Published : 26 May 2017 08:26 AM
Last Updated : 26 May 2017 08:26 AM
சென்னையில் மூதாட்டிகளின் நகைகள் தொடர்ந்து வழிப்பறி செய்யப்பட்டன. இதைத் தொடர்ந்து செயின் பறிப்பு குற்றவாளிகளின் பட்டியலை போலீஸார் தயாரித்தனர். இதில் 575 பேர் இடம்பெற்றுள்ளதாக தகவல் வெளியாகியுள்ளது.
சென்னையில் கடந்த செவ்வாய் அன்று ஒரே நாளில் 4 மூதாட்டிகளின் கவனத்தை திசை திருப்பி 38 பவுன் நகைகள் நூதன முறையில் கொள்ளையடிக்கப்பட்டன.
வயது முதிர்ந்த பெண்களிடம் தங்களை போலீஸ் என கூறி அறிமுகம் செய்துகொண்ட இளைஞர்கள் சிலர் கலவரம் நடப்பதாகவும், திருடர்களின் நடமாட்டம் இருப்பதாகவும் கூறி நகைகளை நூதன முறையில் பறித்துச் சென்றனர்.
இதுகுறித்து சென்னை காவல் ஆணையர் ஏ.கே.விஸ்வநாதன் உத்தரப்படி போலீஸார் தீவிர விசாரணை நடத்தி வருகின்றனர். நகைகளை பறிகொடுத்த மூதாட்டிகளிடம் நகையை பறித்துச் சென்றவர்கள் எப்படி இருப்பார்கள் என அங்க அடையாளங்கள் விசாரிக்கப்பட்டன.
ஈரான் திருடர்கள்
இதில், ஈரானை சேர்ந்த வழிப்பறி திருடர்கள் நகை திருட்டில் ஈடுபட்டிருக்கலாம் என்று போலீஸார் சந்தேகிக்கின்றனர். இதேபோல் சென்னையில் உள்ள செயின் பறிப்பு திருடர்களின் பட்டியலை போலீஸார் எடுத்துள்ளனர்.
இதில் தற்போது 375 செயின் பறிப்பு குற்றவாளிகள் பட்டியலில் இருப்பதாகவும், வெளி மாவட்டத்தைச் சேர்ந்த மேலும் சுமார் 200 பேர் இடம் பெற்றுள்ளதாகவும் போலீஸ் தரப்பில் தெரிவிக்கப்பட்டுள்ளது. இவர்களை போலீஸார் கண்காணித்து வருகின்றனர்.
இதுகுறித்து போலீஸ் அதிகாரி ஒருவர் கூறும்போது, “சென்னையில் 2012-ல் 450 செயின் பறிப்பு திருடர்கள் அடையாளம் காணப்பட்டனர். 2013-ல் 300 பேர், 2014-ல் 300 பேர், 2015-ல் 400 பேர், 2016-ல் 375 பேர் செயின் பறிப்பு குற்றவாளிகள் பட்டியலில் இருந்தனர்.
இதுபோக வெளியூரைச் சேர்ந்த 150 முதல் 200 பேர் வரை சென்னையில் செயின் பறிப்பு குற்ற செயல்களில் ஈடுபட்டனர். பெரும்பாலானவர்களை கைது செய்தோம். ஒரு சிலர் வெளி மாநிலம், மாவட்டங்களுக்கு தப்பினர். அனைவரையும் கண்காணித்து வருகிறோம். சட்டம் ஒழுங்கு கட்டுக்குள் இருக்கிறது” என்றார்.
Sign up to receive our newsletter in your inbox every day!
WRITE A COMMENT