Published : 30 Jan 2023 05:13 AM
Last Updated : 30 Jan 2023 05:13 AM

ஈரோடு கிழக்கு தொகுதி இடைத்தேர்தலுக்கான வேட்புமனு தாக்கல் நாளை தொடக்கம்

கோப்புப்படம்

ஈரோடு: ஈரோடு கிழக்கு தொகுதி இடைத்தேர்தல் பிப்.27-ம் தேதி நடக்க உள்ள நிலையில், இதற்கான வேட்புமனு தாக்கல் நாளை தொடங்குகிறது. காங்கிரஸ் வேட்பாளர் ஈவிகேஎஸ் இளங்கோவன் பிப்.3-ம் தேதி மனு தாக்கல் செய்கிறார். தேமுதிக, அமமுக வேட்பாளர்கள் ஏற்கெனவே அறிவிக்கப்பட்ட நிலையில், நாம் தமிழர் கட்சியும் வேட்பாளரை அறிவித்துள்ளது.

ஈரோடு கிழக்கு தொகுதி காங்கிரஸ் எம்எல்ஏ திருமகன் ஈவெரா கடந்த 4-ம் தேதி காலமானதை அடுத்து, அந்த தொகுதிக்கு பிப்.27-ம் தேதி இடைத்தேர்தல் நடக்க உள்ளது. இதற்கான வேட்புமனு தாக்கல் நாளை (31-ம் தேதி) தொடங்கி, பிப்.7-ம் தேதி வரை நடைபெறுகிறது. 8-ம் தேதி மனுக்கள் மீதான பரிசீலனை நடைபெறும். மனுக்களை திரும்ப பெற பிப்.10-ம் தேதி கடைசி நாள் ஆகும்.

மனு தாக்கல் நாளை தொடங்க உள்ள நிலையில், ஈரோடு மாநகராட்சி அலுவலகத்தில் அதற்கான ஏற்பாடுகள் தீவிரமாக நடந்து வருகின்றன. வேட்புமனுக்கள், முன்மொழிவு படிவம் உள்ளிட்டவை தேர்தல் ஆணையத்தில் இருந்து ஈரோடு மாநகராட்சி அலுவலகத்துக்கு வந்துள்ளன.

தேர்தல் நடத்தும் அலுவலரும், மாநகராட்சி ஆணையருமான சிவகுமாரின் அறையில், வேட்புமனு தாக்கல் நடக்க உள்ளது. மனுதாக்கல் தொடர்பாக பல்வேறு கட்டுப்பாடுகள் விதிக்கப்பட்டுள்ளன. இதுகுறித்து தேர்தல் நடத்தும் அலுவலர் சிவகுமார் கூறியதாவது:

ஈரோடு மாநகராட்சி அலுவலகத்தில் வேட்புமனு தாக்கலுக்கு தேவையான ஏற்பாடுகள் செய்யப்பட்டு வருகின்றன. மனு தாக்கல் செய்ய வேட்பாளருடன் 4 பேர் மட்டுமே வரவேண்டும். 3 கார்களுக்கு மட்டுமே அனுமதி உள்ளது. மனு தாக்கல் செய்யும் இடத்துக்கு 100 மீட்டருக்கு முன்பே கார்களை நிறுத்த வேண்டும்.

வேட்புமனுக்களை காலை 11 மணி முதல் மாலை 3 மணி வரை தாக்கல் செய்யலாம். மனு தாக்கல் செய்யும் பொது வேட்பாளர்கள் ரூ.10 ஆயிரமும், எஸ்.சி., எஸ்.டி. பிரிவினர் ரூ.5 ஆயிரமும் டெபாசிட் செலுத்த வேண்டும். இவ்வாறு அவர் கூறினார்.

ஈரோடு கிழக்கு தொகுதியில் போட்டியிட திமுக கூட்டணியில் காங்கிரஸுக்கு வாய்ப்பு அளிக்கப்பட்டுள்ளது. மறைந்த திருமகன் ஈவெராவின் தந்தையான தமிழககாங்கிரஸ் முன்னாள் தலைவர் ஈவிகேஎஸ் இளங்கோவன், காங்கிரஸ் சார்பில் போட்டியிடுகிறார்.

பிரதான எதிர்க்கட்சியான அதிமுக சார்பில் பழனிசாமி மற்றும் ஓ.பன்னீர்செல்வம் அணியினர் தனித்தனியே தேர்தல் பணிக்குழுவை அறிவித்துள்ள நிலையில், வேட்பாளர் தேர்வு குறித்தும் தீவிர ஆலோசனை நடத்தி வருகின்றனர்.

இத்தேர்தலில் பாஜக வேட்பாளர் போட்டியிட்டால் அவருக்கு ஆதரவு அளிப்பதாக கூட்டணி தலைவர்களான ஓ.பன்னீர்செல்வம், ஏ.சி.சண்முகம், ஜான் பாண்டியன், ரவி பச்சமுத்து ஆகியோர் அறிவித்துள்ளனர். இதனால், தேர்தலில் போட்டியிடுவது குறித்து பாஜகவும் ஆலோசித்து வருகிறது.

தேமுதிக சார்பில் எஸ்.ஆனந்த், அமமுக சார்பில் சிவபிரசாந்த் ஆகியோர் போட்டியிடுகின்றனர்.

இந்நிலையில், நாம் தமிழர் கட்சி சார்பில் மேனகா நவநீதன் போட்டியிடுவதாக அக்கட்சியின் தலைமை ஒருங்கிணைப்பாளர் சீமான் நேற்று அறிவித்தார்.

‘‘காங்கிரஸ் வேட்பாளர் ஈவிகேஎஸ் இளங்கோவன் பிப்.3-ம் தேதி பகல் 12 மணிக்கு வேட்புமனு தாக்கல் செய்ய உள்ளார். அவருக்கு ஆதரவாக பிரச்சாரம் செய்ய முதல்வர் ஸ்டாலின் ஈரோடு வர உள்ளார். முதல்வர் வரும் தேதி பின்னர் அறிவிக்கப்படும். அமைச்சர் உதயநிதி ஸ்டாலின், கனிமொழி எம்.பி., உள்ளிட்டோரும் பிரச்சாரம் செய்ய உள்ளனர். தோழமைக் கட்சி தலைவர்கள் கூட்டம் பிப்.1-ம் தேதி நடக்க உள்ளது’’ என்று ஈரோட்டில் அமைச்சர் கே.என்.நேரு நேற்று தெரிவித்தார்.

35 இடங்களில் வாகன சோதனை

இதற்கிடையில், வாக்காளர்களுக்கு பணம், பரிசுப் பொருட்கள் கொடுப்பதை தடுக்கும் வகையில், 3 பறக்கும் படைகள், 3 நிலை கண்காணிப்பு குழுக்கள் அமைக்கப்பட்டுள்ளன. இக்குழுவினர் சுழற்சி முறையில் 24 மணி நேரமும் தீவிர கண்காணிப்பில் ஈடுபட்டுள்ளனர்.

ஈரோடு கிழக்கு தொகுதிக்கு உட்பட்ட 35 இடங்களில் போலீஸார் தீவிர வாகன சோதனையில் ஈடுபட்டு வருகின்றனர். ஏற்கெனவே 2 நிரந்தர சோதனைச்சாவடிகள் உள்ள நிலையில், தேர்தல் பணிக்காக 10 தற்காலிக சோதனைச் சாவடிகள் அமைக்கப்பட்டுள்ளன.

FOLLOW US

தவறவிடாதீர்!

Sign up to receive our newsletter in your inbox every day!

WRITE A COMMENT
 
x