Published : 29 Jan 2023 04:01 PM
Last Updated : 29 Jan 2023 04:01 PM
சென்னை: மருத்துவத் துறையில் தன்னிறைவு பெற்ற மாநிலமாக தமிழ்நாடு விளங்கிக் கொண்டு இருக்கிறது என்று தமிழக முதல்வர் மு.க.ஸ்டாலின் தெரிவித்துள்ளார்.
காது - மூக்கு - தொண்டை - தலை - கழுத்து மருத்துவ அறிவியல் மாநாடு சென்னையில் இன்று( ஞாயிற்றுக்கிழமை ) நடைபெற்றது. இந்த கூட்டத்தில் கலந்துகொண்டு தமிழக முதல்வர் மு.க.ஸ்டாலின் பேசியது: "காது - மூக்கு - தொண்டை - தலை - கழுத்து மருத்துவ அறிவியல் மாநாட்டில் கலந்துகொண்டு உரையாற்றக்கூடிய வாய்ப்பைப் பெற்றமைக்கு நான் மகிழ்ச்சி அடைகிறேன். இந்த வாய்ப்பை எனக்கு உருவாக்கித் தந்திருக்கக்கூடிய டாக்டர் மோகன் காமேஸ்வரனுக்கும் அவருக்குத் துணைநின்று இந்த மாநாட்டை நடத்திக் கொண்டிருக்கக்கூடிய அன்பர்கள் அனைவருக்கும் நான் முதலில் என்னுடைய நன்றியைத் தெரிவித்துக் கொள்ள விரும்புகிறேன்.
சில நாட்களுக்கு முன்பு துபாயில் நடைபெற்ற உலக ENT பேரவைக் கூட்டத்தில், உலகெங்கிலும் இருந்து பத்து தலைசிறந்த மருத்துவர்களுக்கு உயரிய தங்கப் பதக்கம் வழங்கப்பட்டு கவுரவிக்கப்பட்டிருக்கிறது. அந்தப் பத்துப் பேரிலும் ஆசிய கண்டத்தில் இருந்து அந்தப் பெருமைமிகு பன்னாட்டு விருதுக்குத் தேர்வான ஒரே மருத்துவர் யாரென்று கேட்டால், நமது மோகன் காமேஸ்வரன்தான். உரையைத் தொடங்குவதற்கு முன்னால், தமிழ்நாட்டினுடைய முதலமைச்சர் என்ற முறையில், தமிழ்நாடு மக்கள் சார்பிலே, தமிழன் என்கிற அந்த உணர்வோடு அவருக்கு என்னுடைய வாழ்த்துகளை நான் தெரிவித்துக் கொள்ள விரும்புகிறேன்.
இந்த மாநாடு முழுக்க முழுக்க தமிழில் நடைபெற இருக்கிறது என்பது, முதல் மகிழ்ச்சியாக அமைந்திருக்கிறது. பொதுவாக இதுபோன்ற மாநாடுகள் ஆங்கிலத்தில்தான் நடக்கும். அதுவும் கோட்-சூட் அணிந்துகொண்டு தான் வருவார்கள். ஆனால், இந்த மாநாட்டில் அதிலும் குறிப்பாக இந்த மாநாட்டை நடத்தக்கூடிய மோகன் காமேஸ்வரன் எப்படி இருக்கிறார் என்று பார்க்கிறீர்கள், வேட்டி, சட்டையோடு வந்திருக்கிறார். நான் இந்த அரங்கத்தை உற்றுப் பார்க்கிறேன். பாதிப் பேருக்கு மேல் வேட்டி - சட்டையோடுதான் வந்திருக்கிறீர்கள். இதுபோன்ற மாநாடுகள் எல்லாம் ஒரு பெரிய ஸ்டார் ஹோட்டலில், பெரிய அரங்குகளில்தான் நடக்கும். ஆனால் இந்த மாநாடு முதல்முறையாக முத்தமிழ்ப் பேரவையில் நடக்கிறது.
மருத்துவத்தில் மட்டுமல்ல, தமிழ் மீதும் நம்முடைய மோகன் காமேஸ்வரனுக்கு இருக்கக்கூடிய அளவில்லாத பற்றின் அடையாளமாகத்தான், இந்த நிகழ்ச்சி முத்தமிழ்ப் பேரவையில் நடந்து கொண்டிருக்கிறது. அதுவும் மோகன் காமேஸ்வரன் உள்ளிட்ட மருத்துவர்கள் எல்லாம் ஒன்று சேர்ந்து இந்த நிகழ்ச்சியைச் சிறப்போடு நடத்திக் கொண்டிருக்கிறீர்கள்.
காதுகேளாத - வாய் பேச முடியாத குழந்தைகளுக்கான 'காக்லீயர் அறுவைச் சிகிச்சையை' இலவசமாக அளிக்கும் திட்டம் தமிழ்நாட்டில் நடைமுறைப்படுத்தப்பட மருத்துவர் மோகன் காமேஸ்வரன்தான் காரணம். அன்றைக்கு முதல்வராக இருந்த கருணாநிதியிடம் இது குறித்து விளக்கமாக எடுத்துச்சொல்லி அந்த திட்டத்தை நடைமுறைப்படுத்த வைத்தவர் மோகன்.
கலைஞர் பெறாத எத்தனையோ பிள்ளைகளில் மோகனும் ஒருவர் என்று சொல்லிக் கொள்வதில் நான் பெருமைப்படுகிறேன். எனவே என்னுடைய சகோதரர் டாக்டர் மோகன் நடத்தும் இந்த மாநாட்டில் கலந்துகொள்வதில் நான் மிகுந்த மகிழ்ச்சி அடைகிறேன். பொதுவாக மருத்துவ மாநாடுகளில் உலகப் புகழ்பெற்ற மருத்துவர்களின் பொன்மொழிகளை அச்சிட்டு இருப்பார்கள். ஆனால், நம்முடைய மோகன் காமேஸ்வரன், உலகப் பொதுமறையாக இருக்கக் கூடிய திருக்குறளை வெளியிட்டு இருக்கிறார். செல்வத்துள் செல்வம் செவிச் செல்வம், நுணங்கிய கேள்வியர், எனைத்தானும் நல்லவை கேட்க, கேட்பினும் கேளாத் தகையவே, செவிக்குணவில்லாத போது- போன்ற அருமையான திருக்குறள்களை அழைப்பிதழில் அவர் பயன்படுத்தி இருக்கிறார்.
தாய்மொழியில் இந்த மாநாடு நடத்தப்படுவது மிகமிக மிகப் பொருத்தமாக அமைந்திருக்கிறது. நிர்வாகத்தில் தமிழ், ஆட்சியில் தமிழ், பள்ளிகளில் தமிழ்,கல்லூரிகளில் தமிழ், நீதிமன்றத்தில் தமிழ், கோயில்களில் தமிழ், இசையில் தமிழ் - என 'எங்கும் தமிழ் - எதிலும் தமிழ்'. பேரறிஞர் அண்ணா - முத்தமிழறிஞர் கலைஞர் வழியில் தமிழுக்கு முக்கியத்துவம் தரக்கூடிய அரசாக, முக்கியத்துவம் தருவதை வலியுறுத்தும் அரசாக நமது அரசு செயல்பட்டுக் கொண்டிருக்கிறது.
அண்மையில் கூட மருத்துவ நூல்களை தமிழில் மொழிபெயர்த்து அரசின் சார்பில் நாங்கள் வெளியிட்டு இருக்கிறோம். தொழில் படிப்புகள் அனைத்தும் தாய்மொழியில் படிக்க வழிவகை செய்ய அனைத்து நூல்களையும் தமிழில் மொழிபெயர்த்து வெளியிடும் பணியையும் தொடங்கி இருக்கிறோம். மருத்துவம் என்பது எளிமையானதாக - புதுமையானதாக - அதே நேரத்தில் அதிக செலவு இல்லாததாகவும் அமைய வேண்டும். அது குறித்து இந்த மாநாடு அதிகம் சிந்திக்க வேண்டும் என்று நான் கேட்டுக் கொள்கிறேன்'' என முதல்வர் பேசினார்.
Sign up to receive our newsletter in your inbox every day!
WRITE A COMMENT