Published : 01 Feb 2023 03:44 PM
Last Updated : 01 Feb 2023 03:44 PM

தமிழகம் முழுவதும் விரைவில் காலை உணவுத் திட்டம்: முதல்வர் ஸ்டாலின் உறுதி

வேலூரில் பேராசிரியர் அன்பழகன் பள்ளி மேம்பாட்டுத் திட்டத்தின் கீழ் பல்வேறு புதிய திட்டங்களுக்கு அடிக்கல் நாட்டிய முதல்வர் ஸ்டாலின்

வேலூர்: "காலை உணவு திட்டத்தை அறிமுகப்படுத்தி, கடந்த செப்டம்பர் மாதம் 15-ம் தேதி அண்ணா பிறந்தநாள் அன்று அந்தத் திட்டம் தொடங்கப்பட்டு ஒரு பகுதியிலே, ஒரு சில மாவட்டங்களில் அது நிறைவேற்றப்பட்டிருக்கிறது. விரைவில் முழுமையாக அதுவும் நிறைவேற்றப்பட இருக்கிறது" என்று தமிழக முதல்வர் மு.க.ஸ்டாலின் கூறியுள்ளார்.

வேலூர் மாவட்டத்தில், பேராசிரியர் அன்பழகன் பள்ளி மேம்பாட்டுத் திட்டத்தின் கீழ் ஊரக வளர்ச்சி மற்றும் ஊராட்சித் துறை மூலம் தமிழ்நாடு முழுவதும் 784 கோடி ரூபாய் மதிப்பீட்டில் 5351 புதிய பள்ளி வகுப்பறைக் கட்டடங்கள் கட்டும் பணிக்கான குழந்தை நேய பள்ளி உட்கட்டமைப்பு மேம்பாட்டுத் திட்டத்தை தமிழக முதல்வர் மு.க.ஸ்டாலின் புதன்கிழமை (பிப்.1) தொடங்கி வைத்தார். அம்மாவட்டத்தில் உள்ள 7 ஊராட்சி ஒன்றியங்களில் உள்ள 55 தொடக்க மற்றும் நடுநிலைப் பள்ளிகளில் ரூ.15.96 கோடி மதிப்பீட்டில் கட்டப்படவுள்ள 114 வகுப்பறைக் கட்டடங்களுக்கு முதல்வர் அடிக்கல் நாட்டினார்.

பின்னர் இந்த நிகழ்வில் முதல்வர் ஸ்டாலின் பேசியது: "நான் ஒவ்வொரு நிகழ்ச்சியிலும் பங்கேற்கின்ற நேரத்தில் தவறாமல் ஒன்றைக் குறிப்பிட்டுச் சொல்வதுண்டு. நம்முடைய அரசைப் பொறுத்தவரைக்கும் கல்வியை, மருத்துவத்தை இரண்டு கண்களாக நாங்கள் பாவித்து அதற்காக நாங்கள் பணியாற்றிக் கொண்டிருக்கிறோம் என்று பலமுறை நான் எடுத்துச் சொன்னதுண்டு. அந்த வகையில் தான், இன்றைக்கு இந்தத் திட்டம் அடிக்கல் நாட்டிவைக்கப்பட்டு தொடங்கி வைக்கப்பட்டிருக்கிறது.

நான் முதல்வராக பொறுப்பேற்றுக் கொண்டு நம்முடைய ஆட்சி பொறுப்பேற்றுதற்கு பின்னால், பல்வேறு நிகழ்ச்சிகளுக்கு சென்ற நேரத்தில், அந்தந்த மாவட்டங்களில் அந்தந்த பகுதிகளில் திடீர் திடீரென்று ஆய்வுக்கு நான் செல்வதுண்டு. இன்ஸ்பெக்ஷன் என்ற பெயரிலே பல பள்ளிகளுக்கு சென்றபோது, அந்த பள்ளியிலே படித்துக் கொண்டிருக்கக்கூடிய மாணவர்கள், மாணவியர்கள் எல்லாம் என்னிடத்திலே சொல்வதுண்டு, நாங்கள் காலையில் கூட உணவு அருந்தாமல் பள்ளிக்கு வந்து விடுகிறோம் என்று உருக்கத்தோடு சொன்னார்கள்.

அதைக் கேட்டுவிட்டு நான் அதிர்ச்சி அடைந்தேன். அதற்குப் பின்னால் உடனடியாக சம்பந்தப்பட்ட அதிகாரிகளையெல்லாம் அழைத்து, அதற்குப் பிறகு ஆய்வு நடத்தி அதைத் தொடர்ந்துதான், எப்படி மதிய உணவுத் திட்டத்தை நாம் அரசின் சார்பில் நிறைவேற்றிக் கொண்டிருக்கிறோமோ, அதேபோல் காலை உணவு திட்டம் ஒன்றை கொண்டு வர வேண்டும் என்று முடிவு செய்து, அந்த திட்டத்தையும் அறிமுகப்படுத்தி, கடந்த செப்டம்பர் மாதம் 15 ஆம் தேதி அண்ணா பிறந்தநாள் அன்று அந்தத் திட்டம் தொடங்கப்பட்டு ஒரு பகுதியிலே, ஒரு சில மாவட்டங்களில் அது நிறைவேற்றப்பட்டிருக்கிறது. விரைவில் முழுமையாக அதுவும் நிறைவேற்றப்பட இருக்கிறது.

அதேபோலத்தான் பல பள்ளிக் கட்டடங்கள் இடிந்த நிலையில், வகுப்பறைகள் இல்லாத வகையில் மரத்தடி நிழல்களில் உட்கார வைத்து அதில் வகுப்புகள் நடத்தக்கூடிய அந்த காட்சிகளையும் நாங்கள் கண்கூடாக பார்த்தோம். இதையெல்லாம் உடனடியாக சீர் செய்ய வேண்டும், அந்த மாணவர்கள் வசதியாக நல்லவித அடிப்படை வசதிகளை ஏற்றுக்கொண்டு அவர்கள் படிக்க வேண்டும்.

அப்போதுதான் அவர்களுடைய சிந்தனைகள் அந்தக் கல்வியை போய் சேர முடியும் என்பதை ஆழ்ந்து சிந்தித்து, அதற்குப் பிறகு பேராசிரியர் அன்பழகன் பெயரிலே இந்த பள்ளி மேம்பாட்டுத் திட்டத்தினை அறிவித்திருக்கிறோம். அதற்காக 2400 கோடி ரூபாய் ஒதுக்கீடு செய்து அந்தத் திட்டத்தை நிறைவேற்ற வேண்டும் என்று முடிவு செய்து, அந்தப் பணியை நிறைவேற்றிக் கொண்டிருக்கிறோம்.

எனவே இதன் மூலமாக பல பள்ளிகள் பாழடைந்திருக்கக்கூடிய, சீரழிந்து இருக்கக்கூடிய அந்த பள்ளிகளெல்லாம் இன்றைக்கு மேம்படக்கூடிய ஒரு சூழ்நிலையை உருவாக்கியிருக்கிறோம். இதை நல்ல வகையில், அந்தந்த பகுதியிலே இருக்கக்கூடிய அந்தந்த பள்ளி மாணவர்கள் பயன்படுத்திக்கொள்ள வேண்டும் என்று நான் இந்த நேரத்திலே உங்களை எல்லாம் அன்போடு கேட்டுக் கொள்கிறேன்" என்று அவர் பேசினார்.

FOLLOW US

தவறவிடாதீர்!

Sign up to receive our newsletter in your inbox every day!

WRITE A COMMENT
 
x