Published : 31 Jan 2023 04:00 AM
Last Updated : 31 Jan 2023 04:00 AM
கோவை: இந்தியாவின் ஆன்மிக தலைநகராக தமிழ்நாடு உள்ளதாக ஆளுநர் ஆர்.என்.ரவி பெருமிதம் தெரிவித்தார்.
கோவை திருமலையாம் பாளையத்தை அடுத்த குட்டி கவுண்டன் பதியில் உள்ள தாமரை சர்வதேச பள்ளியின் முதலாம் ஆண்டு விழா, ரோபோட்டிக்ஸ் ஆய்வகம் திறப்பு விழா நேற்று நடைபெற்றது.
இதில், கலந்துகொண்ட ஆளுநர் ஆர்.என்.ரவி பேசியதாவது: இந்தியாவில் சில மாநிலங்கள் வளர்ச்சி பெற்றுள்ளன. சில மாநிலங்கள் வளர்ச்சியில் பின்தங்கியுள்ளன. நாட்டில் வளர்ச்சி பெற்ற மாநிலங்களில் தமிழ்நாடும் ஒன்றாக உள்ளது.
ஒருவர் தமிழ்நாட்டில் இருந்தாலும், திரிபுராவில் இருந்தாலும் சுகாதாரம், கல்வி, கட்டமைப்பு வசதி, குடிநீர் வசதி, மின்சாரம் ஆகியவை அனைவருக்கும் கிடைக்கும் வகையில் தற்போதைய மத்திய அரசு செயல்பட்டு வருகிறது. உதாரணமாக, அனைத்து ஏழைகளுக்கும் ரூ.5 லட்சம் மருத்துவ காப்பீடு கிடைக்கும் ஆயுஷ்மான் பாரத் திட்டத்தை குறிப்பிடலாம்.
இந்திய வரலாற்றில் முதல்முறையாக தற்போது ஆண்களைவிட பெண்களின் எண்ணிக்கை அதிகமாக உள்ளது. தமிழகத்தில் தேசிய வாக்காளர் தினத்தை முன்னிட்டு வெளியிடப்பட்ட புள்ளி விவரத்தில் 3.15 கோடி பெண் வாக்காளர்களும், 3.04 கோடி ஆண் வாக்காளர்களும் உள்ளதாக தெரிவிக்கப்பட்டது.
சுகாதாரத்துறையில் மேற்கொள்ளப்பட்ட சீரிய நடவடிக்கைகள்தான் இதற்கு காரணம். மேலும், ராணுவம் உட்பட அரசின் அனைத்து துறைகளிலும் பெண்களுக்கு வாய்ப்பு அளிக்கப்படுகிறது. போர் விமானங்களை தற்போது பெண்கள் இயக்குகின்றனர். நமது நாட்டின் தொன்மையான கலாச்சாரம், ஆன்மிக கூறுகளை நினைத்து நாம் பெருமைகொள்ள வேண்டும்.
நாட்டின் ஆன்மிக தலைநகராக தமிழ்நாடு உள்ளது. இங்கு 1,000 ஆண்டுகள் பழமையான கோயில்கள் அப்படியே பாதுகாக்கப்பட்டு வருகின்றன. உலகில் வேறு எங்கும் இதுபோன்று இல்லை, என்றார்.
Sign up to receive our newsletter in your inbox every day!
WRITE A COMMENT