Published : 01 Feb 2023 02:50 PM
Last Updated : 01 Feb 2023 02:50 PM

மத்திய பட்ஜெட் 2023-24 | புதிய வருமான வரி விதிப்பு முறைக்கு நெட்டித் தள்ளும் வஞ்சக வலை: முத்தரசன்

சென்னை: "கர்நாடக மாநிலத்திற்கு சிறப்பு நிதியாக ரூ.5 ஆயிரம் கோடிக்கும் அதிகமான நிதி வழங்கும் நிதிநிலை அறிக்கை, தமிழ்நாடு அரசு வலியுறுத்தி ஜிஎஸ்டி இழப்பீடு உட்பட மாநிலத்திற்கு வழங்க வேண்டிய தொகையை வழங்க மறந்து விட்டது. அரசியல் காரணங்களை அடிப்படையாகக் கொண்டு பாரபட்சம் காட்டுகிறது" என்று இந்திய கம்யூனிஸ்ட் கட்சியின் மாநிலச் செயலாளர் முத்தரசன் கூறியுள்ளார்.

இது குறித்து அவர் வெளியிட்டுள்ள அறிக்கையில், “ஒன்றிய அரசின் நிதியமைச்சர் நிர்மலா சீதாராமன் 2023 - 24-ஆம் ஆண்டிற்கான நிதிநிலை அறிக்கையை நாடாளுமன்றத்தில் இன்று (01.02.2023) தாக்கல் செய்துள்ளார். அடுத்த ஆண்டு (2024) நாடாளுமன்ற தேர்தலை சந்திக்க வேண்டும் என்பதை கருத்தில் கொண்டு நிதிநிலை அறிக்கை முன்வைக்கப்பட்டுள்ளது. வருமான வரி எல்லைக்குள் இருப்போர் வரி விலக்கு பெறும் உச்ச வரம்பு ஆண்டு வருமானம் ரு.5 லட்சமாக உயர்த்தப்படும் என எதிர்பார்ப்பு நிறைவேறவில்லை. பழைய வரி விதிப்பில் இருந்து புதிய வரி விதிப்பு முறைக்கு நெட்டித் தள்ளும் வஞ்சக வலை விரிக்கப்பட்டுள்ளது.

நாட்டின் பொருளாதாரத்தில் முதுகெலும்பாகவும், சுயசார்ப்புக்கு அடித்தளமாகவும் விளங்கி வரும் சிறு, குறு, நடுத்தரத் தொழில் துறைக்கு ரூ. 9 ஆயிரம் கோடி என்பது கடலில் கரைத்து விட்ட பெருங்காயமாகும். விவசாயிகள் விளை பொருட்களுக்கு குறைந்த பட்ச ஆதரவு விலை நிர்ணயிக்க சட்டபூர்வ ஏற்பாடுகள் செய்வதில் நிதிநிலை அறிக்கை கவனம் செலுத்தவில்லை. மாறாக ரூ.20 லட்சம் கோடி கடன் வழங்கப்படும் என்பது கானல் நீரை அள்ளிக் குடித்து தாகம் தீர்த்துக் கொள் என்று கூறுவதாகும்.

கட்டுமானத் துறைக்கு உதவிக்கரம் நீட்டாத நிதிநிலை அறிக்கை, கட்டுமானத் தொழிலாளர்கள் உள்ளிட்ட 93 சதவீத அமைப்புசாராத் தொழிலாளர்கள், புலம்பெயர்ந்த தொழிலாளர்கள் நலனும் புறக்கணிக்கப்பட்டிருக்கிறது. மூத்த குடிமக்களின் சேமிப்புத் தொகையின் உச்சவரம்பை ரூ. 30 லட்சமாக உயர்த்தியுள்ள அதே நேரத்தில், ஆயுள் காப்பீட்டு நிறுவனம் மற்றும் பாரத ஸ்டேட் வங்கியின் முதலீட்டை பெற்றுள்ள அதானி குழும நிறுவனத்தின் கணக்கியல் மோசடி குறித்து ஒரு வார்த்தையும் கூறாமல் தனது கார்ப்ரேட் நட்புக்கு விசுவாசம் காட்டியுள்ளது.

கர்நாடக மாநிலத்திற்கு சிறப்பு நிதியாக ரூ.5 ஆயிரம் கோடிக்கும் அதிகமான நிதி வழங்கும் நிதிநிலை அறிக்கை, தமிழ்நாடு அரசு வலியுறுத்தி ஜிஎஸ்டி இழப்பீடு உட்பட மாநிலத்திற்கு வழங்க வேண்டிய தொகையை வழங்க மறந்து விட்டது. அரசியல் காரணங்களை அடிப்படையாகக் கொண்டு பாரபட்சம் காட்டுகிறது.

மகாத்மா காந்தி தேசிய ஊரக வேலை உறுதியளிப்புத் திட்டத்தில் ஆண்டுக்கு 200 நாள் வேலை வழங்க வேண்டும், தினசரி வழங்கும் குறைந்தபட்ச ஊதியத்தை ரூ.600 ஆக நிர்ணயித்து வழங்க வேண்டும் என வலியுறுத்தி வரும் நிலையில், அது பற்றி அமைதி காக்கும் நிதி நிலையறிக்கை 25 கோடி கிராமத் தொழிலாளர்களை வஞ்சித்துள்ளது.

நாட்டின் இருபுறமும் நீண்ட கடற்கரையும், லட்சக்கணக்கான மீனவ குடும்பங்களும், பாரம்பரியமான மீன்பிடித் தொழிலும் நடந்து வருவதை கருத்தில் கொள்ளாமல் மரபணு மாற்ற மீன் உற்பத்திக்கு மட்டுமே நிதிநிலை அறிக்கை கவனம் செலுத்தியிருப்பது மீனவர் சமூகத்திற்கு இழைக்கப்பட்ட அநீதியாகும்.

மொத்தத்தில் வாக்களித்து அதிகாரம் வழங்கிய வாக்காளர்களையும், நாட்டின் குடிமக்களையும் வழக்கம் போல ஏமாற்றியுள்ள நிதிநிலை அறிக்கை, அதிகார மையத்தில் அழுத்தம் தரும் பன்னாட்டு நிதி மூலதன சக்திகளின் கார்ப்பரேட் குழும நிறுவனங்களுக்கு ஆதரவாக பச்சை கொடி காட்டியுள்ளது என்பதை இந்தியக் கம்யூனிஸ்ட் கட்சியின் தமிழ்நாடு மாநில செயற்குழு தெரிவித்துக் கொள்கிறது" என்று அவர் கூறியுள்ளார்.

FOLLOW US

தவறவிடாதீர்!

Sign up to receive our newsletter in your inbox every day!

WRITE A COMMENT
 
x