Published : 02 Feb 2023 07:23 AM
Last Updated : 02 Feb 2023 07:23 AM
சென்னை: ஆண்டிப்பட்டியில் மாணவர்களைக் கொண்டு கழிவறைகளை சுத்தம் செய்ய வைத்த அரசு பள்ளி மீது தமிழக அரசு நடவடிக்கை எடுக்க வேண்டும் என பாஜக மாநில தலைவர் அண்ணாமலை வலியுறுத்தியுள்ளார்.
இதுதொடர்பாக தனது ட்விட்டர் பக்கத்தில் அவர் தெரிவித்திருப்பதாவது: நாட்டின் எதிர்காலத் தூண்களான பள்ளி மாணவர்களுக்குத் தேவையான அடிப்படை வசதிகளை செய்து கொடுக்காமல், பள்ளிக் கல்வித்துறை அமைச்சர் தேவையற்ற விஷயங்களில் கவனம் செலுத்திக் கொண்டிருக்கிறார்.
ஆண்டிப்பட்டியில் அரசுப் பள்ளி மாணவர்களை கழிவறைகளை சுத்தம் செய்ய வைத்த அவலம் நடத்திருக்கிறது. இதுபோன்ற சம்பவங்கள் தொடர்ந்து நடந்து வருகின்றன. ஆனால், இவற்றைத் தடுக்க அரசு எந்தவித நடவடிக்கையும் எடுத்ததாகத் தெரியவில்லை.
பொருளாதாரத்தில் பின்தங்கிய மாணவர்களின் வாழ்க்கைத் தரத்தை உயர்த்துவதற்காக ஆரம்பிக்கப்பட்ட அரசு பள்ளிகள், அவர்களை மேலும் அவல நிலையில் தள்ளுவதையே தொடர்ந்து செய்துவருகின்றன. தமிழகத்தில் பல தலைவர்களும், அறிஞர்களும், விஞ்ஞானிகளும் அரசு பள்ளிகளில் படித்து முன்னேறியவர்கள் என்பதை திமுக அரசு ஞாபகத்தில் கொள்ள வேண்டும். எனவே, இந்த விஷயத்தில் கடுமையான நடவடிக்கை எடுக்க வேண்டும். இவ்வாறு அதில் கூறப்பட்டுள்ளது.
Sign up to receive our newsletter in your inbox every day!
WRITE A COMMENT