Published : 29 Jan 2023 04:01 AM
Last Updated : 29 Jan 2023 04:01 AM
சென்னை: ‘கள ஆய்வில் முதல்வர்’ என்ற புதிய திட்டத்தை தொடங்கி வைத்த முதல்வர் ஸ்டாலின், இத்திட்டத்தின்படி, முதல்கட்டமாக பிப். 1, 2-ம் தேதிகளில் வேலூர், ராணிப்பேட்டை, திருப்பத்தூர், திருவண்ணாமலை ஆகிய 4 மாவட்டங்களில் ஆய்வுப் பயணம் மேற்கொள்கிறார்.
‘‘அரசு அலுவலகங்கள், மருத்துவமனைகளை நாடிவரும் மக்கள் மனநிறைவுடன் திரும்பிச் செல்லும் வகையில் பணியாற்ற வேண்டியது அரசு ஊழியர்களின் கடமை. அதை உறுதிப்படுத்த ஆய்வு மேற்கொள்வேன்’’ என்று முதல்வர் மு.க.ஸ்டாலின் தெரிவித்திருந்தார். மேலும், கள ஆய்வுகளின் முக்கியத்துவத்தை பல்வேறு கூட்டங்களிலும் வலியுறுத்தினார்.
இந்நிலையில், ‘கள ஆய்வில் முதல்வர்’ என்ற புதிய திட்டத்தை அறிமுகப்படுத்திய முதல்வர், இத்திட்டத்தின்படி, முக்கிய அமைச்சர்கள், அரசுத் துறை செயலர்கள், துறைத் தலைவர்களுடன் ஆய்வுப் பயணம் மேற்கொள்ள உள்ளார்.
இதில், முதல்கட்டமாக பிப். 1, 2-ம் தேதிகளில் வேலூர், ராணிப்பேட்டை, திருப்பத்தூர், திருவண்ணாமலை மாவட்டங்களுக்கு சென்று, நிர்வாகப் பணிகள், வளர்ச்சி மற்றும் நலத்திட்டப் பணிகளை பார்வையிடுவதுடன், செயல்படுத்தப்பட்டு வரும் அரசுத் திட்டங்கள் குறித்து விரிவாக ஆய்வு மேற்கொள்ள உள்ளார்.
அப்போது, குடிநீர், சுகாதாரம் உள்ளிட்ட அடிப்படை வசதிகள், வருவாய் துறை மூலம் வழங்கப்படும் சேவைகள், ஊரக மேம்பாடு, நகர்ப்புற வளர்ச்சி, சாலை மேம்பாடு, வாழ்வாதாரத்தை உயர்த்தல், இளைஞர் திறன் மேம்பாடு, பொதுக் கட்டமைப்பு வசதிகள், கல்வி, மருத்துவம், குழந்தைகள் நலன், ஊட்டச்சத்து போன்ற முக்கிய துறை சார்ந்த திட்டங்களின் செயல்பாடுகள் குறித்து முதல்வர் ஆய்வு மேற்கொள்ள உள்ளார்.
ஆய்வின் முதல் நாளான பிப்.1-ம் தேதி அப்பகுதிகளில் விவசாயசங்கப் பிரதிநிதிகள், சுயஉதவிக் குழுக்கள், தொழில் அமைப்புகளின் கருத்துகளையும், கோரிக்கைகளையும் முதல்வர் கேட்டறிகிறார். அன்று மாலை, 4 மாவட்ட காவல் கண்காணிப்பாளர்கள், சரக துணை தலைவர், காவல்துறைத் தலைவர் (வடக்கு) ஆகியோருடன், சட்டம் - ஒழுங்கு நிலை குறித்து முதல்வர் ஆய்வு மேற்கொள்வார்.
மேலும், அமைச்சர்கள், திட்டங்களை செயல்படுத்தும் முக்கிய துறைகளின் செயலர்கள், துறைத் தலைவர்கள் ஆகியோருடன்4 மாவட்டங்களில் கள ஆய்வும் மேற்கொள்ள உள்ளார்.
கள ஆய்வில் கிடைக்கும் தகவல்களின் அடிப்படையில், திட்டச் செயல்பாடுகள் குறித்து பிப். 2-ம் தேதி நடைபெறும் ஆய்வுக் கூட்டத்தில் ஆலோசனை நடத்தப்பட உள்ளது. இதில், தலைமைச் செயலர், துறைகளின் செயலர்கள், துறைத் தலைவர்கள் மற்றும் மாவட்ட ஆட்சியர் உள்ளிட்ட அதிகாரிகள் பங்கேற்க உள்ளனர் என்று தமிழக அரசு வெளியிட்ட செய்திக்குறிப்பில் தெரிவிக்கப்பட்டுள்ளது.
அமைச்சர் துரைமுருகன் ஆய்வு: இதற்கிடையே, முதல்வர் வேலூர் வருவதையொட்டி, மாவட்ட நிர்வாகம் சார்பில் இதற்கான ஏற்பாடுகள் நடந்து வருகின்றன. சிறப்பான பாதுகாப்பு ஏற்பாடுகளும் செய்யப்பட்டுள்ளன. முதல்வரின் பயணத் திட்டம் குறித்து கேட்டதற்கு, உயர் அதிகாரிகள் கூறியதாவது:
முதல்வர் ஸ்டாலின் பிப்.1-ம் தேதி காலை வேலூருக்கு வருகிறார். காட்பாடி அரசினர் ஆண்கள் மேல்நிலைப் பள்ளியில் நடைபெறும் நிகழ்ச்சியில் சுமார் ரூ.700 கோடி மதிப்பில் பள்ளிக்கல்வி துறை சார்பில் கட்டப்படும் கட்டிடங்களுக்கு அடிக்கல் நாட்டுகிறார்.
மாலை 5 மணி அளவில் விஐடி பல்கலை.யில் நடைபெறும் நிகழ்ச்சியில் மாணவர் விடுதி, ஆராய்ச்சி பூங்கா ஆகிய கட்டிடங்களை திறந்து வைக்கிறார்.
அன்று இரவு வேலூர் சரக காவல் துறை அதிகாரிகளுடன் சட்டம் - ஒழுங்கு குறித்து ஆய்வு மேற்கொள்கிறார்.
பிப்.2-ம் தேதி வேலூர் மாவட்ட ஆட்சியர் அலுவலகத்தில் வேலூர், திருப்பத்தூர், ராணிப்பேட்டை, திருவண்ணாமலை ஆகிய 4 மாவட்ட ஆட்சியர்களுடன் அரசின் பல்வேறு திட்டங்கள் குறித்து ஆய்வு செய்கிறார். வேலூர் மண்டல அளவிலான ஆய்வுக் கூட்டத்தில் முக்கிய அரசுத் துறைகளின் செயலர்கள் பங்கேற்கின்றனர். மதிய ஓய்வுக்கு பிறகு முதல்வர் சென்னை திரும்புகிறார். இவ்வாறு அதிகாரிகள் தெரிவித்தனர்.
இந்நிலையில், காட்பாடி அரசினர் ஆண்கள் மேல்நிலைப் பள்ளி நிகழ்ச்சியில் முதல்வர் பங்கேற்பதையொட்டி, நீர்வளத் துறை அமைச்சர் துரைமுருகன் நேற்று ஆய்வு மேற்கொண்டார். இதில் மாவட்ட ஆட்சியர் குமாரவேல் பாண்டியன், கதிர் ஆனந்த் எம்.பி., நந்தகுமார் எம்எல்ஏ, மாநகராட்சி துணை மேயர் சுனில்குமார் உள்ளிட்டோர் பங்கேற்றனர்.
Sign up to receive our newsletter in your inbox every day!
WRITE A COMMENT