Published : 28 Jan 2023 06:23 PM
Last Updated : 28 Jan 2023 06:23 PM

“தமிழ்நாடு பெயரை உள்நோக்கத்துடன் திரித்து வெளியிட்ட மோடி அரசு மன்னிப்பு கேட்க வேண்டும்” - சீமான்

சீமான் | கோப்புப் படம்

சென்னை: “தமிழ்நாடு என்ற பெயரை உள்நோக்கத்துடன் திரித்து வெளியிட்ட மோடி அரசு, தமிழ்நாட்டு மக்களிடம் மன்னிப்பு கேட்க வேண்டும்” என்று நாம் தமிழர் கட்சியின் தலைமை ஒருங்கிணைப்பாளர் சீமான் வலியுறுத்தியுள்ளார்.

இது குறித்து அவர் வெளியிட்டுள்ள அறிக்கையில், "குடியரசு நாள் அணிவகுப்பில் பங்கேற்ற பல்வேறு மாநிலங்களின் அணிவகுப்பு ஊர்திகளில் சிறப்பானதைத் தேர்ந்தெடுப்பதற்கான மத்திய அரசின் இணையதளத்தில் ‘TAMIL NADU’ என்ற பெயர் ‘TAMIL NAIDU’ என்று வேண்டுமென்றே திரித்து வெளியிடப்பட்டிருப்பது வன்மையான கண்டனத்திற்குரியது.

ஆளுநர் பதவிக்கான தமது பொறுப்பையும், கடமையையும் காற்றில் பறக்கவிட்டு, இந்துத்துவ சித்தாந்தத்துடன் தமிழ்நாடு பாஜகவின் மாநில தலைவர் போலச் செயல்பட்டுவரும் ஆர்.என்.ரவி அண்மையில் தமிழ்நாடு என்று கூறக்கூடாது, தமிழகம் என்றே அழைக்க வேண்டுமென்று கூறி வேண்டுமென்றே பிரச்சனையை எழுப்பி தமிழர்களின் உணர்வுகளை சீண்டிப்பார்த்தார். மிகக் கடுமையான எதிர்ப்பு எழுந்தவுடன் அப்படிக் கூறவில்லை என்று பின்வாங்கினார்.

தற்போது மத்திய அரசின் mygov.in இணையதளத்தில் ‘TAMIL NADU’ என்ற பெயர் ‘TAMIL NAIDU’ என்று எழுதப்பட்டிருப்பது அதன் தொடர் நிகழ்வேயாகும். இது கவனக்குறைவால் நடைபெற்றது என்றோ எழுத்துப்பிழை என்றோ கருதுவதற்குச் சிறிதும் வாய்ப்பில்லை. முழுக்க முழுக்க தமிழர்களையும், தமிழ்நாட்டையும் இழிவுபடுத்த வேண்டும் என்ற உள்நோக்கத்துடன் வேண்டுமென்றே திட்டமிட்டு எழுதப்பட்டதேயாகும்.

இதன் மூலம் தமிழர்கள் மீது மதவாத பாஜக அரசு எந்த அளவுக்குப் பகைமையும், வெறுப்புணர்வும் கொண்டுள்ளது என்பது வெட்ட வெளிச்சமாகியுள்ளது. தமிழ் மொழியின் பெருமை, தமிழர் பண்பாட்டின் பெருமை என்றெல்லாம் பிரதமர் மோடி பேசுவது வெற்று அரசியல் நாடகம் என்பதும் அம்பலமாகியுள்ளது.

ஆகவே, தமிழ்நாடு என்ற பெயரை இணையதளத்தில் ‘TAMIL NAIDU’ என்று உள்நோக்கத்துடன் திட்டமிட்டுத் திரித்து வெளியிட்டுள்ளதற்கு மத்திய ஆளும் பாஜக அரசு, தமிழ்நாட்டு மக்களிடம் மன்னிப்பு கேட்க வேண்டுமென்றும், உடனடியாக அதனைத் திருத்தி ‘TAMIL NADU’ என்று பிழையின்றி வெளியிட வேண்டுமென்றும் நாம் தமிழர் கட்சி சார்பாக வலியுறுத்துகிறேன்" என்று அந்த அறிக்கையில் கூறப்பட்டுள்ளது.

FOLLOW US

தவறவிடாதீர்!

Sign up to receive our newsletter in your inbox every day!

WRITE A COMMENT
 
x