Published : 30 Jan 2023 04:08 PM
Last Updated : 30 Jan 2023 04:08 PM

திருவண்ணாமலை | முத்துமாரியம்மன் கோயிலில் பட்டியலின மக்கள் தரிசனம்: 70 ஆண்டுகால கோரிக்கை நிறைவேறியதாக உருக்கம்

தென்முடியனூரில் முத்துமாரியம்மன் கோயிலில் பொங்கலிட்டு வழிபாடு செய்ய ஆட்சியர் பா.முருகேஷ், எஸ்பி கார்த்திகேயன் ஆகியோருடன் செல்லும் பட்டியலின மக்கள்.

திருவண்ணாமலை: திருவண்ணாமலை மாவட்டம் தென்முடியனூர் கிராமத்தில் பழமையான முத்துமாரியம்மன் கோயிலில் ஆட்சியர் மற்றும் காவல்துறை அதிகாரிகள் முன்னிலையில் இன்று (30-ம் தேதி) தரிசனம் செய்ய அனுமதிக்கப்பட்டதன் மூலமாக பட்டியலின மக்களின் 70 ஆண்டு கோரிக்கை நிறைவேற்றப்பட்டுள்ளன.

திருவண்ணாமலை மாவட்டம் தண்டராம்பட்டு அடுத்த தென்முடியனூர் கிராமத்தில் பழமையான முத்துமாரியம்மன் கோயில் உள்ளது. இந்தக் கோயிலில் சுவாமி தரிசனம் செய்ய பட்டியலின மக்களுக்கு அனுமதி மறுக்கப்பட்டுள்ளது. மேலும் தை மாதம் நடைபெறும் திருவிழாவில் பொங்கலிட்டு வழிபடவும் அனுமதிக்கப்படவில்லை. அவர்கள் வழிபாடு செய்ய, பிற சமூகத்தினர் எதிர்ப்பு தெரிவித்து வந்தனர்.

முத்துமாரியம்மன் கோயிலில் சுவாமி தரிசனம் செய்யவும், பொங்கலிட்டு வழிபாடு செய்ய அனுமதிக்க வேண்டும் எனவும் பட்டியலின மக்கள் வலியுறுத்தினர். அவர்களுக்கு ஆதரவாக இடதுசாரிகள், விடுதலை சிறுத்தைகள் கட்சியினர் மற்றும் ஒரு சில அமைப்புகள் குரல் எழுப்பியது. இது குறித்து மாவட்ட ஆட்சியரிடம் பட்டியலின மக்கள் மனு அளித்திருந்தனர். அதில், முத்துமாரியம்மன் கோயிலில் தரிசனம் செய்ய அனுமதி வழங்க வேண்டும், தை மாத விழா காலங்களில், எங்களது சமூகத்துக்கும் அனுமதி அளிக்க வேண்டும் என கோரிக்கை விடுத்தனர்.

முத்துமாரியம்மனை தரிசனம் செய்த பட்டியலின மக்களுடன் ஆட்சியர் மற்றும் காவல்துறை அதிகாரிகள்.

இது தொடர்பான பேச்சுவார்த்தை கோட்டாட்சியர் மந்தாகினி தலைமையில் நடைபெற்றது. அப்போது, முத்துமாரியம்மன் கோயிலில் சுவாமி தரிசனம் செய்ய அனுமதிக்க வேண்டும் என பட்டியலின மக்களும் மற்றும் அவர்களை தரிசனம் செய்ய அனுமதிக்கக் கூடாது என பிற சமூகத்தினரும் வலியுறுத்தி உள்ளனர். இதில், இந்திய அரசியலமைப்பு சட்டத்தின்படி, இந்து சமய அறநிலையத் துறைக்கு சொந்தமான முத்துமாரியம்மன் கோயிலில் சுவாமி தரிசனம் செய்ய பட்டியலின மக்களுக்கு உரிமை உள்ளது, அவர்கள் தரிசனம் செய்யலாம் என முடிவெடுக்கப்பட்டது.

இதையடுத்து, தீண்டாமை ஒழிப்பு உறுதி ஏற்கப்படும் மகாத்மா காந்தி நினைவு நாளான ஜனவரி 30-ம் தேதி (இன்று), முத்துமாரியம்மன் கோயிலில் சுவாமி தரிசனம் சுவாமி தரிசனம் செய்ய பட்டியலின மக்கள் முடிவு செய்திருந்தனர். இதனையொட்டி தென்முடியனூர் கிராமத்தில் காவல்துறையினர் குவிக்கப்பட்டனர்.

வேலூர் டிஐஜி முத்துசாமி, ஆட்சியர் பா.முருகேஷ், மாவட்ட காவல் கண்காணிப்பாளர்கள் கார்த்திகேயன் (திருவண்ணாமலை), பாலகிருஷ்ணன்(திருப்பத்தூர்), இந்து சமய அறநிலையத் துறை மண்டல இணை ஆணையர் அசோக்குமார், கோட்டாட்சியர் மந்தாகினி ஆகியோர் முன்னிலையில் பூ மாலை உள்ளிட்ட பூஜை மற்றும் பொங்கல் வைப்பதற்கான பொருட்களுடன் முத்துமாரியம்மன் கோயிலில் நுழைந்தனர். பின்னர் அவர்கள், பொங்கலிட்டு அம்மனை வழிபட்டனர். இதன்மூலம் 70 ஆண்டு கோரிக்கை நிறைவேற்றப்பட்டதாக பட்டியலின மக்கள் உருக்கமாக தெரிவித்தனர்.

ஏற்றத்தாழ்வு கூடாது: இது குறித்து ஆட்சியர் பா.முருகேஷ் கூறும்போது, “தென்முடியனூரில் 70 ஆண்டுகள் பழமையான முத்துமாரியம்மன் கோயில் உள்ளது. இக்கோயிலில் பொங்கல் திருநாளையொட்டி 15 நாட்கள் நடைபெறும் விழாவில், ஒவ்வொரு நாளும் ஒரு பிரிவினர் பொங்கல் வைத்து வழிபடுவது வழக்கம். இந்தாண்டு பொங்கல் வைத்து வழிபாடு செய்ய பட்டியலின மக்கள் அனுமதி கேட்டிருந்தனர். அதன்படி, பொங்கல் வைத்து வழிபாடு செய்ய மாவட்ட நிர்வாகம் அனுமதி வழங்கியது.

இந்திய அரசியலமைப்பு சட்டத்தின்படி அனைவரும் சமம் என்ற வகையில், நமது மாவட்டத்தில் 13 சமத்துவபுரம் உருவாக்கப்பட்டுள்ளது. அனைத்து வகையிலும் ஏற்றத்தாழ்வு பார்க்காமல் அனைவரும் பழக வேண்டும். இரு பிரிவினரிடையே கருத்து வேறுபாடு நிலவிய நிலையில், மாவட்ட நிர்வாகம் மூலம் கோட்டாட்சியர் தலைமையில் பேச்சுவார்த்தை நடத்தி சுமுக தீர்வு எட்டப்பட்டுள்ளது. முத்துமாரியம்மன் கோயிலில் பட்டியலின மக்கள் பொங்கலிட்டு வழிபட்டுள்ளனர்” என்றார்.

FOLLOW US

தவறவிடாதீர்!

Sign up to receive our newsletter in your inbox every day!

WRITE A COMMENT
 
x