Published : 31 Jan 2023 04:32 PM
Last Updated : 31 Jan 2023 04:32 PM

ஜெயலலிதாவின் சொத்தில் பங்கு கோரி வழக்கு: தீபா, தீபக் பதிலளிக்க உயர் நீதிமன்றம் உத்தரவு

சென்னை உயர் நீதிமன்றம் | கோப்புப்படம்

சென்னை: மறைந்த முதல்வர் ஜெயலலிதாவின் சொத்தில் தனக்கும் பங்கு உள்ளது எனவும், தான் ஜெயலலிதாவின் அண்ணன் என்றும் கூறி வாசுதேவன் என்பவர் தொடர்ந்த வழக்கில், தீபக் மற்றும் தீபா ஆகியோர் பதிலளிக்க சென்னை உயர் நீதிமன்றம் உத்தரவிட்டுள்ளது.

மறைந்த முதல்வர் ஜெயலலிதாவின் சொத்துகளை நிர்வகிக்க நிர்வாகிகளை நியமிக்க கோரி தொடரப்பட்ட வழக்கை விசாரித்த சென்னை உயர் நீதிமன்ற நீதிபதிகள் கிருபாகரன் தலைமையிலான அமர்வு, கடந்த 2020-ம் ஆண்டு மே மாதம்,1956 ஆம் ஆண்டு இந்து வாரிசுரிமைச் சட்டம் பிரிவு 15(2)(a) இன் படி ஜெயலலிதாவின் அண்ணன் மகன் தீபக் மற்றும் மகள் தீபா ஆகியோரை ஜெயலலிதாவின் சட்டபூர்வ வாரிசுகள் என்று தீர்ப்பளித்தனர். இதையடுத்து போயஸ் கார்டன் இல்ல சொத்துகள் தீபக், தீபாவிடம் ஒப்படைக்கப்பட்டது.

இந்த நிலையில், கர்நாடக மாநிலம் மைசூர் வியாசரபுராவைச் சேர்ந்த 83 வயதான வாசுதேவன் என்பவர், சென்னை உயர் நீதிமன்றத்தில் மனு ஒன்றை தாக்கல் செய்துள்ளார். அந்த மனுவில், "நான், மறைந்த முதல்வர் ஜெயலலிதாவின் சகோதரர். ஜெயலலிதாவின் தந்தை ஜெயராமனின் முதல் மனைவியின் மகன். கடந்த 2021-ம் ஆண்டே இந்த மனுவை தாக்கல் செய்தேன். ஆனால், அதில் சில பிழைகள் இருந்த காரணத்தால், மனு திருப்பி அளிக்கப்பட்டது.

கரோனா ஊரடங்கு மற்றும் எனக்கு உள்ள இருதய நோய் காரணமாக இந்த வழக்கை தாக்கல் செய்வதில் கால தாமதம் ஏற்பட்டுள்ளது. மறைந்த முதல்வர் ஜெயலலிதாவின் தந்தை ஜெயராமனின் முதல் மனைவியான ஜெயம்மாவின் மகன்தான் நான். என் தந்தை ஜெயராமன் இரண்டாவது மனைவியாகத்தான் வேதவள்ளி என்கிற வேதம்மாவை திருமணம் செய்து கொண்டார். இரண்டாவது மனைவிக்கு பிறந்தவர்கள்தான் ஜெயக்குமார் மற்றும் ஜெயலலிதா. ஜெயக்குமாரின் வாரிசுகள்தான் தீபா மற்றும் தீபக்.

கடந்த 1950 ம் ஆண்டு ஜெயராமனிடம் ஜீவனாம்சம் கேட்டு மைசூர் நீதிமன்றத்தில் எனது தாய் தாக்கல் செய்த வழக்கில் அப்போதே ஜெயக்குமார் மற்றும் ஜெயலலிதாவை பிரதிவாதிகளாக சேர்க்கப்பட்டனர். எனவே, இந்து வாரிசுரிமை சட்டப்படி எனக்கும் ஜெயலலிதாவின் சொத்தில் பங்கு உள்ளது. காலதாமதமாக தாக்கல் செய்யப்படும் இந்த மனுவை விசாரணைக்கு எடுத்துக்கொள்ள அனுமதிக்க வேண்டும்" என்று மனுவில் கோரியிருந்தார்.

இந்த மனு உயர்நீதிமன்ற நிர்வாக உத்தரவிற்காக உயர் நீதிமன்றத்தில் உள்ள மாஸ்டர் நீதிமன்றத்தில் விசாரணைக்கு வந்தது. இந்த மனுவை விசாரணைக்குப் பட்டியலிடுவது தொடர்பாக தீபா தீபக் ஆகியோர் பதிலளிக்க உத்தரவிட்ட மாஸ்டர் நீதிமன்றம், விசாரணையை வரும் 20-ம் தேதிக்கு ஒத்தி வைத்துள்ளது.

FOLLOW US

தவறவிடாதீர்!

Sign up to receive our newsletter in your inbox every day!

WRITE A COMMENT
 
x