Published : 28 Jan 2023 04:48 AM
Last Updated : 28 Jan 2023 04:48 AM
சென்னை: கடலூரில் நாளை சனாதன இந்து தர்ம எழுச்சி பேரணி நடத்த இந்து மக்கள் கட்சிக்கு அனுமதி மறுத்துள்ள சென்னை உயர் நீதிமன்றம், மாநில மாநாட்டை மட்டும் நிபந்தனைகளுக்கு உட்பட்டு நடத்திக்கொள்ள அனுமதியளித்து உத்தரவிட்டுள்ளது.
இந்து மக்கள் கட்சி சார்பில் ஜன.28-ம் தேதி (இன்று) கடலூரில் வள்ளலாரின் 200-வது பிறந்த தின நிகழ்ச்சியும், 29-ம் தேதி சனாதன இந்து தர்ம எழுச்சிப் பேரணியும், மாலையில் மாநில மாநாடும் நடத்த திட்டமிடப்பட்டுள்ளது. இந்தநிகழ்ச்சிகளுக்கு அனுமதி கோரி இந்து மக்கள் கட்சியின் கடலூர் மாவட்டத் தலைவர் ஆர்.எஸ்.தேவா அளித்த மனுவை பரிசீலித்த போலீஸார், பேரணி மற்றும் மாநாடு நடத்த அனுமதி மறுத்தனர்.
இந்த உத்தரவை ரத்து செய்து பேரணி மற்றும் மாநாடு நடத்த அனுமதி அளிக்கக் கோரி சென்னை உயர் நீதிமன்றத்தில் ஆர்.எஸ்.தேவா மனு தாக்கல் செய்திருந்தார். இந்த மனு, நீதிபதி ஜி.சந்திரசேகரன் முன்பாக நேற்று விசாரணைக்கு வந்தது.
சட்டம் - ஒழுங்கு பிரச்சினை: அப்போது காவல்துறை தரப்பில் அரசு குற்றவியல் வழக்கறிஞர் எஸ்.சந்தோஷ் ஆஜராகி, ‘‘பேரணி நடத்த அனுமதி கோரும் ஆரிய வைசிய திருமண மண்டபம் முதல் மஞ்சக்குப்பம் திடல் வரையிலான சாலையில் பேருந்து மற்றும் ரயில் நிலையங்கள் உள்ளதால் போக்குவரத்து நெரிசல் இருக்கும். அரசு மருத்துவமனையும் உள்ளதால் ஆம்புலன்ஸ் அடிக்கடி சென்று வருவதில் இடையூறு ஏற்படும். பிற மதவழிபாட்டு தலங்கள் வழியாக பேரணி செல்லும்போது கோஷம் எழுப்பப்பட்டால் அதன்மூலம் மத நல்லிணக்கம் மற்றும் பொது அமைதி பாதிக்கப்பட்டு, சட்டம் - ஒழுங்கு பிரச்சினை ஏற்படும்சூழல் உள்ளது. அதன்காரணமாகவே பேரணி மற்றும் மாநில மாநாட்டுக்கு அனுமதி மறுக்கப்பட்டது’’ என வாதிட்டார்.
அதையடுத்து நீதிபதி, ‘‘பேரணி நடத்த அனுமதி மறுக்கப்படுகிறது. அதேநேரம் மாநில மாநாட்டை ஜன.29 (நாளை) மாலை 3 மணி முதல் இரவு 10 மணிக்குள் சட்டம்- ஒழுங்குக்கு எந்த பாதகமும் இல்லாமல் நிபந்தனைகளுக்கு உட்பட்டு நடத்திக் கொள்ளலாம்’’ என அனுமதி அளித்து உத்தரவிட்டுள்ளார்.
Sign up to receive our newsletter in your inbox every day!
WRITE A COMMENT