Published : 31 Jan 2023 03:17 PM
Last Updated : 31 Jan 2023 03:17 PM
சென்னை: மின் நுகர்வோர்கள், ஆதார் எண்ணுடன் மின் இணைப்பு எண்ணை இணைப்பதற்கு பிப்ரவரி 15-ம் தேதி வரை கால நீட்டிப்பு செய்யப்படுவதாக தமிழக மின் துறை அமைச்சர் செந்தில்பாலாஜி தெரிவித்துள்ளார்.
சென்னையில், தமிழக மின்துறை அமைச்சர் செந்தில்பாலாஜி செவ்வாய்க்கிழமை செய்தியாளர்களைச் சந்தித்தார். அப்போது அவர் கூறியது: "தமிழகத்தில் இருக்கக்கூடிய 2 கோடியே 67 லட்சம் நுகர்வோர்களில் ஏறத்தாழ 90.69 விழுக்காடு பேர் ஆதார் எண்ணை மின் இணைப்பு எண்ணுடன் இன்று காலை இணைத்திருக்கின்றனர். இன்னும் 9.31 விழுக்காடு மின் நுகர்வோர்கள் ஆதார் எண்ணை மின் இணைப்பு எண்ணுடன் இணைக்க வேண்டியவர்களாக உள்ளனர்.
குறிப்பாக, வீடுகளைப் பொறுத்தவரை 2 கோடியே 32 லட்சம் நுகர்வோர்களில் 2 கோடியே 17 லட்சம் பேர் இணைத்துள்ளனர். இன்னும் ஒரு 15 லட்சம் பேர் இணைக்க வேண்டியுள்ளது. கைத்தறியைப் பொறுத்தவரைக்கும் 74 ஆயிரம் இணைப்புகளில் 70 ஆயிரம் இணைக்கப்பட்டுள்ளது. இன்னும் 4 ஆயிரம் இணைப்புகள் மட்டும் பாக்கி உள்ளது. விசைத்தறியைப் பொறுத்தவரை 1 லட்சத்து 63 ஆயிரத்தில் 1 லட்சத்து 52 ஆயிரம் பேர் இணைத்துள்ளனர். இன்னுமொரு, 9 ஆயிரம் பேர் பாக்கி உள்ளனர்.
மொத்தமுள்ள 9 லட்சத்து 44 ஆயிரம் பேரில், 5 லட்சத்து 11 ஆயிரம் பேர் இணைத்துள்ளனர். இன்னும் 4 லட்சத்து 33 ஆயிரம் குடிசைகள்தான் இணைக்க வேண்டிய நிலுவை இன்னும் அதிகமாக இருக்கிறது. எனவே இப்போது மின் வாரியத்தின் உயர் அதிகாரிகளுடன் ஆய்வுக் கூட்டம் நடத்தி, ஒவ்வொரு வட்டங்கள் வாரியாக எத்தனை நாட்கள் கூடுதலாக தேவைப்படும், இதில் என்னென்ன சிரமங்கள் இருக்கிறது அவற்றை களைய வாரியத்தின் மூலம் நடவடிக்கை எடுக்கப்பட்டுள்ளது.
எனவே, வரக்கூடிய பிப்ரவரி 15-ம் தேதி வரை, ஆதார் எண்ணுடன் மின் இணைப்பு எண்ணை இணைக்க கால நீட்டிப்பு செய்யப்படுகிறது. அதற்குள், அனைத்து நுகர்வோரும் நூறு சதவீதம் 2 கோடியே 67 லட்சம் மின் நுகர்வோர்களும் இந்த இணைப்பை நிறைவு செய்துகொள்ள வேண்டும்" என்று அவர் தெரிவித்தார்.
Sign up to receive our newsletter in your inbox every day!
WRITE A COMMENT