர் கூறினார்.

FOLLOW US

Sign up to receive our newsletter in your inbox every day!

WRITE A COMMENT
 
x