Published : 29 May 2017 09:11 AM
Last Updated : 29 May 2017 09:11 AM

பிறந்த நாளன்று நேர்ந்த சோகம்: வேனில் சிக்கி 7 வயது சிறுமி பலி

காஞ்சிபுரம் அடுத்த கோனேரிக்குப்பம் பகுதியில் உள்ள காமராஜர் நகரைச் சேர்ந்தவர்கள் ரஜினி- அமுதா தம்பதியர். இவர்களது மகள் தேவதர்ஷினி(7). இவருக்கு நேற்று பிறந்தநாள். இதற்காக தாய் மற்றும் தம்பியுடன் இருசக்கர வாகனத்தில், அருகில் உள்ள கிறிஸ்தவ தேவாலயத்துக்கு சென்றுவிட்டு உறவினர்களுக்கு இனிப்பு வழங்குவதற்காக மீண்டும் இருசக்கர வாகனத்தில் வந்தார்.

அப்போது, பொன்னேரிக்கரை ரயில் நிலையம் அருகே ஏற்பட்ட வாகன நெரிசலில் இருசக்கர வாகனம் நிலைதடுமாறி கீழே விழுந்ததாக கூறப்படுகிறது. இதில், தேவதர்ஷினி சாலையின் நடுவே விழுந்தார். அப்போது, பின்னால் வந்த தனியார் பால் வேன் சக்கரத்தில் சிக்கி அதே இடத்திலேயே பலியானார். சிறு காயங்களுடன் தப்பிய மற்ற இருவரும் கதறி அழுதனர்.

தகவல் அறிந்து வந்த சிவகாஞ்சி போலீஸார் உடலை மீட்டு காஞ்சிபுரம் அரசு மருத்துவமனைக்கு அனுப்பி வைத்தனர். மேலும், இதுதொடர்பாக வழக்குப் பதிவு செய்து விசாரித்து வருகின்றனர். பிறந்தநாளின்போது சிறுமி விபத்தில் சிக்கி உயிரிழந்த சம்பவம் அப்பகுதியில் பெரும் சோகத்தை ஏற்படுத்தியுள்ளது.

காரணம் என்ன?

விபத்து நடந்த பகுதியில் மீன் மார்க்கெட் ஒன்று செயல்பட்டு வருகிறது. இங்கு வருபவர்கள், சென்னை செல்லும் பிரதான சாலையில் தங்களின் இருசக்கர வாகனங்களை நிறுத்திவிட்டுச் செல்கின்றனர். இதனால், சாலையில் மற்ற வாகனங்கள் செல்ல முடிவதில்லை.

இதனால், இப்பகுதியில் வாகனங்களை நிறுத்தக்கூடாது என்றும் போலீஸார் வாகன நெரிசலை கட்டுப்படுத்த வேண்டும் என்றும் வலியுறுத்தப்பட்டது.

ஆனால், இதுவரை அதற்கான நடவடிக்கைகளை போலீஸார் மேற்கொள்ள வில்லை. இந்த அலட்சியமே விபத்துக்கு காரணம் என அப்பகுதி மக்கள் புகார் தெரிவித்தனர்.

FOLLOW US

Sign up to receive our newsletter in your inbox every day!

WRITE A COMMENT
 
x