Published : 28 Jan 2023 11:31 AM
Last Updated : 28 Jan 2023 11:31 AM
சென்னை: மோடி - பிபிசி ஆவணப்படத்தை பார்த்த மாணவர்களை கைது செய்வது கருத்துரிமைக்கு எதிரானது என்று தமிழக வாழ்வுரிமை கட்சி தலைவர் வேல்முருகன் தெரிவித்துள்ளார்.
இது குறித்து அவர் வெளியிட்டுள்ள அறிக்கையில், "இங்கிலாந்தின் பிரபல தனியார் ஊடக நிறுவனமான பிபிசி, இந்தியாவில் 2002-ம் ஆண்டு நடந்த குஜராத் கலவரம் தொடர்பான விசாரணை நடத்தி ஆவணப்படத்தை வெளியிட்டு இருந்தது. 2002-ம் ஆண்டு பிப்ரவரி 27-ம் தேதி கோத்ரா ரயில் எரிப்பு சம்பவத்தில் 59 பேர் உயிரிழந்தனர். இதை அடிப்படையாக வைத்து தான் குஜராத்தில் கலவரம் வெடித்து.
இந்தக் கலவரத்தின் முடிவில் 790 இஸ்லாமியர்கள், 254 இந்துக்கள் கொல்லப்பட்டதாகவும், 223 பேர் காணாமல் போனதாகவும், 2,500 பேர் படுகாயமடைந்த தாகவும் 2005-ம் ஆண்டு நாடாளுமன்றத்தில், மத்திய அரசு கூறியதை தான் ஆவணப்படத்தில் கூறியிருக்கிறது பிபிசி.
இந்தியா - மோடிக்கான கேள்விகள் என்னும் தலைப்பில் வெளியாகி இருக்கும் பிபிசி-யின் ஆவணப்படத்தை மத்திய பாஜக அரசு, ஐ.டி. சட்டத்தின் பிரிவுகளை தவறாக பயன்படுத்தி தடை செய்துள்ளது.
மத்திய அரசின் குறுக்கு புத்தியை கண்டிப்பதோடு மட்டுமின்றி, தடை செய்யப்பட்ட படத்தை நாடு முழுவதும் சமூக வலைதளங்கள் வழியாக மக்களிடம் கொண்டு சேர்க்கும் வகையில், சமூக செயற்பாட்டாளர்களும், ஜனநாயக அமைப்புகளும் ஆவணப்படத்தை திரையிட்டு வருகின்றனர்.
இதன் ஒரு பகுதியாக, சென்னை பல்கலைக்கழகத்தில் மாணவர் அமைப்பினர் ஆவணப்படம் திரையிட்டுள்ளனர். இதனை பொருத்துக்கொள்ளாத பல்கலைக்கழக நிர்வாகம், ஆவணப்படம் திரையிடுவதை தடுத்துள்ளது. அதோடு, மாணவர்கள் ஆவணப்பட திரையிடல் செய்வதை காவல்துறை தடுத்ததுடன், செல்போனில் படம் பார்த்ததற்காக அவர்களை கைது செய்துள்ளது. ஆவணப்படம் திரையிடல் என்பது அடிப்படை உரிமையாகும்.
ஆனால், அந்த அடிப்படை உரிமைக்கு எதிராக, பல்கலைக்கழக நிர்வாகமும், காவல்துறையும் செயல்பட்டிருப்பது ஏற்றுக்கொள்ள முடியாது. பல்கலைக்கழகம், காவல்துறையின் இத்தகைய போக்கை, தமிழக வாழ்வுரிமைக் கட்சி வன்மையாக கண்டிக்கிறது. எனவே, 'இந்தியா-மோடிக்கான கேள்விகள்' எனும் குஜராத் படுகொலை குறித்தான பிபிசி ஊடக நிறுவனத்தின் ஆவணப்படத்தை தமிழ்நாடு முழுவதும் கொண்டு சேர்க்கவும், கைது செய்யப்பட்ட மாணவர்களை விடுவிக்கவும் தமிழ்நாடு அரசு முன்வர வேண்டும் என தமிழக வாழ்வுரிமைக் கட்சி கேட்டுக் கொள்கிறது" இவ்வாறு அதில் கூறப்பட்டுள்ளது.
Sign up to receive our newsletter in your inbox every day!
WRITE A COMMENT
Loading comments...