Published : 31 Jan 2023 06:52 AM
Last Updated : 31 Jan 2023 06:52 AM

ஜி20 மாநாடு | புதுவையில் தொடக்கம்; அறிவியல் வளர்ச்சியால் வறுமை குறைந்தது: மாநாட்டின் தலைமை பொறுப்பு அதிகாரி கருத்து

ஜி 20 மாநாட்டின் ஒரு பகுதியாக ‘அறிவியல்-20’ ஆரம்ப நிலைக் கூட்டம் புதுவையில் நேற்று தொடங்கியது. இதில் பல்வேறு நாடுகளைச் சேர்ந்த அறிவியல் சார் வல்லுநர்கள் பங்கேற்றனர்.

புதுச்சேரி: அறிவியல் என்பது நமது பொருளாதார வளர்ச்சிக்கு மட்டும் பங்காற்றவில்லை. கூடுதலாக சமூக சீர்திருத்தங்களுக்கும் அறிவியல் உதவியுள்ளது. அறிவியலின் வளர்ச்சியால்தான் உலகில் வறுமை விகிதம் பெருமளவு குறைந்துள்ளது என்று ஜி20 மாநாட்டின் ஒரு பகுதியான ‘அறிவியல் - 20’ மாநாட்டின் தலைமைப் பொறுப்பை வகிக்கும் பேராசிரியர் அஷுதோஷ் ஷர்மா தெரிவித்தார்.

ஜி 20 அமைப்பின் தலைமைப் பொறுப்பை இந்தியா ஏற்றதில் இருந்து, அதன் உறுப்பு நாடுகளின் பல நிலைகளிலான கூட்டம் இந்தியாவின் பல நகரங்களில் நடத்தப்பட்டு வருகிறது. அதன் ஒரு பகுதியாக ‘அறிவியல்-20 ஆரம்ப நிலைகூட்டம்’ புதுச்சேரியில் நேற்று தொடங்கியது. ‘அறிவியல் 20’ -ன் இந்தியத் தலைமைப் பொறுப்பில் இருக்கும் பேராசிரியர் அஷுதோஷ் ஷர்மா தனது தொடக்க உரையில் பேசியதாவது:

அறிவியல் என்பது நமது பொருளாதார வளர்ச்சிக்கு மட்டுமே பங்காற்றவில்லை. கூடுதலாக சமூக சீர்திருத்தங்களுக்கும் உதவியுள்ளது. அறிவியலின் வளர்ச்சியால்தான் உலகில் வறுமை விகிதம் பெருமளவு குறைந்துள்ளது.

நமது வீடுகள் டிஜிட்டல் மயமாகி விட்டன. நமது வாழ்க்கையும் டிஜிட்டல் மயமாகிறது. ஆனாலும் சமூகத்தில் இதற்கு இணையான மாற்றங்கள் மெதுவாகவே ஏற்பட்டு வருகின்றன. இன்றைய ஆரம்ப நிலைக் கூட்டத்தின் இலக்கு என்பது இனி தொடர்ந்து நடைபெறக்கூடிய கூட்டங்களுக்கான கருத்து வரைவை உருவாக்குவதுதான். அறிவியல் உச்சிநிலை கூட்டம் கோயம்புத்தூரில் நடைபெறும் என்று அவர் பேசினார்.

இதனைத் தொடர்ந்து பல அமர்வுகளாக கருத்தரங்குகள் நடைபெற்றன. முன்னதாக பெங்களூருவில் உள்ள இந்திய அறிவியல் கழகத்தின் இயக்குநர் பேராசிரியர் ஜி.ரங்கராஜன் தனது வரவேற்புரையில், "மிகப் பெரும் பிரச்சினைனகளாக இருக்கின்ற பருவ நிலை மாறுதல், பெருந்தொற்றுப் பரவல், எரிசக்தி பாதுகாப்பு, நீர் மேலாண்மை, உணவு பற்றாக்குறை போன்றவற்றை ஒரே ஒரு நாடு மட்டும் தன்னளவில் தீர்த்து வைத்து விட முடியாது. இதற்கு பல நாடுகளின் ஒத்துழைப்பும் நட்புறவும் அவசியமாகும்" என்று தெரிவித்தார்.

மாலையில் செய்தியாளர்களைசந்தித்த அசுதோஷ் சர்மா, “உறுப்பு நாடுகளின் வாழ்க்கை தரத்தை மேம்படுத்த, அறிவியல் உலகில் சமீபத்திய முன்னேற்றங்களைப் பயன்படுத்துவது குறித்து அறிக்கை வெளியிடுவோம். மொத்தம் 5 கூட்டங்கள் நிறைவுக்கு பிறகு, அதாவது ஜூலை மாதத்துக்குப் பிறகு ‘எஸ் 20’ குழு தனது அறிக்கையை வெளியிடும்” என்று தெரிவித்தார்.

FOLLOW US

தவறவிடாதீர்!

Sign up to receive our newsletter in your inbox every day!

WRITE A COMMENT
 
x