Published : 01 Feb 2023 10:08 AM
Last Updated : 01 Feb 2023 10:08 AM
ஈரோடு: கடந்த சட்டப்பேரவை பொதுத் தேர்தலில், கூட்டணிக் கட்சிக்காக தனது வாய்ப்பை விட்டுக் கொடுத்த முன்னாள் எம்.எல்.ஏ. கே.எஸ்.தென்னரசு, தற்போதைய ஈரோடு கிழக்கு தொகுதி இடைத்தேர்தலில் அதிமுக வேட்பாளராக அறிவிக்கப்பட்டுள்ளார்.
ஈரோடு கிழக்கு தொகுதி இடைத்தேர்தல் பிப்ரவரி 27-ம் தேதி நடக்கிறது. இத்தொகுதியில் திமுக கூட்டணியின் சார்பில் காங்கிரஸ் வேட்பாளர் இளங்கோவன் போட்டியிடுகிறார். இந்நிலையில், அதிமுக சார்பில் முன்னாள் எம்.எல்.ஏ. கே.எஸ்.தென்னரசு போட்டியிடுவார் என முன்னாள் முதல்வர் பழனிசாமி இன்று அறிவித்துள்ளார்.
கட்சி பொறுப்புகள்: ஈரோடு கிழக்கு தொகுதி வேட்பாளராக அறிவிக்கப்பட்டுள்ள கே.எஸ். தென்னரசு (65), 1988-ம் ஆண்டு முதல் அதிமுகவில் பல்வேறு பொறுப்புகளை வகித்து வந்துள்ளார். 1988-ம் ஆண்டு ஈரோடு நகர அ.தி.மு.க. செயலாளர், 1992-ம் ஆண்டு ஈரோடு நகர இணை செயலாளர், 1995-ம் ஆண்டு நகர செயலாளர், 1999-ம் ஆண்டு கிழக்கு மாவட்ட எம்.ஜி.ஆர். மன்ற செயலாளர், 2000-ம் ஆண்டு மீண்டும் ஈரோடு நகர அ.தி.மு.க. செயலாளர், 2010-ம் ஆண்டு மாநகர் மாவட்ட எம்.ஜி.ஆர். மன்ற தலைவர், 2011-ம் ஆண்டு முதல் ஈரோடு கிழக்கு தொகுதி செயலாளர் பொறுப்பினை வகித்துள்ளார்.
கடந்த 2001-ம் ஆண்டு நடந்த பொதுத்தேர்தலில், ஈரோடு தொகுதியில் வெற்றி பெற்று எம்.எல்.ஏ.வாக பணியாற்றினார். அதன்பின், ரோடு சட்டப்பேரவை தொகுதி ஈரோடு கிழக்கு, மேற்கு என பிரிக்கப்பட்டது.
கூட்டணியால் பறிபோன வாய்ப்பு: இந்நிலையில் கடந்த 2016-ம் ஆண்டு ஈரோடு கிழக்கு தொகுதியில் போட்டியிட மீண்டும் கே.எஸ்.தென்னரசுக்கு வாய்ப்பு வழங்கப்பட்டு, வெற்றி பெற்றார். 2021-ம் ஆண்டு அதிமுக கூட்டணியில் ஈரோடு கிழக்கு தொகுதி தமாகாவிற்கு ஒதுக்கப்பட்டது. இதனால், தென்னரசுவிற்கான வாய்ப்பு பறிபோனது. இந்த தேர்தலில் வெற்றி பெற்ற ஈரோடு கிழக்கு தொகுதி காங்கிரஸ் எம்.எல்.ஏ. திருமகன் ஈவெரா மறைவையடுத்து இடைத்தேர்தல் அறிவிக்கப்பட்டது.
ஈரோடு கிழக்கில் ஏற்கனவே போட்டியிட்ட கூட்டணிக் கட்சியான தமாகாவிடம் இருந்து தாங்கள் போட்டியிடுவதாக கூறி முன்னாள் முதல்வர் பழனிசாமி கேட்டுப் பெற்றார். தேர்தல் பணி, வேட்பாளர் தேர்வு தொடர்பாக நான்கு முறை நிர்வாகிகளிடம் தீவிர ஆலோசனை மேற்கொண்ட பழனிசாமி, தற்போது கே.எஸ். தென்னரசிற்கு மீண்டும் வாய்ப்பு வழங்கி, வேட்பாளராக அறிவித்துள்ளார்.
பல்வேறு பொறுப்புகள்: அதிமுக வேட்பாளராக அறிவிக்கப்பட்டுள்ள கே.எஸ்.தென்னரசு, அதிமுக நடத்திய பல்வேறு போராட்டங்களில் பங்கேற்று 8 முறை சிறை சென்றுள்ளார். ஸ்கிரீன் பிரிண்டிங் பட்டறை நடத்தி வரும் கே.எஸ். தென்னரசு, கடந்த 25 ஆண்டுகளாக ஈரோடு மாவட்ட சுமைதூக்குவோர் மத்திய சங்க பொதுச்செயலாளராக செயல்பட்டு வருகிறார். பெரியார் மாவட்ட தொழில் வர்த்தகசபை துணைத்தலைவராக 22 ஆண்டுகள், ஈரோடு ஸ்கிரீன் பிரிண்டிங் அசோசியேசன் தலைவராக 20 ஆண்டுகள், செயலாளராக 3 ஆண்டுகள், தமிழ்நாடு பிரிண்டிங் -பிராசசிங் சம்மேளன மாநில தலைவராக 16 ஆண்டுகள் பதவி வகித்து உள்ளார். தமிழ்நாடு பெட்ரோலியம் டீலர் அசோசியேசன் மாவட்ட துணைத்தலைவராகவும், ஈரோடு மாவட்ட பாரத் பெட்ரோலியம் டீலர் அசோசியேசன் தலைவராகவும் தொடர்ந்து செயல்பட்டு வருகிறார்.
குடும்பம்: ஈரோடு கருங்கல்பாளையம் சொக்காய்தோட்டம் பகுதியை சேர்ந்த இவர், மனைவி டி.பத்மினி, மகன் டி.கலையரசன், மருமகள் வி.சுகாசினி, மகள் டி.கலைவாணி, மருமகன் எஸ்.பரணிதரன் ஆகியோருடன் வசித்து வருகிறார்.
Sign up to receive our newsletter in your inbox every day!
WRITE A COMMENT