Published : 29 Dec 2016 09:58 AM
Last Updated : 29 Dec 2016 09:58 AM
மோட்டார், பம்ப்செட்கள் உற்பத்தி யில் நாட்டிலேயே இரண்டாவது இடம் வகிக்கும் கோவையில் ‘மூலப்பொருள் வங்கி (raw material bank)’ உருவாக்குவதன் மூலம், மீண்டும் முதலிடத்தைப் பெற உதவுவதுடன், ஏராளமான தொழிலாளர்களுக்கு வேலை வாய்ப்பும் உருவாக்க முடியும் என்கின்றனர் இந்த தொழிலில் ஈடுபட்டுள்ள சிறு, குறு உற்பத்தியாளர்கள்.
மோட்டார், பம்ப்செட்கள் தொடக்கத்தில் இத்தாலி, ஜெர்மன் உள்ளிட்ட நாடுகளில் இருந்து இறக்குமதி செய்யப்பட்டன.
1938-ல் கோவையிலேயே இவற்றைத் தயாரிக்கத் தொடங்கினர். ஆரம்பத்தில் பெரிய பண்ணையாளர்கள் மட்டுமே கிணற்றுக்கு மோட்டாரை உபயோ கித்தனர். பின்னர், சாதாரண விவசாயிகளும் பயன்படுத்தத் தொடங்கினர். நிலத்தடி நீர்மட்டம் குறையத் தொடங்கியவுடன், ஆழ்குழாய்க் கிணறுகள் அமைக் கப்பட்டன. அப்போது, மோட்டார், பம்ப்செட்களின் தேவை அதிகரிக்கத் தொடங்கியது. 1978-ம் ஆண்டுக்குப் பின்னர் மோட்டாரின் தேவை பெரிதும் அதிகரித்தது.
2 லட்சம் தொழிலாளர்கள்
கோவையில் தயாரிக்கப்பட்ட மோட்டார், பம்ப்செட்கள் நாடு முழுவதும் விற்பனையாகின. அரை ஹெச்.பி. முதல் 10 ஹெச்.பி. வரையிலான மோட்டார்களைத் தயாரிக்கும் சிறு, குறு தொழில் நிறுவனங்கள் கோவையில் 3 ஆயிரத்துக்கும் மேல் உள்ளன. ரூ.2 ஆயிரம் முதல் ரூ.50 ஆயிரம் வரையில் இவை விற்பனையாகின. இந்த தொழிலைச் சார்ந்து 15 ஆயிரம் சிறு நிறுவனங்கள் உள்ளன. இவற்றில் 2 லட்சத்துக்கும் மேற்பட்ட தொழிலாளர்கள் பணியாற்றுகின்றனர்.
கடந்த 5 ஆண்டுகளுக்கும் மேலாக பல்வேறு பிரச்சினைகளில் மோட்டார், பம்ப்செட் தொழில் சிக்கித் தவிக்கிறது. இது குறித்து கோவை பம்ப்செட் மற்றும் உதிரிபாகங்கள் தயாரிப்பாளர்கள் சங்கத் தலைவர் கே.மணிராஜ் ‘தி இந்து’விடம் கூறியதாவது: மோட்டார், பம்ப்செட்களைப் பொறுத்தவரை டிசம்பர் முதல் மே மாதம் வரைதான் சீசன் உள்ளது. ஒரு காலத்தில் நாட்டில் தயாரான மொத்த பம்ப்செட் உற்பத்தியில் 65 சதவீதம் கோவையில்தான் தயாராகின. ஆனால், கடந்த சில ஆண்டுகளில் இந்த அளவு குறைந்துவிட்டது. சுமார் 25 சதவீதம் உற்பத்தி பாதிக்கப்பட்டதால், இந்த தொழிலில் குஜராத் மாநிலம் முன்னிலை பெற்றுவிட்டது.
விலை உயர்வு
மோட்டார், பம்ப்செட்களைத் தயாரிக்கும் மூலப் பொருட்களில் 70 சதவீதம் வடமாநிலங்களில் இருந்துதான் வர வேண்டும். கடந்த சில ஆண்டுகளாக இவற்றின் விலை கடுமையாக உயர்ந்துவிட்டது. அண்மையில் சுமார் 20 சதவீத அளவுக்கு மூலப் பொருட்களின் விலை அதிகரித்துள்ளது.
மணிராஜ்
தொழிலாளர்களுக்கான சம் பள உயர்வு, மின் கட்டண உயர்வு உள்ளிட்டவற்றாலும், கடும் போட்டி யாலும் இத்தொழில் மிகுந்த நெருக் கடியை சந்தித்துக் கொண்டிருக் கிறது. சுமார் 500 சிறு, குறு தொழில் நிறுவனங்கள் மூடப்பட்டு விட்டன. இதனால் உற்பத்தி பாதிக்கப்பட்டுள்ளதுடன், ஏராள மான தொழிலாளர்களும் வேலை வாய்ப்பை இழந்து வருகின்றனர்.
எனவே, இந்த தொழிலை நசிவில் இருந்து காக்க அரசு உதவ வேண்டும். காப்பர் வயர்கள், ஸ்டீல் ராடு, குழாய்கள், கேபிள் உள்ளிட்ட மூலப் பொருட்கள் எளிதில் கிடைக்கும் வகையில் அரசு சார்பில் கோவையில் மூலப் பொருள் வங்கியைத் தொடங்க வேண்டும். மூலப் பொருட்களின் விலையைக் கட்டுப்படுத்துவது, மின் கட்டணத்தைக் குறைப்பது, புதிதாக தொழில் தொடங்க வங்கிகளில் குறைந்த வட்டியில் கடனுதவி வழங்குவது, கடன் பெறும் நடைமுறைகளை எளிதாக்குவது உள்ளிட்ட நடவடிக்கைகளும் இந்த தொழிலைப் பாதுகாக்கும்.
அரசு நிறுவனங்களில்..
குடிநீர் வடிகால் வாரியம், உள்ளாட்சி அமைப்புகள் உள்ளிட்ட அரசுத் துறைகளுக்குத் தேவையான மோட்டார், பம்ப்செட்களை சிறு, குறு உற்பத்தியாளர்களிடம் இருந்து வாங்க வேண்டுமென உத்தரவிட வேண்டும். சிறு உற்பத்தியாளர்கள் இணைந்து, பொருட்களை ஏற்றுமதி செய்ய வழிகாட்ட வேண்டும். இதன் மூலம் இத்தொழிலில் முன்னிலை பெறுவதுடன், புதிய தொழில்முனைவோரையும் உருவாக்க முடியும் என்றார்.
Sign up to receive our newsletter in your inbox every day!
WRITE A COMMENT