Published : 30 Jan 2023 06:30 AM
Last Updated : 30 Jan 2023 06:30 AM
சென்னை: ஈரோடு கிழக்குத் தொகுதி காங்கிரஸ் எம்எல்ஏ திருமகன் ஈவெரா மறைவைத் தொடர்ந்து, அந்த தொகுதிக்கு இடைத்தேர்தல் அறிவிக்கப்பட்டுள்ளது. திமுக கூட்டணியில் காங்கிரஸ் வேட்பாளர் ஈவிகேஎஸ்.இளங்கோவன் போட்டியிடுகிறார். அவருக்கு ஆதரவாக காங்கிரஸ் மற்றும் திமுகவினர் தேர்தல் பணிகளை தீவிரமாக மேற்கொண்டு வருகின்றனர்.
பிரதான எதிர்க்கட்சியான அதிமுகவில் முன்னாள் அமைச்சர் கே.ஏ.செங்கோட்டையன் தலைமையில் தேர்தல் பணிக்குழுவை அமைத்திருந்தாலும், இன்னும் வேட்பாளரை அறிவிக்கவில்லை.
கட்சியின் ஆட்சிமன்றக்குழு கூடி, விருப்ப மனு கொடுத்தவர்களில், மக்கள் செல்வாக்கு கொண்டவேட்பாளர் குறித்து ஆய்வுசெய்து,விரைவில் வேட்பாளர் அறிவிக்கப்படுவார் என்று முன்னாள் அமைச்சர் டி.ஜெயக்குமார் தெரிவித்துள்ளார்.
அதேநேரத்தில், கூட்டணிக் கட்சியான பாஜகவிடம் அதிமுக ஆதரவு கோரியிருந்த போதிலும், தனது நிலைப்பாட்டை அக்கட்சி இன்னும் தெரிவிக்கவில்லை.
தமிழகத்தில் பிரதான எதிர்க்கட்சியாக பாஜகதான் செயல்பட்டு வருகிறது என்று அக்கட்சித் தலைவர்கள் கூறிவரும் நிலையில், இந்த தேர்தலில் பாஜக சார்பில் நிச்சயம் வேட்பாளரை நிறுத்த வேண்டும் என்று கட்சி நிர்வாகிகள் வலியுறுத்தி வருகின்றனர்.
ஆனால், மாநிலத் தலைவர் அண்ணாமலை, ‘‘அதிமுக கூட்டணியில் அதிமுகதான் பெரிய கட்சி. அக்கட்சி போட்டியிட்டால்தான் சரியாக இருக்கும்" என்று கருத்தை தெரிவித்துள்ளார். எனினும், கட்சியின் டெல்லி தலைமை, இன்னும் தங்களது இறுதி நிலைப்பாட்டை அறிவிக்கவில்லை.
இதற்கிடையில், அதிமுக சார்பில் வேட்பாளரை நிறுத்த உள்ளதாகவும், பாஜக போட்டியிட்டால் அக்கட்சிக்கு ஆதரவு அளிப்போம்என்றும் முன்னாள் முதல்வர் ஓ.பன்னீர்செல்வம் அறிவித்துள்ளார். மேலும், 118 பேர் கொண்ட தேர்தல் பணிக்குழுவையும் அவர் அமைத்துள்ளார்.
அதிமுக சார்பில் பழனிசாமி தரப்பிலும், ஓ.பன்னீர்செல்வம் தரப்பிலும் வேட்பாளர்களை நிறுத்தினால் இரட்டை இல்லை சின்னம்கிடைப்பதில் சிக்கல் ஏற்படும் என்பதால், இரட்டை இலை சின்னத்தை தங்கள் வேட்பாளருக்கு ஒதுக்க தேர்தல் ஆணையத்துக்கு உத்தரவிடக் கோரி, உச்ச நீதிமன்றத்தில் பழனிசாமி தரப்பில் இன்று முறையிடப்பட உள்ளது.
இந்நிலையில், பாஜக தனதுநிலைப்பாட்டை விரைவாகத் தெரிவிக்குமாறு பழனிசாமி தரப்பில் அழுத்தம் கொடுக்கப்பட்டு வருவதாகவும் தகவல் வெளியாகியுள்ளது. இந்த சூழலில், நாளை(ஜன.31) நடைபெறும் கட்சி நிர்வாகிகள் கூட்டத்தில் முடிவெடுத்து, தங்களது நிலைப்பாட்டை அறிவிக்க உள்ளதாக பாஜக நிர்வாகிகள், பழனிசாமியிடம் தெரிவித்துள்ளனர்.
ஒற்றைத் தலைமை இருந்தால்தான் கட்சியை சிறப்பாக வழிநடத்த முடியும் என்று கூறி வரும்பழனிசாமி, கடந்த ஜூலை மாதம்கட்சிப் பொதுக்குழுக் கூட்டத்தைக் கூட்டினார். அதில், முன்னாள் முதல்வர் ஜெயலலிதாவுக்கு வழங்கப்பட்ட நிரந்தப் பொதுச் செயலாளர் பதவியை நீக்கி, மீண்டும் ஒற்றைத் தலைமையின் கீழ் கட்சியைக் கொண்டுவரும் வகையில் பொதுச் செயலாளர் பதவியை மீண்டும் உருவாக்கினார். மேலும், அவரே இடைக்காலப் பொதுச் செயலாளராக பொறுப்பேற்றுக் கொண்டார்.
ஆனால், பொதுக்குழு செல்லாது என்று அறிவிக்கக் கோரி பன்னீர்செல்வம் தரப்பு உச்ச நீதிமன்றத்தில் தொடர்ந்த வழக்கில், விரைவில் தீர்ப்பு வெளியாக உள்ளது.
அதேநேரத்தில், கட்சியின் 50ஆண்டுகால வரலாற்றில், 31ஆண்டுகள் தமிழகத்தை ஆட்சிசெய்த அதிமுகவை ஒற்றைத் தலைமையின் கீழ் கொண்டு வந்ததாகக் கூறும் பழனிசாமியால், இடைத்தேர்தல் வேட்பாளரைக்கூட அறிவிக்க முடியவில்லை. இது தொண்டர்களிடையே அதிருப்தியை ஏற்படுத்தியுள்ளது.
எனவே, பாஜகவைப் பொருட்படுத்தாது, ஜெயலலிதாபோல அதிரடியாக வேட்பாளரை அறிவித்து,தேர்தலுக்குத் தயாராக வேண்டும் என்பதே அதிமுக தொண்டர்களின் விருப்பமாக உள்ளது.
Sign up to receive our newsletter in your inbox every day!
WRITE A COMMENT