Published : 02 Feb 2023 07:19 AM
Last Updated : 02 Feb 2023 07:19 AM
வேலூர்: தமிழக அரசு கல்வி, மருத்துவ துறையை இரண்டு கண்களாக பாவித்து செயல்படுகிறது என பேராசிரியர் அன்பழகன் பள்ளி மேம்பாட்டு திட்ட அடிக்கல் நாட்டுவிழாவில் முதல்வர் மு.க.ஸ்டாலின் தெரிவித்தார்.
வேலூர் மாவட்டம் காட்பாடி அரசினர் ஆண்கள் மேல்நிலைப் பள்ளியில் ஊரக வளர்ச்சி மற்றும் ஊராட்சி துறை சார்பில் பேராசிரியர் அன்பழகன் பள்ளி மேம்பாட்டு திட்டத்தின் கீழ் ரூ.784 கோடி மதிப்பில் மாநிலம் முழுவதும் 5,351 பள்ளி வகுப்பறை கட்டிடங்கள் கட்டுவதற்கான அடிக்கல் நாட்டு விழா நேற்று நடைபெற்றது.
இந்த நிகழ்ச்சியில் ஊரக வளர்ச்சி மற்றும் ஊராட்சித்துறை அமைச்சர் ஐ.பெரியசாமி வரவேற்றுபேசும்போது, “ஊரக வளர்ச்சித்துறை மற்றும் பள்ளிக்கல்வித் துறைஇணைந்து நடத்திய ஆய்வில் தமிழ்நாட்டில் 11 ஆயிரம் வகுப்பறைகள் கட்ட வேண்டும் என தெரியவந்தது. இதில், 5,351 பள்ளி வகுப்பறைகள் தற்போது கட்டப்படுகிறது” என்றார்.
பேராசிரியர் அன்பழகன் பள்ளிமேம்பாட்டு திட்டத்தை 11 மாவட்டங்களில் காணொலி வாயிலாக தொடங்கி வைத்து முதல்வர் மு.க.ஸ்டாலின் பேசியதாவது:
பள்ளிக் கட்டிடங்கள் புதுப்பிப்பு: இந்த திட்டத்தை பொறுத்தவரை ரூ.2,400 கோடி நிதி ஒதுக்கீடு செய்யப்பட்டு பழுதடைந்த பள்ளிகட்டிடங்கள், பழுதான வகுப்பறை கட்டிடங்களை புதுப்பிக்க வேண்டும் என்ற நல்ல எண்ணத்தில் நடைபெற்று வருகிறது. ரூ.2,400 கோடி நிதியில் முதற் கட்டமாக ரூ.784 கோடி மதிப்பில் 5,351 பள்ளிவகுப்பறை கட்டிடங்கள் கட்ட அடிக்கல் நாட்டப்பட்டுள்ளது. வேலூர் மாவட்டத்தில் 7 ஊராட்சிகளில் ரூ.15.96 கோடி மதிப்பில் 114 வகுப்பறைகள் கட்டப்படுகின்றன.
தமிழக அரசு கல்வி மற்றும்மருத்துவத்துறையை இரண்டு கண்களாக பாவித்து செயல்பட்டு வருகிறோம். நான் முதல்வராக ஆனபிறகு ஒவ்வொரு மாவட்டங்களுக்கும் ஆய்வுக்காக செல்வதுண்டு. அப்போது, பல பள்ளிகளுக்கு சென்று மாணவர்களுடன் உரையாடியபோது காலை உணவு சாப்பிடாமல் பள்ளிக்கு வருவதாக தெரிவித்தார்கள்.
அதிர்ச்சியடைந்த நான் சம்பந்தப்பட்ட அதிகாரிகளை அழைத்துப்பேசி காலை உணவு திட்டத்தை அறிவித்து கடந்தாண்டு செப்.15-ம்தேதி தொடங்கி வைக்கப்பட்டது. இந்த திட்டம் விரைவில் முழுமையாக நிறைவேற்றப்படும்.
பேராசிரியர் அன்பழகன் பள்ளி மேம்பாட்டு திட்டத்தில் கட்டப்படும் பள்ளி வகுப்பறை கட்டிடங்களால் பல பள்ளிகள் மேம்படும். இதை பள்ளி மாணவ, மாணவிகள் பயன்படுத்திக் கொள்ள வேண்டும். இவ்வாறு அவர் பேசினார்.
நிறைவாக பள்ளிக்கல்வித்துறை அமைச்சர் அன்பில் மகேஸ் பொய்யாமொழி நன்றி தெரிவித்தார்.
நிகழ்ச்சியில் அமைச்சர்கள் துரைமுருகன், பொன்முடி, ஆர்.காந்தி, முன்னாள் மத்திய இணை அமைச்சர் ஜெகத்ரட்சகன், வேலூர் நாடாளுமன்ற உறுப்பினர் கதிர்ஆனந்த், சட்டப்பேரவை உறுப்பினர்கள் ஏ.பி.நந்தகுமார், கார்த்திகேயன், அமலு விஜயன்,வேலூர் மாநகராட்சி மேயர் சுஜாதா ஆனந்தகுமார், பள்ளிக்கல்வித்துறை முதன்மை செயலாளர் காகர்லா உஷா, ஊரக வளர்ச்சி மற்றும் ஊராட்சித்துறை ஆணையர் தாரேஸ் அஹ்மது, வேலூர் மாவட்ட ஆட்சியர் குமாரவேல் பாண்டியன் உள்ளிட்டோர் பங் கேற்றனர்.
பேராசிரியர் அன்பழகன் பள்ளி மேம்பாட்டு திட்டத்தில் கட்டப்படும் பள்ளி வகுப்பறை கட்டிடங்களால் பல பள்ளிகள் மேம்படும். இதை பள்ளி மாணவ, மாணவிகள் பயன்படுத்திக் கொள்ள வேண்டும்.
Sign up to receive our newsletter in your inbox every day!
WRITE A COMMENT