Published : 29 Jan 2023 04:42 AM
Last Updated : 29 Jan 2023 04:42 AM

பழநி முருகன் கோயிலில் ஆகம விதிப்படியே மண்டல பூஜை - நீதிமன்றத்தில் அறநிலையத் துறை தகவல்

சென்னை: பழனி முருகன் கோயிலில் தைப்பூசத் திருவிழாவால் எந்த தடையும் இல்லாமல் ஆகம விதிப்படியே 48 நாட்கள் மண்டலபூஜை நடைபெறுவதாக சென்னை உயர் நீதிமன்றத்தில் இந்து சமய அறநிலையத் துறை தெரிவித்துள்ளது.

முன்னதாக சென்னை, மயிலாப்பூரைச் சேர்ந்த டி.ஆர்.ரமேஷ் என்பவர் சென்னை உயர் நீதிமன்றத்தில் அவசர வழக்கு ஒன்றை தொடர்ந்திருந்தார். அவர்தாக்கல் செய்த மனுவில், “கும்பாபிஷேகம் நடைபெற்ற பழனி முருகன் கோயிலில் 48 நாட்கள் மண்டல பூஜை பெயரளவிலேயே நடைபெறு கிறது. ஆகம விதிப்படி நடைபெறவில்லை.

தைப்பூச திருவிழா: தைப்பூச திருவிழா நடைபெறு வதால் மண்டல பூஜை தடைபட வாய்ப்புள்ளது. எனவே ஆகம விதிப்படி மண்டல பூஜை நடைபெறும் வகையில் உத்தரவு பிறப்பிக்க வேண்டும்” என கூறப்பட்டிருந்தது.

இந்த வழக்கு உயர் நீதிமன்ற பொறுப்பு தலைமை நீதிபதி டி.ராஜா, நீதிபதி பரத சக்கரவர்த்தி ஆகியோர் முன்பு அவசர வழக்காக நடைபெற்றது.

அப்போது மனுதாரர் தரப்பில் வழக்கறிஞர் வள்ளியப்பன் ஆஜராகி வாதாடினார்.

இதைத்தொடர்ந்து இந்து சமய அறநிலையத் துறை சார்பில் ஆஜரான அரசு தலைமை வழக்கறிஞர் ஆர்.சண்முகசுந்தரம், “தைப்பூசத் திருவிழாவால் மண்டல பூஜை எந்த வகையிலும் தடைபடாது. 48 நாட்கள் மண்டல பூஜையில் 11 கலசங்கள் வைத்து பூஜை நடைபெறும். இறுதி நாளில் 1,008 சங்கு பூஜைகள் நடைபெறும். ஆகம விதிப்படியே அனைத்தும் நடைபெறுகிறது” என்றார்.

இதை பதிவு செய்து கொண்ட நீதிபதிகள் வழக்கை முடித்து வைத்து உத்தரவிட்டனர்.

FOLLOW US

தவறவிடாதீர்!

Sign up to receive our newsletter in your inbox every day!

WRITE A COMMENT
 
x