Published : 28 Jan 2023 11:55 PM
Last Updated : 28 Jan 2023 11:55 PM
சேலம்: சேலம் மாவட்டம், ஆத்தூர் அருகே கூலமேட்டில் நேற்று நடந்த ஜல்லிக்கட்டு போட்டியில் சீறிபாய்ந்த 600 காளைகளை, 300 மாடுபிடி வீரர்கள் போட்டி போட்டுக் கொண்டு, சிலிர்த்தெழுந்து அடக்கி காட்டி, பரிசுகளை வென்றனர். மாடுபிடி வீரர்களால் அடக்க முடியாத காளைகளின் உரிமையாளர்களுக்கு பரிசுகள் வழங்கப்பட்டது.
சேலம் மாவட்டம், ஆத்தூர் அருகே உள்ள கூலமேட்டில் ஜல்லிக்கட்டு போட்டி நடந்தது. ஜல்லிக்கட்டு போட்டியை சேலம் ஆட்சியர் கார்மேகம் கொடி அசைத்து துவக்கி வைத்தார். முன்னதாக ஜல்லிக்கட்டு போட்டியில் பங்கேற்ற வீரர்கள் விதிமுறைகளை கடைபிடிப்பதாக உறுதி மொழி ஏற்றுக்கொண்டனர். கூலமேடு ஜல்லிக்கட்டு விழாவில் சேலம் மாவட்டம் மற்றும் நாமக்கல், கரூர், கள்ளக்குறிச்சி, பெரம்பலூர், புதுக்கோட்டை, திண்டுக்கல், மதுரை உள்ளிட்ட பல்வேறு மாவட்டங்களில் இருந்து காங்கேயம் காளை, உம்மனசேரி காளை, புலிசாரா காளை, தேனி மறை காளை, ஆலம்பாடி காளை, பர்கூர் மலை மாடு, அந்தூர் மாடு உள்பட பல வகையான 600 ஜல்லிக்கட்டு காளைகள் கலந்துகொண்டன.
போட்டி ஆரம்பித்த போது, முதலில் உள்ளூர் கோயில் காளையை அவிழ்த்துவிடப்பட்டதும், கூடியிருந்த பார்வையாளர்கள் அக்காளையை நோக்கி கையெடுத்து கும்பிட்டு வழிபட்டனர். தொடர்ந்து ஜல்லிக்கட்டு போட்டியில் கலந்துகொண்ட ஒவ்வொரு காளைக்கும் மூக்காணாங்கயிறு அறுத்து விடப்பட்டு வாடிவாசல் வழியாக திறந்துவிடப்பட்டது. ஜல்லிக்கட்டு காளைகளை அடக்கிட 300 மாடுபிடி வீரர்கள் களம் இறக்கிவிடப்பட்டனர். 6 சுற்றுகளாக பிரிக்கப்பட்டு, ஒரு சுற்றுக்கு 50 மாடுபிடி வீரர்கள் களத்தில் இறங்கினர். மூர்க்கத்துடன் சீறிபாய்ந்து வந்த காளைகளை போட்டிபோட்டுக் கொண்டு, சிலிர்த்தெழுந்து மாடுபிடி வீரர்கள் அடக்கி பரிசுகளை வென்றனர். காளைகளை அடக்கிய மாடுபிடி வீரர்களுக்கு, விழாக்குழு சார்பில் பீரோ, கட்டில், சைக்கிள், ஃபேன், குக்கர், வெள்ளி காசு உள்ளிட்ட பரிசுகள் வழங்கப்பட்டது.
மாடுபிடி வீரர்களால் அடக்க முடியாத காளைகளுக்கு, அதன் உரிமையாளர்களுக்கு பரிசுகள் வழங்கப்பட்டது. ஜல்லிக்கட்டு போட்டியில் பங்கேற்ற ஒரு மாடுபிடி வீரர் படுகாயம், அடைந்து மருத்துவ சிகிச்சை வழங்கப்பட்டு வருகிறது. கூலமேடு ஜல்லிக்கட்டு போட்டியை முன்னிட்டு, சேலம் எஸ்பி சிவக்குமார் தலைமையில் பலத்த போலீஸ் பாதுகாப்பு ஏற்பாடு செய்யப்பட்டது. ஜல்லிக்கட்டு போட்டியை கூலமேடு, ஆத்தூர், வாழப்பாடி, தம்மம்பட்டி, சேலம் உள்ளிட்ட பல்வேறு ஊர்களில் இருந்து திரளான பொதுமக்கள் பார்வையிட்டு கண்டு ரசித்தனர்.
Sign up to receive our newsletter in your inbox every day!
WRITE A COMMENT