Published : 31 Jan 2023 06:57 PM
Last Updated : 31 Jan 2023 06:57 PM

மதுரை மாநகராட்சியில் கருத்தடை பணி பாதிப்பால் பெருகிய தெரு நாய்கள்: குழந்தைகள், முதியவர்கள் அச்சம்

மதுரை: மதுரையில் மாநகராட்சி 100 வார்டுகளுக்கு 2 நாய் பிடிக்கும் வாகனங்களும், கருத்தடை செய்வதற்கு ஒரே ஒரு மருத்துவரும் மட்டுமே உள்ளதால் கருத்தடை அறுவை சிகிச்சைப் பணி பாதிக்கப்பட்டு தெரு நாய்கள் எண்ணிக்கை பெருகியுள்ளது.

கடந்த 2015-ம் ஆண்டு கணக்கெடுப்பின்படி மதுரை மாநகராட்சியில் மட்டுமே 47,000 தெரு நாய்கள் இருந்துள்ளன. அதன்பிறகு தெரு நாய்கள் கணக்கெடுப்பு நடத்தப்படவில்லை. அதனால், தெரு நாய்கள் எண்ணிக்கை 80 ஆயிரத்தை தாண்டியிருக்க கூடும் என மாநகராட்சி சுகாதாரத்துறை அதிகாரிகள் தெரிவிக்கின்றனர். தெரு நாய்கள் இனப் பெருக்கத்தை கட்டுப்படுத்த மாநகராட்சியில் வெள்ளக்கல், செல்லூர் ஆகிய இரண்டு இடங்களில் மாநகராட்சி கருத்தடை மையங்கள் செயல்படுகின்றன.

மாநகராட்சி சுகாதாரத் துறை பணியாளர்கள், அதிகமாக தெரு நாய்கள் சுற்றித் திரியும் தெருக்கள், சாலைகளை கண்டறிந்து தெரு நாய்களை பிடித்து அவற்றை கருத்தடை செய்வதற்கு இந்த நாய்கள் கருத்தடை மையங்களுக்கு கொண்டு செல்கின்றனர். காப்பகத்தில் உள்ள கால்நடை மருத்துவர், தெரு நாய்களுக்கு கருத்தடை அறுவை சிகிச்சை செய்கின்றனர். அதன்பின், மாநகராட்சிப் பணியார்கள் தெரு நாய்களை பிடித்த இடத்திலே கொண்டு வந்து விடுகின்றனர். ஆனாலும், கடந்த 5 ஆண்டுகளாக மதுரை மாநகராட்சி வார்டுகளில் தெரு நாய்கள் எண்ணிக்கையை மாநகராட்சி சுகாதாரத் துறையால் கட்டுப்படுத்த முடியவில்லை.

ஒவ்வொரு தெருவிலும் 10-க்கும் குறையாத தெரு நாய்கள் கூட்டம், கூட்டமாக உலா வருகின்றன. அவை பள்ளிக் குழந்தைகளை தெருக்களில், சாலைகளில் நடமாட விடுவதில்லை. தெரியாமல் மாட்டிக்கொள்ளும் குழந்தைகளையும், முதியவர்களையும், பெண்களையும் தெருநாய்கள் விரட்டி கடிக்கின்றன. அதனால், அரசு ராஜாஜி மருத்துவமனை நாய் கடி சிகிச்சைக்கு வருவோர் எண்ணிக்க அதிகரித்துள்ளது.

தெரு நாய்களை பிடிக்க 100 வார்டுகளுக்கு 2 வாகனங்கள் மட்டுமே இருப்பதாலும், அதற்கு கருத்தடை அறுவை சிகிச்சை செய்வதற்கு ஒரே ஒரு மாநகராட்சி கால்நடை மருத்துவரும், என்ஜிஓ - சார்பில் 2 மருத்துவர்களும் மட்டுமே உள்ளனர். நாய் பிடிக்கும் வாகனங்களும், அதற்கான பணியாளர்கள் பற்றாக்குறையால் ஒரு நாளைக்கு குறைந்தப்பட்சம் 6 முதல் 12 தெருநாய்களை மட்டுமே பிடித்து கருத்தடை அறுவை சிகிச்சை செய்ய முடிகிறது.

ஒரு வார்டுக்கு மாதத்தில் ஒரு முறை நாய் பிடிக்கும் வாகனங்கள் வந்தாலே அபூர்வமாக உள்ளது. மதுரை மாநகராட்சியில் உள்ள தெரு நாய்கள் எண்ணிக்கை அடிப்படையில் குறைந்தப்பட்சம் 4 நாய்கள் கருத்தடை மையங்களும், 4 மாநகராட்சி கால்நடை மருத்துவர்களும், 5 நாய் பிடிக்கும் வாகனங்களும் இருக்க வேண்டும் என்று சுகாதரத்துறை அதிகாரிகள் தெரிவிக்கின்றனர்.

ஆனால், ஒரே மாநகராட்சி மருத்துவர், 2 நாய் பிடிக்கும் வாகனங்களை வைத்து கொண்டு மாநகராட்சி சுகாதாரத் துறையால் தெரு நாய்கள் இனப்பெருக்கத்தை கட்டுப்படுத்த முடியவில்லை. கடந்த 5 ஆண்டாக மாநகராட்சியில் கவுன்சிலர்கள் இல்லாததால் பொதுமக்கள் அதிகாரிகளிடம் முறையிட்டனர். ஆனால், அதிகாரிகள் செவிசாய்க்காததால் தெரு நாய்கள் எண்ணிக்கை பெருகிவிட்டது.

தற்போது கவுன்சிலர் தேர்ந்தெடுக்கப்பட்டுள்ளதால் அந்தந்த வார்டுகளில் தினமும் நாய் கடியும், அதன் தொந்தரவும் அதிகரித்துள்ளதால் அவற்றை கட்டுப்படுத்த பொதுமக்கள் கவுன்சிலர்களுக்கு நெருக்கடி கொடுக்கிறார்கள். கவுன்சிலர்கள், அதிகாரிகளிடம் கூறினாலும், போதிய நிதி ஒதுக்கீடு, பணியார்கள் மற்றும் வாகனங்கள் பற்றாக்குறையால் தெரு நாய்கள் இனப்பெருக்கத்தை கட்டுப்படுத்த முடியவில்லை.

ஒரு நாய்க்கு கருத்தடை செய்ய ரூ.1000: மாநகர சுகாதாரத்துறை அதிகாரிகளிடம் கேட்டபோது, ‘‘மாநகராட்சி சார்பில் ஒரு மருத்துவரும், என்ஜிஓ சார்பில் 2 மருத்துவர்களும் உள்ளனர். இந்த மருத்துவர்கள் போதுமானதுதான். முன்பு 4 மண்டலங்கள் இருந்தபோது ஒரு மண்டலத்திற்கு 4 நாய் பிடிக்கும் வாகனம் இருந்தது. தற்போது அதில் 2 பழுதடைந்துள்ளது. 2 மட்டுமே பயன்பாட்டில் உள்ளது. 100 வார்டுகளுக்கு இந்த வாகனங்களும், பணியாளர்களும் போதுமானதாக இல்லை. அதுபோல், ஒரு நாய்க்கு கருத்தடை செய்வதற்கு ரூ.1000 வரை செலவாகிறது. இதில், 50 சதவீதம் மாநகராட்சியும், 50 சதவீதம் என்ஜிஓவும் வழங்க வேண்டும். இந்த நிதி பற்றாக்குறையினால் தெருநாய் கருத்தடை பணி பாதிக்கப்பட்டுள்ளது” என்றார்.

FOLLOW US

தவறவிடாதீர்!

Sign up to receive our newsletter in your inbox every day!

WRITE A COMMENT
 
x