Published : 31 Jan 2023 01:38 PM
Last Updated : 31 Jan 2023 01:38 PM
சென்னை: "கருணாநிதிக்கு பேனா நினைவு சின்னம் வைப்பதை எதிர்க்கவில்லை, ஏற்கிறோம். ஆனால், கடலுக்குள் வைக்கக்கூடாது. அவ்வாறு வைப்பதை வன்மையாக நாங்கள் கண்டிக்கிறோம், எதிர்க்கிறோம். அதுதான் நாம் தமிழர் கட்சியின் நிலைப்பாடு" என்று நாம் தமிழர் கட்சியின் தலைமை ஒருங்கிணைப்பாளர் சீமான் கூறியுள்ளார். மேலும், இது தொடர்பாக ஓர் எச்சரிக்கையையும் அவர் விடுத்துள்ளார்.
மறைந்த முன்னாள் முதல்வரும், திமுக தலைவருமான மு.கருணாநிதியின் பேனா நினைவுச் சின்னத்தை சென்னை மெரினாவில் கடலுக்கு நடுவில் நிறுவுவதற்கான தமிழ்நாடு மாசுக் கட்டுப்பாட்டு வாரியத்தின் கருத்துக் கேட்புக் கூட்டம் செவ்வாய்க்கிழமை (ஜன.31) கலைவாணர் அரங்கில் மாவட்ட ஆட்சியர் தலைமையில் நடைபெற்றது. இந்தக் கூட்டத்தில் கலந்துகொண்ட நாம் தமிழர் கட்சியின் தலைமை ஒருங்கிணைப்பாளர் சீமான், பேனா நினைவுச் சின்னம் வைப்பதற்கு எதிர்ப்பு தெரிவிக்கும் கடிதத்தை மாவட்ட ஆட்சியரிடம் வழங்கினார். அரங்கில் சீமான் பேசும்போது கூச்சல் எழுப்பப்பட்டது. இருப்பினும், கடலுக்குள் சிலை வைப்பதற்கு எதிர்ப்பு தெரிவித்து பேசினார்.
பின்னர் வெளியே வந்த அவர், செய்தியாளர்களைச் சந்தித்தார். அப்போது அவர் கூறியது: "மக்கள் கருத்துக் கேட்புக் கூட்டம் என்ற பெயரில் கூட்டத்தை நடத்தி, அவர்களுக்கு ஆதரவான கருத்துகளை ஏற்பது, எதிர்க் கருத்து தெரிவித்தால், அதனை எதிர்த்து கூச்சலிடுவது என்பது ரொம்ப அநாகரிகம். அதற்கு எதற்காக கருத்துக் கேட்புக் கூட்டம், கட்சிக் கூட்டம் என்ற பெயரில் நடத்திவிட்டுப் போகலாம். எனவே, முதலில் அந்தச் செயலை நான் வன்மையாக கண்டிக்கிறேன்.
ஐயா கருணாநிதிக்கு பேனா நினைவுச் சின்னம் வைப்பதை எதிர்க்கவில்லை, ஏற்கிறோம். ஆனால், கடலுக்குள் வைக்கக் கூடாது. அவ்வாறு வைப்பதை வன்மையாக நாங்கள் கண்டிக்கிறோம், எதிர்க்கிறோம். அதுதான் நாம் தமிழர் கட்சியின் நிலைப்பாடு. அது சுற்றுச்சூழலுக்கு பெரும்பாதிப்பை ஏற்படுத்தும். 360 மீட்டர் கடலுக்குள் சென்று, 8551.13 சதுரமீட்டர் பரப்பை இதற்காக எடுக்கவுள்ளனர். கிட்டத்தட்ட அரை ஏக்கர் கடலில் எடுக்கின்றனர். கடலுக்குள் கல், மண்ணைக் கொட்டி அதன்மேல் அந்தப் பேனாவை நிறுவ வேண்டும். அதைப் பார்வையிட செல்லும் மக்கள் நெகிழி உள்ளிட்டவற்றை தூக்கி எறிந்துச் செல்வர்.
ஏற்கெனவே இந்திய நிலப்பரப்பு அளவுக்கு நம் கடலுக்குள் குப்பைகள், பிளாஸ்டிக் உள்ளிட்ட கழிவுகள் இருப்பதாக கூறப்படுகிறது. கரை ஒதுங்கும் அனைத்தையும் அறுத்துப் பார்த்தால், பிளாஸ்டிக் கழிவுகள்தான் உள்ளன. இந்தச் சூழலில் அது பெரிய சுற்றுச்சூழல் பாதிப்பை ஏற்படுத்தும். நினைவு மண்டபம் கட்டுகிறீர்கள், அதற்கு முன் வையுங்கள். அறிவாலயத்தின் முன் வையுங்கள் யார் உங்களை எதிர்க்கப் போகின்றனர். எழுதாத பேனாவுக்கு சிலை. அது பகுத்தறிவு. எழுதுகிற பேனாவை ஆயுத பூஜையன்று வைத்துக் கும்பிட்டால் அது மூடநம்பிக்கை. எப்படிப்பட்ட சிந்தாந்தம், கோட்பாடு என்று பாருங்கள்.
பள்ளிக் கூடங்களை புனரைமைக்க நிதி இல்லை எனக் கூறி நிதி திரட்டும் அரசுக்கு, இந்தப் பேனா வைக்க மட்டும் ரூ.81 கோடி எங்கிருந்து வருகிறது? வள்ளுவருக்கு சிலை வைக்கப்பட்டிருக்கிறது என்றால், அங்கு ஏற்கெனவே பாறை இருந்தது" என்றார் சீமான்.
அப்போது சிலை வைத்தால் நாம் தமிழர் கட்சியின் சீமான் என்ன செய்வார் என்று கேட்கப்பட்ட கேள்விக்கு, "சிலை வைக்கவிடமால் தடுத்து கடுமையான போராட்டங்களைச் செய்வேன். அதன்பிறகு வைத்தால் ஒருநாள் எங்கிருக்கிறது என்று தெரியாமலே போகும்" என்று அவர் எச்சரிக்கை விடுத்தார்.
முன்னதாக, கருத்துக் கேட்புக் கூட்டத்தில் கலந்துகொண்ட சீமான், கருத்துகளைத் தெரிவிக்க மேடைக்கு வந்தபோது, நாம் தமிழர் கட்சியினர், கைத்தட்டி, விசிலடித்து ஆரவாரம் செய்தனர். அதேபோல், சீமான் பேச எதிர்ப்பு தெரிவித்து கூட்டத்திற்கு வந்திருந்த திமுகவினரும் கூச்சலிட்டனர். இதனால் அங்கு பரபரப்பு ஏற்பட்டது. அப்போது மேடையில் பேசிய சீமான், "கடலில் 8551.13 சதுர மீட்டரை நீங்கள் எடுக்கிறீர்கள். அதில் பேனா வைக்க வேண்டும் என்றால், கல்லைக் கொட்ட வேண்டும், மண்ணைக் கொட்ட வேண்டும். இதனால் ஏற்படும் அழுத்தத்தால் அங்கிருக்கும் பவளப்பாறைகள் பாதிக்கப்படும்" என்று பேசும்போது, திமுகவினர் மேடைக்கு முன் வந்து கூச்சலிட்டனர்.
அப்போது சீமான், "உனக்கு எதைப் பற்றி அக்கறை இருந்துள்ளது? உங்களை கடற்கரையில் புதைக்க விட்டதே தவறு. நீங்கள் பேனா வையுங்கள், ஒருநாள் நான் வந்து உடைக்கிறேன். யாருகிட்ட? பேனா வைக்க வேண்டும் கடலுக்குள்தான் வைக்கவேண்டும் இவர்களுக்கு. பள்ளிக்கூடத்தை சீரமைக்க காசு இல்லை, பேனா வைக்க காசு எங்கிருந்து வருகிறது.
ஏன் அண்ணா அறிவாலயத்துக்கு முன்னால் வையுங்கள், நினைவிடம் கட்டியிருக்கிறீர்களே அதில் வையுங்கள், கடலுக்குள்தான் வைப்பார்களாம். 13 மீனவ கிராமங்கள் பாதிக்கப்படும். என் மீனவ மக்களின் வாழ்வாதாரம் பாதிக்கப்படும். சும்மா மீனவச் சங்கம் என்ற பெயரில், அனைத்து மீனவ சங்கம், அகில இந்திய மீனவ சங்கம் என்ற பெயரில் இங்குவந்துவிட்டு இதனால் ஒன்றும் பாதிப்பில்லை என்று எதையாவது பேசிக்கிட்டு" என்றபோது திமுகவினர் தொடர்ந்து கூச்சலிட்டு சீமான் பேச்சை நிறுத்துமாறு கூறினார்.
அப்போது சீமான், "நீ போகச் சொன்னால் நான் போய்விடுவேனா? சுற்றுச்சூழலுக்கு பாதிப்பு ஏற்படும். அதனால் நாங்கள் கடலுக்குள் பேனா வைப்பதை எதிர்க்கிறோம், எதிர்க்கிறோம், எதிர்க்கிறோம். எனவே அதைத்தடுத்து நிறுத்தும்வரை கடுமையான போராட்டங்களைச் செய்வேன். இது உறுதி" என்று பேசினார். இதனால் கூட்டத்தில் சலசலப்பு ஏற்பட்டது.
Sign up to receive our newsletter in your inbox every day!
WRITE A COMMENT ( 185 Comments )
பாகம்-2-நாட்டில் உள்ள மாநிலங்களில் பெரிய பொருளாதாரமாக விளங்கும் மகாராஷ்டிரா,3600 கோடி செலவில் (எவ்வளவு-3600 கோடி)கடற்கரையிலிருந்து ஒன்றரை கிலோ மீட்டர் தூரத்தில்,கடலுக்குள் மன்னர் சிவாஜிக்கு 216 மீட்டர் உயரத்திற்கு சிலை வைக்க இருப்பதை யாரும் எதிர்க்கவில்லை.அந்த சிவாஜி நினைவிடத்துக்கு இந்திய பிரதமர் 2016 ஆம் ஆண்டிலேயே அடிக்கல் நாட்டிவிட்டார்.புதுச்சேரி மாநிலம்,பட்ஜெட் போடுவதற்கே,ஒன்றிய அரசு 1730 கோடி நிதி ஒதுக்கவேண்டியுள்ளது.ரேஷன் கடைகளை மூடிய மாநிலம் அது ஒன்றுதான்.அங்கிருந்த 440 அரசு பள்ளிகளில் 18 பள்ளிகளை அரசு மூடிவிட்டது.கொரோனாவுக்கு பிறகு,கல்விக்கட்டணம் செலுத்தமுடியாமல்,அரசு பள்ளிகளில் சேரவந்த 20000 தனியார் பள்ளி மாணவர்களை,அரசு,தனியார் பள்ளிகளுக்கே,திருப்பி அனுப்பிவிட்டது.மதிய உணவில் முட்டை கிடையாது.வெங்காயமும் பூண்டும் இல்லாததால் மாணவர்கள் மதிய உணவை விரும்பி உண்ணுவதில்லை.சீருடை தரப்படவில்லை.கல்வியை தனியார் மயமாக்கும் பணிகள் தீவிரமாக நடையைபெற்றுவருகின்றன.இப்படி ஒரு நிதிநிலையை கொண்டிருக்கும் அந்த மாநிலத்தின் கடற்கரையிலிருந்து ஏழு கிலோ மீட்டர் தூரத்தில்,மூழ்கிய கப்பலைக்கொண்டு,ஒரு அருங்காட்சியகத்தை,பல்லாயிரம் கோடி செலவில்,ஒன்றிய அரசே நிர்மாணிக்கவிருக்கிறது.இந்த அருங்காட்சியகத்தை கடலில் அமைப்பதை யாரும் எதிர்க்கவில்லை.கொரோனா ஊரடங்கின்போதும் 20000 கோடி செலவில் டில்லியில் சென்ட்ரல் விஸ்டாவின் நிர்மாணப்பணிகள் தொடர்ந்ததை யாரும் எதிர்க்கவில்லை.கருணாநிதிக்கு பேனா சின்னம் அமைப்பதைமட்டும் காழ்ப்புணர்வுடன் எதிர்ப்பவர்களுக்கு பதில் எழுதி,என்னுடைய நேரத்தை வீணாக்க விரும்பவில்லை.தமிழ்நாடு அரசு,தன்னுடைய கொள்கை முடிவை நிச்சயம் செயல்படுத்தும்.
2
1
Reply
இங்கு பேனா சின்னம் அமைப்பதற்கு எதிர்ப்பு தெரிவிப்பவர்கள், அப்படி எதிர்ப்பு தெரிவிப்பதற்கு பல காரணங்களை தேடி எடுத்து பதிவிட்டாலும்,உண்மையான காரணம் கருணாநிதி மேலும் திமுக அரசு மீதும் அவர்களுக்கு உள்ள தீராத காழ்ப்புணர்வே .//எங்குமே அரசு பணத்தில் வைக்கக்கூடாது//.....//இங்கு எக்காரணம் கொண்டும் அரசு பணத்தில் பேனா சிலை வைக்கக்கூடாது//......என்றெல்லாம் வெறுப்பை உமிழ்ந்துவிட்டு ,அதை செய்தீர்களா,இதை செய்தீர்களா என்று பட்டியலிடுவதில் பொருளே இல்லை.நவீன தமிழ்நாட்டின் சிற்பியான கருணாநிதி அவர்களுக்கு இந்த நினைவு சின்னம் அமைப்பது என்பது தமிழ்நாடு அரசின் கொள்கை முடிவு.இங்கு எதிர்ப்பவர்களுடைய பிரதிநிதிகள் உள்பட 234 மக்கள் பிரதிநிதிகள் முன்னிலையில் தமிழ்நாடு சட்டமன்றத்தில் இந்த கொள்கை அறிவிப்பு முதல்வரால் அறிவிக்கப்பட்டது.அந்த மக்கள் பிரதிநிதிகளில் யாரும் நினைவுச்சின்னம் அமைப்பதை எதிர்க்கவில்லை.தமிழ்நாட்டின் பொருளாதாரம் இந்தியாவின் மாநிலங்களிடையே இரண்டாவது பெரிய பொருளாதாரம்.இந்த நினைவுச்சின்னத்துக்கு ஒதுக்கப்பட்டிருக்கும் 81 கோடி ரூபாய்,தமிழ்நாட்டின் மொத்த செலவு பட்ஜெட்டான 3.33 லட்சம் கோடியில் மிகமிகச்சிறிய தொகையாகும்.திமுக அரசு,தனது தேர்தல் வாக்குறுதிகளில் 85 சதவீதத்தை நிறைவேற்றிவிட்டது.இருபதே மாதங்களில் 1.14 லட்சம் தமிழ்நாட்டு இளைஞர்களுக்கு வேலை வாய்ப்பை வழங்கிவிட்டது.மேலும் 3.47 லட்சம் தமிழ்நாட்டு இளைஞர்களுக்கான வேலைவாய்ப்பை உறுதி செய்திருக்கிறது (தொடரும்)
3
1
Reply