Published : 01 Feb 2023 04:39 PM
Last Updated : 01 Feb 2023 04:39 PM

கள்ளக்குறிச்சி மாணவி மரண வழக்கில் விசாரணை நிறைவு: உயர் நீதிமன்றத்தில் சிபிசிஐடி தகவல்

கோப்புப்படம்

சென்னை: கள்ளக்குறிச்சி பள்ளி மாணவி மரண வழக்கில் விசாரணை நிறைவடைந்துள்ளது. ஒரு மாதத்தில் இறுதி அறிக்கை தாக்கல் செய்யப்படும் என்று சிபிசிஐடி சென்னை உயர் நீதிமன்றத்தில் தெரிவித்துள்ளது.

கள்ளக்குறிச்சி மாவட்டம் கனியாமூர் பள்ளி மாணவி மரணத்தில் நியாயமான விசாரணை கோரி மாணவியின் தந்தை ராமலிங்கம் சென்னை உயர் நீதிமன்றத்தில் வழக்கு தொடந்திருந்தார்.

இந்த வழக்கு நீதிபதி ஜி.சந்திரசேகரன் முன்பு இன்று விசாரணைக்கு வந்தது. அப்போது ஆஜரான மாணவியின் பெற்றோர் தரப்பு வழக்கறிஞர், "மாணவி பயன்படுத்திய செல்போன் ஜனவரி 20-ம் தேதி காவல்துறையிடம் ஒப்படைக்கப்பட்டது. மேலும் ஜிப்மர் மருத்துவ குழு நடத்திய பிரேத பரிசோதனையின் அறிக்கை தங்களுக்கு வழங்கப்படவில்லை" என்று கூறினார்.

இதையடுத்து, விசாரணையின் தற்போதைய நிலை என்ன என்பது குறித்து நீதிபதி கேள்வி எழுப்பினார். அப்போது, விசாரணை நிலை குறித்த அறிக்கையை சீலிடப்பட்ட உறையில் அரசு தரப்பு வழக்கறிஞர் சந்தோஷ் தாக்கல் செய்தார்.

“மாணவி பயன்படுத்திய செல்போன் தடயவியல் சோதனைக்கு அனுப்பப்பட்டுள்ளது. தடயவியல் துறையின் அறிக்கைக்காக காத்திருக்கிறோம். மற்ற விசாரணை நிறைவடைந்து விட்டது. தடயவியல் துறை அறிக்கை கிடைத்தவுடன் ஒரு மாதத்தில் விசாரணை நீதிமன்றத்தில் இறுதி அறிக்கை தாக்கல் செய்யப்படும்" என்று அவர் கூறினார்.

இதனையடுத்து, ஜிப்மர் குழு பிரேத பரிசோதனை அறிக்கையை வழங்க கோரி விசாரணை நீதிமன்றத்தை அணுக மனுதாரர் தரப்புக்கு உத்தரவிட்ட நீதிபதி, விசாரணையை நான்கு வாரங்களுக்கு ஒத்திவைத்தார்.

FOLLOW US

தவறவிடாதீர்!

Sign up to receive our newsletter in your inbox every day!

WRITE A COMMENT
 
x