Published : 31 Jan 2023 04:23 AM
Last Updated : 31 Jan 2023 04:23 AM
ஈரோடு: ஈரோடு கிழக்கு தொகுதி இடைத்தேர்தல் தொடர்பாக திமுக கூட்டணி வேட்பாளர் ஈவிகேஎஸ் இளங்கோவனும், நகராட்சி நிர்வாகத்துறை அமைச்சர் கே.என்.நேருவும் பேசும் வீடியோ பதிவு வைரலாகி உள்ளது.
இந்நிலையில், அது ‘மார்பிங்’ செய்யப்பட்டது என அமைச்சர் வேலு விளக்கம் அளித்துள்ளார். ஈரோடு கிழக்கு தொகுதியில் வரும் 27-ம் தேதி இடைத்தேர்தல் நடக்கவுள்ளது. திமுக, அதிமுக, தேமுதிக, அமமுக, நாம் தமிழர் உள்ளிட்ட கட்சியினர் தேர்தல் பணிகளைத் தொடங்கியுள்ளனர். இந்நிலையில், ஈரோட்டில் நேற்று முன் தினம், திமுக கூட்டணிக் கட்சியினர் பங்கேற்ற ஆலோசனைக் கூட்டம் நடந்தது.
இந்த நிகழ்வில், வேட்பாளர் ஈவிகேஎஸ் இளங்கோவனிடம், அமைச்சர் நேரு தேர்தல் பணிகள் தொடர்பாக பேசும் வீடியோ பதிவு ஒன்று நேற்று வெளியாகி பரபரப்பை ஏற்படுத்தியுள்ளது.
அண்ணாமலை பதிவு: பாஜக மாநில தலைவர் அண்ணாமலையும் இந்த வீடியோ பதிவை, தனது சமூக வலைதளத்தில் பதிவிட்டு, ‘திமுக என்பது பணத்தை மட்டுமே நம்பி தேர்தலை சந்திக்கும் கட்சி. பணத்தை வைத்து எதையும் வாங்கிவிடலாம் என்று நம்பும் ஒரு கட்சி. சந்தேகம் இருப்பின் இந்த காணொளியை பார்க்கவும்’ எனக் குறிப்பிட்டுள்ளார்.
பதிவில் இருப்பது என்ன?: இந்த பதிவில், ஈவிகேஎஸ் இளங்கோவனிடம் பேசும் அமைச்சர் நேரு, ‘மந்திரியெல்லாம் தேவை இல்லைன்னு நேத்தே சொல்லிட்டேன். மாவட்ட நிர்வாகிகளை வரச் சொல்லிட்டேன். எல்லா மாவட்ட தலைவரையும் பிளாட்டினம் மஹாலுக்கு கூப்பிட்டு பணம் கொடுத்து, 1-ம் தேதிக்குள் செட்டில் பண்ணிடனும். 31 பூத்திலும் 10 ஆயிரம் பேர் ரெடி பண்ணிடனும்’ என தெரிவிக்கிறார்.
மேலும், அமைச்சர்கள் நாசர், செந்தில் பாலாஜியின் பணி குறித்தும் நேரு பேசியுள்ளார். இந்த வீடியோ பதிவு தேர்தல் களத்தில் வைரலாகி வருகிறது.
அமைச்சரின் விளக்கம் - இந்த வீடியோ பதிவு குறித்து, ஈரோட்டில் அமைச்சர் எ.வ.வேலு கூறியதாவது: தோழமைக் கட்சியைச் சேர்ந்த நிர்வாகிகளை ஒருங்கிணைப்பது குறித்து, ஈவிகேஎஸ் இளங்கோவனிடம், அமைச்சர் நேரு பேசிக் கொண்டு இருந்தார். அப்போது, பிளாட்டினம் மஹாலில் நடக்கும் தோழமைக் கட்சி நிர்வாகிகள் ஆலோசனைக் கூட்டத்துக்கு வருபவர்களுக்கு முறையான வசதிகள் செய்யப்பட்டுள்ளதா என்று ஈவிகேஎஸ் இளங்கோவன் கேட்டுள்ளார்.
அதற்கு அமைச்சர் அளித்த பதிலை தவறாக புரிந்து கொண்ட விஷமிகள் சிலர், அமைச்சர் நேரும், இளங்கோவனும் பணம் குறித்து பேசுவதாக சமூக வலைத்தளங்களில் பரப்பி விட்டனர். வேண்டுமென்றே திட்டமிட்டு ‘மார்பிங்’ செய்து இதனை பரப்பியுள்ளனர். அவர்கள் எதைச் செய்தாலும் இடைத்தேர்தலில் திமுக கூட்டணி வெற்றி பெறுவது உறுதி, என்றார்.
Sign up to receive our newsletter in your inbox every day!
WRITE A COMMENT