Published : 29 Jan 2023 11:38 PM
Last Updated : 29 Jan 2023 11:38 PM
சென்னை: காவல் துறை உதவி ஆய்வாளர் துப்பாக்கியால் சுட்டதில் பாதிக்கப்பட்ட ஒடிசா மாநில சுகாதாரத்துறை அமைச்சர் நபா கிஷோர் தாஸ் உயிரிழந்தார். அவரது மறைவுக்கு தமிழக முதல்வர் ஸ்டாலின் தனது இரங்கலை தெரிவித்துள்ளார்.
“ஒடிசா மாநில மக்கள் நல்வாழ்வுத்துறை அமைச்சர் நபா தாஸ் அவர்களின் மறைவால் கடும் அதிர்ச்சியும், வேதனையும் அடைந்தேன். அவரது குடும்பத்தினர், உறவினர்கள் மற்றும் ஒடிசா முதலமைச்சர் நவீன் பட்நாயக் ஆகியோருக்கு எனது ஆழ்ந்த இரங்கலைத் தெரிவித்துக் கொள்கிறேன்” என முதல்வர் ஸ்டாலின் தெரிவித்துள்ளார்.
அமைச்சர் நபா கிஷோர் தாஸ், ஜார்சுகுடா மாவட்டம், பிரஜாராஜ் நகர் பகுதியில் நடைபெற இருந்த நிகழ்ச்சி ஒன்றில் கலந்து கொள்வதற்காக சென்றிருந்தார். அவர் காரைவிட்டு இறங்கியபோது அங்கு பாதுகாப்பு பணியில் இருந்த உதவி காவல் ஆய்வளர் கோபால் தாஸ் அமைச்சரின் மார்பை குறிவைத்து துப்பாக்கியால் சுட்டார். நான்கு முதல் ஐந்து முறை அவர் துப்பாக்கியால் சுட்டதை அடுத்து, அமைச்சர் நபா கிஷோர் தாஸ் சரிந்து கீழே விழுந்தார்.
தொடர்ந்து ஜார்சுகுடா மாவட்ட தலைமை மருத்துவமனையில் அனுமதிக்கப்பட்ட அமைச்சர் நபா கிஷோர் தாஸ், மேல் சிகிச்சைக்காக புவனேஷ்வருக்கு கொண்டு செல்லப்பட்டார். உயிருக்கு ஆபத்தான நிலையில் அவருக்கு சிகிச்சை அளிக்கப்பட்ட நிலையில் அவர் உயிரிழந்தார்.
Sign up to receive our newsletter in your inbox every day!
WRITE A COMMENT