Published : 01 Feb 2023 06:31 AM
Last Updated : 01 Feb 2023 06:31 AM

தூத்துக்குடி அனல் மின் நிலையத்துக்கு ரூ.325 கோடியில் நிலக்கரி இறக்கும் இயந்திரங்கள் - முதல்வர் மு.க.ஸ்டாலின் தொடங்கி வைத்தார்

தூத்துக்குடி துறைமுகம் தளம் 1-ல் ரூ.325 கோடி செலவில் புதிதாக நிறுவப்பட்டுள்ள அதிக திறன் கொண்ட 2 நிலக்கரி கையாளும் இயந்திரங்களின் செயல்பாடுகளை முதல்வர் மு.க.ஸ்டாலின் சென்னை தலைமைச் செயலகத்தில், காணொலிக் காட்சி மூலம் நேற்று தொடங்கி வைத்தார். இந் நிகழ்ச்சியில் அமைச்சர்கள் பி.கீதா ஜீவன், செந்தில்பாலாஜி, தலைமைச் செயலர் வெ.இறையன்பு, துறை செயலர் ரமேஷ்சந்த் மீனா, மற்றும் அரசு உயர் அலுவலர்கள் கலந்து கொண்டனர்.

சென்னை: தமிழ்நாடு மின் உற்பத்தி மற்றும் பகிர்மானக் கழகத்தால் தூத்துக்குடி அனல் மின் நிலையத்துக்காக தூத்துக்குடி துறைமுகம் தளம்-1ல் ரூ.325 கோடியில் புதிதாக நிறுவப்பட்டுள்ள அதிக திறன் கொண்ட 2 நிலக்கரி இறக்கும் இயந்திரங்களின் செயல்பாட்டை முதல்வர் மு.க.ஸ்டாலின் தொடங்கி வைத்தார்.

இதுகுறித்து தமிழக அரசு நேற்று வெளியிட்ட செய்திக்குறிப்பு:

தூத்துக்குடி அனல் மின் நிலையத்துக்காக தற்போது, தூத்துக்குடி துறைமுகம் தளம்-1 மற்றும் தளம் 2–ல் நிலக்கரியை கையாள சுமார் 50ஆயிரம் டன் முதல் 55 ஆயிரம் டன் கொள்ளளவு கொண்ட கிரேனுடன் கூடிய சிறிய கப்பல்கள் மாதம் ஒன்றுக்கு 10 முதல் 12 வரை பயன்படுத்தப்பட்டு வருகின்றன.

அதிக அளவு நிலக்கரியை குறுகிய காலத்தில் கையாளவும், தூத்துக்குடி அனல் மின் நிலையத்தில் உள்ள 5 அலகுகளிலும் தலா 210 மெகாவாட் முழு அளவில் மின் உற்பத்தி தடையின்றி நடைபெறவும், தமிழகத்தின் மின் தேவையை பூர்த்தி செய்யவும், 70 ஆயிரம் டன் முதல் 75 ஆயிரம் டன் கொள்ளளவு கொண்ட பெரிய கப்பல்களிலிருந்து நிலக்கரியை விரைவாக இறக்குவதற்காக திட்டம் தயாரிக்கப்பட்டது.

இந்நிலையில், தமிழ்நாடு மின் உற்பத்தி மற்றும் பகிர்மானக் கழகத்தால் ரூ. 325 கோடியில் தூத்துக்குடி துறைமுகம் தளம்-1-ல் நிறுவப்பட்டுள்ள அதிக திறன் கொண்ட புதிய இரண்டு நிலக்கரி கையாளும் இயந்திரங்களின் செயல்பாடுகளை முதல்வர் மு.க.ஸ்டாலின் நேற்று தொடங்கி வைத்தார்.

இப்புதிய இயந்திரங்கள் வாயிலாக குறுகிய காலத்தில் 6 முதல் 8 பெரிய கப்பல்கள் மூலம், கப்பல் ஒன்றுக்கு 70 ஆயிரம் முதல் 75 ஆயிரம் டன் வரை அதிக கொள்ளளவு நிலக்கரியை இறக்க முடியும். இதனால், நிலக்கரியை கையாளும் சரக்குக் கட்டணம் டன் ஒன்றுக்கு ரூ.700-லிருந்து ரூ.540 ஆக குறையும். இதனால், ஆண்டுக்கு ரூ. 80 கோடி தமிழ்நாடு மின் உற்பத்தி மற்றும் பகிர்மானக் கழகத்துக்கு சேமிப்பாகக் கிடைக்கும்.

நிகழ்ச்சியில் அமைச்சர்கள் பி.கீதாஜீவன், வி.செந்தில்பாலாஜி, தலைமைச் செயலர் வெ.இறையன்பு, எரிசக்தித்துறை செயலர் ரமேஷ்சந்த் மீனா, இயக்குநர் (பகிர்மானம்) மா.சிவலிங்கராஜன், இயக்குநர் (உற்பத்தி) த.ராசேந்திரன், இயக்குநர் (திட்டங்கள்) மா.ராமச்சந்திரன் மற்றும் அரசு உயர் அலுவலர்கள் கலந்து கொண்டனர்.

இவ்வாறு அதில் கூறப்பட்டுள்ளது.

FOLLOW US

தவறவிடாதீர்!

Sign up to receive our newsletter in your inbox every day!

WRITE A COMMENT
 
x