Published : 31 Jan 2023 04:09 AM
Last Updated : 31 Jan 2023 04:09 AM
சென்னை: பொங்கல் பண்டிகைக்கு அரசால் அறிவிக்கப்பட்ட ரூ.1,000 ரொக்கம் உள்ளிட்ட பொங்கல் பரிசு தொகுப்பை தமிழகம் முழுவதும் 4.40 லட்சம் பேர் வாங்கவில்லை என்பது தெரியவந்துள்ளது. இதையடுத்து, அவர்களுக்காக ஒதுக்கப்பட்ட ரூ.44 கோடி, அரசு கருவூலத்தில் சேர்க்கப்பட்டுள்ளது.
தமிழகத்தில் உள்ள அரிசி குடும்ப அட்டைதாரர்கள் மற்றும் முகாம்களில் வசிக்கும் இலங்கை தமிழர் குடும்பங்களுக்கு பொங்கல் பண்டிகையை முன்னிட்டு ரூ.1,000 ரொக்கத்துடன் பச்சரிசி, சர்க்கரை, முழு கரும்பு ஆகியவை வழங்கப்படும் என்று முதல்வர் ஸ்டாலின் அறிவித்தார். இதையடுத்து, கரும்பு, அரிசி, சர்க்கரை கொள்முதலுக்கான உத்தரவுகள் பிறப்பிக்கப்பட்டன. ரூ.1,000 ரொக்கம் மற்றும் பொருட்களுக்காக ரூ.2,430 கோடி நிதியும் ஒதுக்கப்பட்டது.
இதையடுத்து, தகுதியுள்ள 2 கோடியே 18 லட்சத்து 86,123 குடும்ப அட்டைதாரர்களுக்கு ரூ.1,000 பணம் ஒதுக்கப்பட்டு, அத்தொகை ரேஷன் கடைகளுக்கு அனுப்பி வைக்கப்பட்டது.
முதல்வர் தொடங்கி வைப்பு: பொங்கல் பரிசு தொகுப்பு வழங்கும் திட்டத்தை சென்னையில் முதல்வர் ஸ்டாலின் கடந்த ஜன.9-ம்தேதி தொடங்கி வைத்தார். அன்று முதல் கடந்த 13-ம் தேதி வரை ரேஷன் கடைகளில் பொங்கல் பரிசுத் தொகுப்பு வழங்கப்பட்டது.
இந்த நிலையில், தமிழகம் முழுவதும் 4.39 லட்சத்துக்கும் மேற்பட்டோர் ரூ.1,000 ரொக்கம் உள்ளிட்ட பொங்கல் பரிசு தொகுப்பை வாங்கவில்லை என்பது தற்போது தெரியவந்துள்ளது.
குறிப்பாக, சென்னையில் அதிகபட்சமாக தென்சென்னையில் உள்ள 10.39 லட்சம் குடும்ப அட்டைகளில் 49,538 குடும்ப அட்டைதாரர்களும், வடசென்னையில் 10.18 லட்சம் அட்டைகளில் 35,723 குடும்ப அட்டைதாரர்களும் வாங்கவில்லை. அதேபோல, காஞ்சிபுரத்தில் 8,026, செங்கல்பட்டில் 10,263, திருவள்ளூரில் 8,874 குடும்ப அட்டைதாரர்களும் பொங்கல் பரிசு தொகுப்பை வாங்கவில்லை. குறைந்தபட்சமாக, திருப்பத்தூரில் 3.29 லட்சம் குடும்ப அட்டைகளில் 1,723 பேர் மட்டுமே வாங்கவில்லை. அடுத்தபடியாக கள்ளக்குறிச்சியில் 2,751, ராணிப்பேட்டையில் 2,897 குடும்ப அட்டைதாரர்களும் பொங்கல் பரிசு தொகுப்பை வாங்கவில்லை.
தமிழகம் முழுவதும் 2 கோடியே18 லட்சத்து 86,123 பேருக்கு ஒதுக்கப்பட்ட நிலையில், 2 கோடியே 14 லட்சத்து 46,454 பேர் மட்டுமே பரிசு தொகுப்பை பெற்றுள்ளனர். தமிழகம் முழுவதும் 4 லட்சத்து 39,669 குடும்ப அட்டைதாரர்கள் இதை வாங்கவில்லை. இதையடுத்து, அவர்களுக்காக ஒதுக்கப்பட்ட ரூ.43 கோடியே 96 லட்சத்து 69 ஆயிரத்தை கூட்டுறவுத் துறையினர் அரசு கருவூலத்தில் செலுத்தியுள்ளனர்.
Sign up to receive our newsletter in your inbox every day!
WRITE A COMMENT
Loading comments...